பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17
லூக்கா 14:25-33
திருப்பலி முன்னுரை:
இறைஞானத்தைத் தேடி இன்று ஆலயம் நுழைந்துள்ள இறைஇயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் நன்றியோடும், மகிழ்ச்சியோடும் பங்குக்கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம்.
சாலமோன் கடவுளிடம் முதன்மையாகக் கேட்ட ஞானமே! யூதர்களை ஆண்டுவழி நடத்த அவர் விரும்பியதுவும் அதுவே. இறைத்திட்டத்தை அறிந்து கொள்ளக் கடவுளிடம் ஞானத்தையும், தூயஆவியாரையும் பெற வேண்டும் என்கிறது முதல் வாசகம். அன்பு, மன்னிப்பு, அடுத்தவரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உயரிய கிறிஸ்தவப் பண்புகளை இரண்டாம் வாசகம் எடுத்துக்கூறுகிறது.
இயேசுவின் சீடராய் மாறிட எல்லாவற்றையும் ஏன் தன் உயிரையும் விடத் தயாராக இருப்பவரே தன் சீடனாக இருக்க முடியும், தன் சிலுவையைச் சுமப்பவர்கள் மட்டுமே என் சீடராக இருக்க முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார் இயேசு. ஞானத்தைத் தேடுபவர்களாய், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஏற்றவர்களாய், தன் துன்பங்களை முழுமனதுடன் ஏற்று இயேசுவின் சீடராய் வாழக்கூடிய நல்ல சூழலைத் தர வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
” நான் உம் அடியான்: வலுவற்ற மனிதன்: குறுகிய வாழ்வினன்: நீதித்தீர்ப்பும் திருச்சட்டமும் பற்றிச் சிற்றறிவு படைத்தவன்” என்று தன்னிலை உணர்ந்து அதே வேளையில் யூதர்களின் முரட்டுத் தனத்தையும் உணர்ந்துக் கடவுளிடம் ஆசிரியர் கேட்ட ஒரு வேண்டுதல் என்னவாகயிருக்கும்? அது தான் இறைவனின் அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும் என்பதே. சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.
பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
`மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17 எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. அனைவரும் மீட்படைய விரும்பும் எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஆகிய உமது திட்டத்தையும், உமது திருவுளத்தையும் உய்த்துணர்ந்து திருஅவையை திறம்பட நடத்திடத் தேவையான ஞானத்தையும், தூய ஆவியாரின் அருளும் பெற்றிடவும், உவர்ப்பற்றுப் போகாத நல்ல உப்பாக அடுத்திருப்பவரை வளப்படும் மக்களாய் வாழ்ந்திடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. புனிதரின் பேரின்பமாகிய எம் இறைவா! எம்வாழ்நாளில் எம்கண்முன் உலாவி வந்த அருட்பணியாளரான அன்னை தெரசாள் அவர்களை உமது புனிதர்களின் திருக்கூட்டத்தில் இணைத்து எங்களுக்காய் நல்வரங்கள் வேண்டிட நீர் செய்த நன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் அவரின் தொண்டுள்ளத்தை பெற்று அவரைப் போல் என்றும் தொண்டாற்றி உம்மை எம் உள்ளத்தில் வைத்துக் கொள்ள அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எல்லாரும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக உள்ள எம் ஆசிரியர் பெருமக்களை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் அருள் வாழ்வில் சிறந்து விளங்கிடவும், சிறந்த நல்சான்றோர்களை இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வழங்கிட தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! நீர் அருட்பொழிவு செய்து தேர்ந்துக் கொண்ட எம் இளம் குருக்களை உம் சிறகுகளின் அரவணைப்பில் வைத்துக் காத்தருள வேண்டுகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் கடந்த சில நாள்களில் அனேக இளம்குருக்கள் நோயினாலும், விபத்துகளினாலும் மரித்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை விரைவாய் நிறைப்பிடவும், உமது பணிகளில் என்றும் நிலைத்திருந்து இறையரசை அறிவிக்க வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கை, எம்குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வு, அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment