பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு 12.02.2023
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
சீராக் 15:15-20
1கொரிந்தியர் 2:6-10
மத்தேயு 5:17-37
திருப்பலி முன்னுரை
பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அழைக்கின்றது. நல்லது- தீயது, நெருப்பு- நீர், வாழ்வு- சாவு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான் நமது விருப்பத்தைப் பொறுத்தது.
இயேசு திருச்சட்டத்தின் வாக்குகளைப் பற்றி வெளிப்படுத்துகின்றார். திருச்சட்டத்திலிருந்து அனைத்தும் நிறைவேறாதவரை அச்சட்டத்தின் எழுத்தோ சிறுபுள்ளியோ ஒழியாது என்று பதிவு செய்கின்றார். இறைவாக்கு நமக்கு வழங்கும் அறநெறிகளின்படி நாம் வாழ அழைப்பு விடுக்கின்றார். இதனை மறந்து மனம்போன போக்கில் வாழ்ந்து அடுத்தவரின் வாழ்வாதரத்தை அழிக்கும் இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும் வன்மையாகக் கண்டிக்கின்றார்.
இயேசுவின் நெறியோ அகமனப் பக்குவத்தைச் சார்ந்தது. நற்சிந்தனைகளுக்கும் தூய எண்ணங்களுக்கும் முக்கிவத்துவம் கொடுப்பது. ஏனென்றால் அகமனப் பக்கவத்தைப் பொறுத்தே நம் வெளிச் செயல்பாடுகள் இருக்கும் என்பதை இங்கு நன்கு உணர்த்துகின்றார் இயேசு. சுயநலமற்ற, அன்புக் கலந்த அக்கறை உணர்வோடு உண்டாகும் கோபத்தைத் தான் ஆணடவர் இயேசு பரிசேயரிடமும், ஆலயத்திலும் வெளிப்படுத்தினர். ஆகவே கோபம், பகை, வெறுப்பு இவைகளை அடியோடு ஒழிக்க முயல்வோம். மற்றவர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை மட்டும் மனதில் கொண்டு இத்திருப்பலியில் கலந்து இறையருள் நாடிடுவோம் வாரீர்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
சீராக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும், வாழ்க்கை மரபு மற்றும் நெறிமுறைகளையும் தாங்கி வருகிறது. மாந்தர்கள் முன் வாழ்வும், சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். கடவுள் மனிதர்களின் அனைத்துச் செயல்களையும் காண்கின்றார். பழைய ஏற்பாடுகளில் ஞானத்தை வெளிப்படுதும் சிறந்த நூலாகிய சீராக் ஞானநூலின் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: 119: 1-2, 4-5, 17-18, 33-34
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். . பல்லவி
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!. பல்லவி
உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி
ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
நமது வாழ்வின் வழி எளிமையானதல்ல. அது மிகக் கடினமானது. இத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்க நமக்கு இறைஞானம் வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் வெளிப்படுத்துகின்றார். மாந்தருக்கு வேண்டியது உலக ஞானம் அல்ல. இறைஞானமே! நாம் மேன்மைப் பெற வேண்டும். வாழ்வுப் பெற வேண்டும் என்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதே இறைஞானம். இறைஞானம் இறைவனை அன்புச் செய்வோருக்குத் தூய ஆவியார் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இவற்றை விளக்கம் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1 பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஒன்றிணைந்து ஒருமித்து இறைமகன் விட்டுச் சென்ற மீட்புபணியை செவ்வனே ஆற்றிட போதுமான வல்லமை இவர்களுக்குப் பொழிந்து இயேசுவின் இறையரசு மண்ணகம் கண்டிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
2. பண்பாளரே எம் இறைவா! உம் திருமகன் வாழ்ந்த காலத்தில் இறை - மனித -உறவு நன்றாக அமைந்திட சமுதாயத்திற்குள் ஊடுருவி மனிதனை மனிதனாகப் பாவிக்காது கல் நெஞ்ச யூதைனத்திற்கு பல சவால்களால் சுட்டிகாட்டி, மனித நேயம் மண்ணில் மலர்ந்திட அறச் செயல்களால் வாழ்ந்து காட்டிய வழியில் நாங்களும் அதன்படி இன்றைய சூழலில் வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.
3. எமை படைத்து ஆளும் இறைவா! எமது நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனின் மனநிலையில் மக்களை வழி நடத்தவும் சுயநலத்தையும் அதிகாரத்தின் சுயநலபிடியிலிருந்து தளர்ந்து சமத்துவ சமுதாயம் படைத்திட வேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவிசிட பல தடைக்கற்கள்! மேற்கத்திய கலாச்சாரம், மின்னணு சாதனங்கள், நவீன தொலை தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலை தடுமாறும் நிலை வளர்ந்தோங்கி உள்ளநிலையில் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கிரகித்து நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.
5. அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்துடும் நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.
please can I have the 7th Sunday திருப்பலி முன்னுரை
ReplyDeleteஏழாம் ஞாயிறு முன்னுரை போடுங்கள் சகோதரரே.. நன்றி
ReplyDeleteCan you send 7 th sunday திருப்பலி முன்னுரை
ReplyDeletePraise The Lord
ReplyDelete