Friday, November 29, 2024

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3

 திருவருகைக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3

       

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 33:14-16
தெசலோ. 3:12 - 4:2
லூக்கா 21:25-28. 34-36

திருப்பலி முன்னுரை:

இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதலாம் ஞாயிறு. இந்த ஞாயிறிலிருந்து தான் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்தைத் திருவருகைக் காலத்தோடு தொடங்குகிறோம். இது நம்பிக்கையின் ஞாயிறு. அன்று இஸ்ரயேல் மக்களைத் தளைகளிலிருந்து விடுவிக்க மெசியாப் பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப் பின் தொடக்கக் காலத்திருச்சபை இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக இம்மண்ணிலே அவதரித்த இயேசு மீண்டும் மனிதனாக மண்ணிலே பிறக்கமாட்டார். மாறாக அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக மீண்டும் வர இருக்கிறார். தேர்வு எழுதிய பின்பு அதன் முடிவுக்காகக் காத்திருக்கவேண்டும். இவ்வாறு காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால், காத்திருத்தலின் சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.

எனவே, இத்திருவருகைக் காலத்தில் தாய்த்திருச்சபை நாம் நம் ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்துக் கொண்டாடினாலும் அவரது இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார்படுத்த நம்மைத் தூண்டுகிறது. இதனை மனதில் இருத்தி இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் “யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும்” என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களக்கு நம்பிக்கைத் தந்தன. புதிய வாழ்வைத் தந்தது. விடுதலை வாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் நமக்குப் புதிய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5. 8-9. 10,14
பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
1.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;  உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.  உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி
2.ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி
3.ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;  அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “நம் ஆண்டவர் இயேசு, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!” என்று நம்மை வாழ்த்துகின்றார். நம்பிக்கையோடும், விழிப்போடும் இருந்து அவர்களின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:

1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நீதியின் ஒளியே எம் இறைவா! இன்று உலகில் நிலவும் மனிதகுலத்திற்கு எதிராகப் பயங்கரவாதம் ஒழிந்து எங்கும் அமைதி நிலவ, ஏற்றத்தாழ்வுகள் நீக்கி ஒற்றுமையுடன் வாழத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமங்களிலும் பொருள் சேதம், மனௌளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்துத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா! இளையோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்றுக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பு இறைவா வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment