பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு
'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' |
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எரேமியா 38:4-6, 8-10
எபிரேயர் 12:1-4
லூக்கா 12:49-53
திருப்பலி முன்னுரை:
படைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.
'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.
இயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும்! தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
எரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்து தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..
பதிலுரைப்பாடல்
ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
திருப்பாடல்40: 1. 2. 3. 17
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி
அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி
நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:
1. அன்பின் திருவுருவே எம் இறைவா! உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வை இறைவாக்கினர் எரேமியாவைப் போல, சான்றுப் பகர்ந்து வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. தலைவர்களுக்கெல்லாம் தலைவராகிய எம் இறைவா! எம் நாட்டில் நிலவும், வன்முறை, கொலை, கொள்ளை, இனம், மொழி, சாதி, சமயம் போன்றவைகளால் காயப்பட்டுக் கண்ணீரோடு நிற்கும், எம் உடன்பிறவாச் சகோதரச் சகோதரிகள் பெரியோர் ஆகிய அனைவருக்கும் பாதுகாப்போடு வாழவும் தனி மனிதச் சுதந்திரத்தோடு வாழவும் தேவையான ஞானத்தை எம நாட்டு அரசியல் தலைவர்களுக்குத் தந்த நேரியப் பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. இரக்கத்தின் சிகரமே எம் இறைவா! ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்வர்கள், வறுமையில் வாடுபவர்கள், விதவைகள், ஆகிய அனைவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், பாதுகாப்பற்றச் சூழலில் உள்ள இவர்களை அன்போடு பாதுகாத்து, அவர்களின் வாழ்வு வளம்பெற, நாங்கள் அனைவரும் தோள் கொடுத்து உதவிட, தொண்டுள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. விண்ணரசின் திறவுகோலைச் சொந்தமாகிப் கொண்ட குழந்தைகளைப் போல் நாங்களும் எங்கள் தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் குழந்தைகளின் மனநிலையோடு அன்பு, மகிழ்ச்சி, மன்னித்தல், விட்டுக்கொடுத்து வாழத் தேவையான உமது ஆவியின் அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. இன்றைய நவீன உலகில் எம் இளைஞர், இளம்பெண்கள் எதிர்கொள்ளும் வேலையிலாத் திண்டாட்டம், திருமணத் தடைகள், சமூகத்தில் இளம்பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் இவை அனைத்திலிருந்தும், முழுமையான விடுதலைப் பெற்று ஒளியின் மக்களாகத் துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment