பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்
1அரசர்கள் 17:10-16;
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44
திருப்பலி முன்னுரை:
இன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார். நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளத்திலிருந்து அல்லது உள்ளதையெல்லாம் தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல் உயர்த்தப்படுவார்கள்.
இந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து இதோ இரு உதாரணங்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே கடவுள் சாரிபாத்திலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார். புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசிப் பெற்றவராக (லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக உயர்த்தினார்.
இறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டு அன்பால் உள்ளத்திலிருந்து, உள்ளதையெல்லாம் கொடுத்தால் இரு ஏழைக் கைம்பெண்களும், அன்னை மரியாளும் இறைவனால் உயர்த்தப்பட்டது போல் நாமும் உயர்த்தப்பட வேண்டும். எனவே இறைவார்த்தையில் நம்பிக்கையுடன் நாம் வாழ இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே பாதிக்கப்பட்டைஸ்ரயேல் மக்கள் சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் கடவுள் கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார். தன்னைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் கடவுளின் வார்த்தைகளை நம்பினாள். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சாரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது. இறைவார்த்தை நம்மில் நிறைவேற இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.
பதிலுரைப் பாடல்
திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
அன்று மோசே இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; . இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறைத் தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார் என்று எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு அவரின் வருகைக்காகக் காத்திருப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1.எம் அன்புத் தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், பணி வாழ்வே திருஅவையின் மையம் என்னும் மனநிலை திருஅவையில் மலரவும் உம் ஆவியாரின் கொடைகளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி, கடின உழைப்பின் மூலம் எங்கள் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து உமக்குரியவர்களாகத் தேர்ந்துக் கொள்ளப்படவும், உம் பணியாளராக வாழவும் வேண்டிய வரங்களைத் தர ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருஅவைக்காக, திருஅவை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேடி, ஞானத்தை நிறைவாகப் பெற்று, தங்கள் ஆன்மீக வாழ்விலும், சமுதாயத்தில் பண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வர வேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த தூய்மை என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி, உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா! மரணத்தறுவாயில் உள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
youtube coding
Thanks for your ministry.. God bless..
ReplyDeleteI have a question: In first reading introduction, you said that Israel people lived in Zarapath. I could not find any evidence for that. Phoenicians people only lived in Zarapath. Could you please share the evidence for that.