Wednesday, February 22, 2023

தவக்காலம் முதல் ஞாயிறு 26.02.2023

தவக்காலம்  முதல் ஞாயிறு  26.02.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

தொடக்கநூல் 2:7-9,3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11


திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவை தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும், ஆணிவேரும் ஆகும். இவற்றைத் தான் நாம் நாள்தோறும் திருப்பலியில் நினைவுகூர்ந்து கொண்டாடினாலும் ஆண்டுக்கு ஒரு முறை சிந்தித்த சீர்தூக்கிப் பார்க்க நம்மைத் திருச்சபை அழைக்கிறது தவக்காலத்தின் வழியாக...

இவ்வாண்டின் முதல் தவக்கால ஞாயிறைச் சிறப்பிக்க இத்திருப்பலியில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தவக்காலம் என்றவுடன் ஏதோ கவலையோடும், வருத்தத்தோடும் காட்சி கொடுப்பது என்பதல்ல. மாறான இதுவே நம்பிக்கையின் காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சியின் காலம். ஒப்புரவின் நல்ல காலம். நிலைவாழ்வுக்கு உரமிடும் காலம். மனித வாழ்வில் சோதனை என்பது ஒரு தொடர்கதை. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது மானிடரின் உள்ளத்தை வருடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அந்தச் சோதனைகளையும் வென்று சாதனை படைத்த நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி. இயேசு செய்த அரும்பெரும் சாதனை. 


ஆதிப்பெற்றோரின் அடிமைத்தனத்தால் பாவ வாழ்வில் நாமும் பாவநிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோம். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வருகையில் பாவநிலையிலிருந்து வெற்றிப் பெற்ற புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். இறைவார்த்தை இயேசுவுக்குச் சோதனைகளை வெல்ல உறுதுணையாக இருந்தது. எனவே நாமும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இல்லையேல் “உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது” என்ற பரிசேயர்களைப் பார்த்துச் சொன்ன இயேசு நம்மையும் பார்த்துச் சொல்லுமுன் விழிப்புடன் செயல்படுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

தொடக்கநூலில் இறைவன் உலகைப் படைத்து அவை அனைத்தும் நல்லது என்று கண்டு மானிடரைப் படைத்தார். தனது ஆவியை ஊதித் தன் சாயலாக உருவாக்கினார். ஆனால் சாத்தனின் சூழ்ச்சியில் சிக்குண்ட மானிடம் இறைவனின் கட்டளையை மீறியதால் தன் முதல் பாவத்தால் சாவை ஏற்றுக்கொண்டது. சாத்தனின் சோதனையில் தோல்வியடைந்தவன் தனக்குத் தானே கேடு விளைவித்தான்.இன்றைய முதல்வாசகத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் இறைவனின் வார்த்தைகளைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

பல்லவி : ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல்கள்: 51: 1-4. 10-12,15
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். பல்லவி
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார் வையில் தீயது செய்தேன். பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

முதல் மனிதன் ஆதாம் செய்தப் பாவத்தால் சாவைக் கொணர்ந்தான். ஆயினும் கடவுளின் கட்டளைகளை மீறிப் பாவம் செய்யாதவரும் சாவுக்குள்ளானார்கள். ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல் ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். இவ்வாறு நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் பவுலடியார் அழைக்கின்றார். கேட்போம் கவனமுடன்...

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! தவம், செபம் பிறரன்பு என்ற இம்மூன்றுச் செயல்களால் உம் திருஅவை கிறிஸ்துவின் பாடுகளின் வெற்றியை இவ்வுலகமக்களுக்கு அறிவிக்கவும், சொல்வதைச் செயலில் காட்டி எம்விசுவாசம் உயிருள்ளதாக இருக்கவும், எம்பிறரன்புச் சேவையால் உலகமாந்தர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு புதுவாழ்வு அடைந்திட வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இன்றைய நாளில் தங்களின் கல்வித் தேர்வுகளை ஏழுதிக் கொண்டிருக்கும் எங்கள் அன்புப் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். கருத்தாய் படித்ததை நினைவில் வைக்க ஞாபக சக்தியை அளித்தருளும். அதைச் செவ்வனே எழுத வழிகாட்டும். தேர்வு நடக்கும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பைப் பெருக்கிக் கரிசனையைக் காட்ட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இக்காலச்சூழலில் இரக்கமும், தூய்மையான உள்ளம் படைத்தோர், நீதியினிமித்தம் துன்புறுத்தப் படுவோர், இவர்கள் அனைவரும் உம் பொருட்டுத் துன்புறுத்தப்படும்போது உமது இரக்கப்பார்வையால், அடிமைதனத்திலிருந்து அன்று எம்முன்னேரை மீட்டதுபோலக் காக்கவும், இன்று உம்மை மட்டுமே நம்பிச் சரணகதியாக வரும் எம் அனைத்து மக்களையும் உமது பேராற்றலினால், இடிந்துபோன எம்வாழ்வை வென்றெடுக்கத் தேவையான உமது இரக்கப் பார்வையை எம்மீது பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

3 comments:

  1. Really useful this is

    ReplyDelete
  2. Every Mondays if you could post the mass and reading intros and prayers of the faithful.it will be of great help.especially for children and youth mass.

    ReplyDelete
  3. Kindly post this week's Sunday's mass intro and prayers of the faithful today .since the Sunday class students are conducting this Sunday service.they need to practice.

    ReplyDelete