Wednesday, December 22, 2021

திருக்குடும்பப் பெருவிழா

திருக்குடும்பப் பெருவிழா

 


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2,21-24
லூக்கா 2:41-52

திருப்பலி முன்னுரை:

குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.

கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்தி செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சேர்ப்பது அல்ல. மாறாகப் பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பது தான் குடும்பம். இதற்கு அடிப்படைத் தேவை ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரியப் பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத் திருக்குடும்பப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகம் ஒன்று சாமுவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னா ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக் கொண்ட தன்  மகன் சாமுவேலை இறைவனுக்கு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கின்றார்.  தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் மகனுடன் காணிக்கைகளுடன் இறைசன்னதிக்கு வந்து நன்றியோடு சாமுவேலை ஆண்டவருக்கே அர்ப்பணித்தார் என்ற இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்:


திபா 128: 1-2,3,4-5
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன்  செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய  இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!  எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து,  எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப்போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும், தொற்று நோயினாலும், மழையினாலும் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! பெற்றோர்கள் தங்களது வாழ்க்கை முறையால் தங்களது குழந்தைகளுக்கு உன்னதமான ஆசிரியர்களாகத் திகழ்ந்திடவும், குழந்தைகள் பெற்றோர்க்கு உரிய மதிப்பையும் அன்பையும் வழங்கி அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழவும் வரமருளு வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

  www.anbinmadal.org

                                                                     Print Friendly and PDF

4 comments:

  1. on special occasions kindly upload the liturgy a week ahead it will be of a great use

    ReplyDelete
    Replies
    1. Yes ,pls i go with the above comment

      Delete
  2. Father, thankyou so much for being so kind and generous in sharing the introduction and prayer of the faithful every Sundays.
    For the upcoming new year midnightmass pls forward the introduction and prayer of the faithful .
    And also for the three wisemen feast.
    Every week by Wednesday if is being sent would be much grateful.
    Thankyou

    ReplyDelete
  3. Pls forward introduction and prayer of the faithful for tomorrow's new year midnight mass ...

    ReplyDelete