Tuesday, November 12, 2024

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் வாரம் - ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின்  33ஆம் வாரம் - ஞாயிறு

திருப்பலி முன்னுரை

“எல்லாவற்றிற்கும்‌ முடிவு நெருங்கிவிட்டது. எனவே இறைவனிடம்‌ வேண்டுதல்‌ செய்யுமாறு கட்டுப்பாட்டோடும்‌ அறிவுத்‌ தெளிவோடும்‌ இருங்கள்‌” (1 பேது 4:7). விண்ணும்‌ மண்ணும்‌ ஒழிந்து போகும்‌ என்‌ வார்த்தைகள்‌ ஒழியவே மாட்டா என்ற இறை இயேசுவின்‌ வார்த்தைகளைக்‌ கேட்க அழைக்கப்பட்டிருக்கும்‌ அன்பு இறைமக்களே !

இன்று நாம்‌ வாழும்‌ வாழ்க்கை என்பது ஒரு பயணம்தான்‌. யாரும்‌ இவ்வுலகில்‌ நிரந்தரமாகத்‌ தங்கிவிட முடியாது. வழிப்போக்கர்‌ போல சில காலம்‌ தங்கி, பின்‌ விண்ணக வாழ்வை நோக்கிப்‌ பயணிப்பதுதான்‌ நம்‌ வாழ்வின்‌ நோக்கம்‌. விண்ணக வாழ்விற்கான ஒரு முன்னோட்டம்தான்‌ இவ்வுலக வாழ்க்கை. இன்றைய வாசகங்களும்‌ நமக்கு இறுதி நாளில்‌ நிகழவிருக்கும்‌ அடையாளங்கள்‌ பற்றி எடுத்துக்‌ கூறுகின்றன. முதல்‌ வாசகத்தில்‌, நாம்‌ இவ்வுலகில்‌ வாழும்‌ வாழ்க்கைக்கேற்பவே நமது விண்ணக வாழ்வும்‌ அமையும்‌ என்று இறைவாக்கினர்‌ தானியேல்‌ எடுத்துக்‌ கூறுகிறார்‌. ஒரு வேளை நாம்‌ பாவம்‌ செய்தாலும்‌ நம்‌ பாவங்களுக்கான கழுவாய்‌ நம்‌ இயேசுவின்‌ கல்வாரி பலியே என்பதை இரண்டாம்‌ வாசகத்தில்‌ சுட்டிக்காட்டப்படுகிறது.

இதுவரை தம்‌ துன்பங்களோடு மட்டுமே இணைக்கப்பட்டிருந்த “மானிட மகன்‌” என்ற பெயர்‌. இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌ வெற்றியுடனும்‌, மாட்சியுடனும்‌ இணைக்கப்பட்டிருக்கிறது. “மானிட மகன்‌” தம்‌ வல்லமையை வெளிப்படுத்தும்‌ இந்நிகழ்வு இயேசுவின்‌ இறுதி உரையாகப்‌ பார்க்கப்படுகிறது. இத்தகைய சவாலான நாள்களில்‌ நம்‌ உள்ளம்‌ சோர்ந்து போகாமல்‌ இருக்க, இறுதி நாள்களை எதிர்கொள்ள நாம்‌ தயாராக இருக்க வேண்டும்‌. இயேசுவின்‌ மதிப்பீடுகளான அன்பு, அமைதி, உண்மை, சகோதரத்துவம்‌ நீதி போன்றவற்றைக்‌ கடைபிடித்து வாழ்பவர்களுக்கு இறுதி காலம்‌ பற்றிய பயம்‌ இருக்காது. இயேசு காட்டும்‌ வழியில்‌ வாழும்‌ காலத்தைப்‌ பொறுப்புடன்‌ பயன்படுத்தும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ வேண்டுவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

நிறைய ஆச்சர்யங்களாலும்‌, வியப்பூட்டும்‌ நிகழ்வுகளாலும்‌, குறியீடுகளாலும்‌ நிறைந்திருக்கும்‌ தானியேல்‌ நூலில்‌ இருந்து இன்றைய முதல்‌ வாசகம்‌ எடுக்கப்பட்டிருக்கிறது. நாம்‌ வாழும்‌ காலமே நம்‌ இறுதி நாளைத்‌ தீர்மானிக்கும்‌ என்ற தானியேலின்‌ வார்த்தைகளுக்கு செவிமடுப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
1.ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

2.என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி

3.வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம்‌ வாசகமானது எபிரரயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. கடவுளின்‌ வலப்பக்கம்‌ அமர்ந்துள்ள இயேசுவின்‌ மாட்சி குறித்தும்‌ அவரே நம்‌ பாவங்களைப்‌ போக்கும்‌  வழி என்பதையும்‌ எடுத்துக்‌ கூறுகிறது. இவ்வார்த்தைகளுக்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌  

1. அனைத்தையும்‌ படைத்தாளும்‌ இறைவா ! எம்‌ திரு அவைக்காக நீர்‌ தந்த எங்கள்‌ திருத்தந்தை, ஆயர்கள்‌, அருள்பணியாளர்கள்‌, துறவிகள்‌, பொதுநிலையினர்‌ அனைவரும்‌ நீர்‌ விரும்புவதை நிறைவேற்றுவதே தங்கள்‌ பணி என்பதை உணர்ந்து எவ்விதச்‌ சூழ்நிலையிலும்‌ மன உறுதியோடு பணியாற்ற அவர்களுக்குத்‌ தேவையான ஞானத்தை அளித்துக்‌ காத்திட வேண்டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

2. அன்புத்‌ தந்தையே எம்‌ இறைவா ! ஒரே திருமுழுக்கினால்‌ உமக்குச்‌ சொந்தமான நாங்கள்‌, முழுமையான நம்பிக்கையால்‌ இணைக்கப்‌ பெற்று ஒரே குடும்பமாக, உமது அழைப்பிற்கேற்ப வாழவும்‌, உண்மைக்குச்‌ சான்று பகர்ந்து வாழவும்‌ உமது ஆவியின்‌ அருளைப்‌ பொழிய வேண்டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

3. விண்ணும்‌ மண்ணும்‌ ஒழிந்து போகும்‌, என்‌ வார்த்தைகளோ ஒரு போதும்‌ ஒழியாது என்று மொழிந்த எம்‌ இறைவா ! உம்‌ வார்த்தைதான்‌ எங்கள்‌ வாழ்விற்கு விளக்கு என்பதை உணர்ந்தவர்களாய்‌, இயேசுவின்‌ மதிப்பீடுகளைப்‌ பின்பற்றி விண்ணுலக வாழ்விற்கு எங்களைத்‌ தயார்‌ படுத்த உம்‌ அருளைப்‌ பொழிய வேண்டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

4. உண்மையின்‌ இறைவா ! எங்கள்‌ தொழில்‌ முயற்சிகளுக்கு ஆசியளித்தருளும்‌. எங்கள்‌ உழைப்பிற்கேற்ற நல்ல பலமசை யும்‌ எங்களுக்குத்‌ தேவையான வளங்களையும்‌ தந்து ஆசியளிக்க வேண்‌டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment