பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு 19.02.2023
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
லேவியர் 19:1-2,17-18
1கொரிந்தியர் 3:16-23
மத்தேயு 5:38-48
திருப்பலி முன்னுரை
பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம் மனதில் அன்பை விதைக்கின்றன. இறைமகன் இயேசுவின் விழுமியமாகிய அன்பு நம் வாழ்வில் நிலைநாட்டி அவரே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் முக்கியக் கட்டளையாகிய உன்னைப் போல் உன் அயலானை நேசி. அவர் உமது எதிரியாக இருந்தாலும் அன்புச் செய். அவருக்காய் இறைவனிடம் மன்றாடு என்பதே! அதற்கான நம் வாழ்நாள் முன்னோடித் தான் மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். தன்னைச் சுட்டவனை மன்னித்துத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட அவர், அலி அஃகாவைச் சிறையில் சந்தித்து இறைமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார்.
நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது. தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைகாணச் செபிப்போம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
அன்பு வழி புனிதமும், புனிதம் வழி நிறைவும் காண வேண்டும் என நம் திருஅவை விரும்புகிறது. அநீதியை அதட்டிக் கேட்கும் அன்பும், நீதிக்குத் தோள் கொடுக்கும் அன்பும், குற்றத்தைச் சுட்டிக்காட்டும் அன்பும், அயலானின் பிரதிபலிக்கும் அன்பும் தான் ஒரு மனிதனைப் புனிதத்தின் நிறைவுக்கு அழைத்துச் செல்கிறது. நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்கிறார் இறைவன். இக்கருத்துகளை எடுத்துரைக்கும் லேவியர் நூலிலிருந்து வரும் இன்றைய முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திருப்பாடல்: 103: 1-2, 3-4, 8, 10,12-13
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
நமது இதயத்திற்குள்ளே கடவுளின் ஆவியானவர் குடி கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டு மக்களுக்குக் கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்தப் பாக்கியமே நாம் பெற்றிருக்கும் தூயஆவி. ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். இவ்வுலக ஞானம் கடவுளின் முன் மடமையே மனிதரைக் குறித்து யாரும் பெருமைப் பாராட்டலாகாது. நாம் அனைவரும் கிறிஸ்துவிற்கு உரியவர்கள் என்று திருத்தூதர் பவுலடியார் இயம்பும் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா!
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1 என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எம்திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் அன்பும் புனிதமும் நிறைந்த தூய ஆவியாரின் ஆலயமாகவும், தீமைச் செய்வோரை அன்பால் அரவணைத்து உம் அன்பின் பாதையில் வழி நடத்திச் செல்லத் தேவையான இறைஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்
2. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! மாந்தர்கள் அனைவரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதை ஒருபோதும் மறவாமல் இருக்கவும், அவ்வாலயத்தின் தூய்மை ஒருபோதும் கேடாமல் பாதுகாத்து, பகைமையை வேரறுத்து அன்பை வளர்த்திடும் இல்லமாகவும், நன்மைகளின் ஊற்றாகவும் மாறிடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! இன்றைய பதட்டமான சூழலில் தங்களின் கல்வித் தேர்வுகளை எழுதிவருபவர்களுக்கும், வரும் தேர்வுகளுக்குத் தம்மையே தயாரித்துக் கொண்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு நல்ல புரிதலையும், படித்தவற்றை மறந்திடாமல் இருக்க நல்ல ஞாபகசக்தியையும், நல்ல உடல்நிலையும் தந்துச் சிறப்பாகத் தேர்வுகள் எழுதி வெற்றிபெறத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் சகோதர பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திடவும், உறவுகள் மேன்படவும், தூய ஆவியின் கொடைகள் எம் இல்லங்களில் தங்கி எம் இல்லத்தில் உள்ள அனைவரையும் வழி நடத்திடவும், வேற்றுமைகள் ஒழிந்து, மன்னிப்பே மாண்பு என்பதை உணர்ந்து வாழ்ந்திட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
5. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! உலகில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிகழ்வுகளில் சிக்கித் தவிக்கும் சிரியா, துருக்கி நாடுகளின் மக்களின் துன்பங்களில் எல்லா நாட்டு தலைவர்களும் தங்களின் பங்களிப்பைத் தாராளமனதுடன் தந்து அவர்களின் துயர்த்துடைக்க தேவையான எல்லா உதவிகளையும் செய்ய நல்மனம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Thank you very much
ReplyDeletethank you very much
ReplyDeleteThank u somuch
ReplyDelete