Sunday, September 24, 2023

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 01.10.2023

 பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 01.10.2023




இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியேல் 18: 25-28
பிலிப்பியர் 2 :1-11
மத்தேயு 21: 28-32

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 26ஆம் ஞாயிறுத் திருப்பலியில் செயல்வீரராய் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
வாய்ச்சொல் வீரராக நாம் வாழாமல் நம் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடின்றி வாழ வேண்டும். இதுதான் கடவுளுக்குப் பிடித்த வாழ்க்கை நெறிமுறையென நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய அருள்வாக்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனின் இரக்கத்தின் மீத நம்பிக்கை வைக்கும் எந்தப் பாவியையும் இறைவன் புறக்கணிப்பதில்லை. இறைவன் ஒருபோதும் பாவி சாக வேண்டும் என்று விரும்புவதுமில்லை.
இயேசுவின் சீடர்களாக வாழ்வோம் என்ற முடிவு எடுத்துவிட்டோமென்றால் என்ன நிலை வந்தாலும் இறுதிவரை இயேசுவின் சீடராக வாழ்வதில் நிலைத்து நிற்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமேயொழிய வேற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி கடவுள் இரக்கத்தின் கடவுளாகவே வெளிப்படுத்தப்படுகிறார். இந்த உண்மை நாம் மனம் திரும்பத் தூண்டுகோலாக அமைய வேண்டும்
தீய வாழ்வை விலக்கி, மனம் மாறி நல்வாழ்வு வாழ வந்த சக்கேயு, விபச்சாரப்பெண், ஊதாரி மகனைப் போல நாமும் மனம்மாறி இறையரசின் பிள்ளைகளாக வாழ இத்திருப்பலியில் இறைவனை மன்றடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் மனமாற்றத்தை எடுத்துரைக்கின்றது. யாவேயின் கட்டளைப்படி எசேக்கியேல் இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களிடம் சென்று, அவர்கள் தங்கள் தவறான வழிகளை விட்டுவிட்டு இறைவனிடம் மனம் திரும்பி வர வேண்டும் என அறிவுறுத்துகிறார். தமது வார்த்தைக் கேட்காத இஸ்ரயேல் மக்களைக் கடவுள் அழிக்கவில்லை; மாறாக, அவர்களிடம் மிகுந்த பொறுமையைக் காட்டினார் என்று மனமாற்றத்திற்கு அழைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; பல்லவி
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

விண்ணிலிருந்து இம்மண்ணுக்கு வந்த மாபரன் இயேசு நம்மை மீட்க வந்தார். மானிட பாவம் போக்க சிலுவை மரத்தில் உயிர் துறந்தார். இவையனைத்தையும் இயேசு பிரதிபலன் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. எனவே கடவுளும் அவரை  மிகவே உயர்த்தஎப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். நான் என் பணியை எந்தவிதப் பலனையும் எதிர்பாராமல் செய்வேன் என்ற மனநிலை நம்மில் உருவாக வேண்டும் என இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இரக்கத்தையும், பேரன்பையும் தன்னகத்தே கொண்ட எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் எதையும் எதிர்பார்க்காத இயேசுகிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டு தங்கள் வாழ்விலும், ஏற்றப் பணிகளிலும் சிறந்த விளங்கத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்குற்றங்களையும், குறைகளையும் நினையாத எம் இறைவா! எம்குடும்பங்களில் உள்ள அனைவரும் தத்தம் பணிகளைச் செவ்வனே செய்யவும், அதன்மூலம் தம் வாழ்வின் நிறைவை மகிழ்வாய் பெற்று உமது சாட்சிகளால் அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் வாழ நடத்த தேவையான இரக்கத்தையும் பொறுமையையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்பு கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! அனைத்துப் பணியாளர்களும் தங்களுக்குரிய மதிப்பையும், உரிமைகள் பாதுகாப்பையும் பெறும்படியாகவும், பணிவாய்ப்பு தேடுவோர் பொது நன்மைக்குத் தங்களது பங்களிப்பை வழங்கும் வாய்ப்புப் பெறும்படியாகவும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment