Tuesday, December 21, 2021

 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா-நள்ளிரவுத் திருப்பலி





கிறிஸ்து பிறப்புப் பெருவிழா

இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.

நள்ளிரவுத் திருப்பலி வாசகங்கள்

I. எசாயா 9:2-7
II. தீத்து 2:11-14
III. லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:

 
நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,
இருள் சூழ்ந்தப் பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்கள் வரவு நல்வரவாகுக.
திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?

துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம். நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!


வாசக முன்னுரை-

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 96: 1-2,2-3,11-12,13

பதிலுரை: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; -பல்லவி
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.  பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்றத் தம்மையே ஒப்படைத்த தியாகத்தை வியந்துக் கூறும் திருத்தூதா் பவுலடியின் வார்த்தைகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. உன்னதத்தில்‌ கடவுளுக்கு மாட்சியும்‌ உலகில்‌ கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதியையும்‌ தரும்‌ இம்மாபெரும்‌ மகிழ்ச்சி தரும்‌ கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நம்‌ உள்ளங்களுக்கும்‌ அகில உலகத்திற்கும்‌ உண்மையான மகிழ்ச்சியையும்‌ அமைதியையும்‌ தர வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

2. நாம்‌ இறைபற்றின்மையையும்‌ உலகுசார்ந்து தீய நாட்டங்களையும்‌ மறுத்து, கட்டுப்பாட்டுடனும்‌ நேர்மையுடனும்‌ இறைப்பற்றுடனும்‌ இம்மையில்‌ வாழ பயிற்சி பெற வேண்டுமென மாட்டுத்‌ தொழுவத்தில்‌ பிறந்த மாமன்னரே, எங்கள்‌ இயேசுவே, நாங்கள்‌ எங்கள்‌ வாழ்வில்‌ போலிகளை விட்டுவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு  உண்மையுடன்‌ வாழ வரந்தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

3. இயேசுவின்‌ பிறப்பால்‌ உமது அருளை எங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள எங்கள்‌ அன்புத்‌ தந்தையே இறைவா, உமது அன்புக்கும்‌, அருளுக்கும்‌ உகந்த
கருவிகளாக எம்மை ஆக்கிடவேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

4. திருத்தந்தை பிரான்சிஸ்‌, ஆயர்கள்‌, குருக்கள்‌, இருபால்‌ துறவிகள்‌, பொதுநிலையினர்‌ அனைவரும்‌ இறையரசை பரப்ப தங்கள்‌ வார்த்தையாலும்‌, வாழ்க்கையாலும்‌ சாட்சியம்‌ பகர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

5. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழையைப்‌ போல்‌ பிறந்த இயேசுவே, உமது பிறப்பின்‌ மகிழ்ச்சியை எங்களில்‌ உள்ள ஏழைக்‌ குடும்பங்களோடும்‌
குழந்தைகளோடும்‌ பகிர்ந்து கொள்ள வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌. ‌


இன்றைய வாசகங்கள்

விடியற்காலத் திருப்பலி


I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20


பகல் திருப்பலி


I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.லூக்கா 2:15-20


திருப்பலி முன்னுரை:



விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் (வாடைக்காற்று வீசும் இளம்காலைப் பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!

இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றிப் பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோருப் பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். இப்படிச் செய்தால் எல்லா இருளும் இடிந்து இயேசுவின் பிறப்பு விடியல் ஒளிவானில் நிகழுமல்லவா? இன்பத்தைப் பங்கு போட்டால் அது  இரட்டிப்பாக மாறும் என்பதைக் கண்டு  கொள்வீா்கள். இதை நீங்கள் ஏழைகளுக்குச் செய்யவில்லை இயேசுவுக்கே செய்தீர்கள் என்பதை நினைத்து மகிழ்வீர்கள்!

இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத் திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமாறக் கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.



முதல் வாசக முன்னுரை:-


(விடியற்காலத் திருப்பலி)

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக் கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.



பகல் திருப்பலி:-

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளைக் காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படிச் சொல்லிருப்பரோ! ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதைக் காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.



இரண்டாம் வாசக முன்னுரை:-


(விடியற்காலத் திருப்பலி)

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்தப் புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


(பகல் திருப்பலி)

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள் தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

www.anbinmadal.org 

 

Print Friendly and PDF


மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்!  

 


No comments:

Post a Comment