தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எசாயா43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8:1-11
திருப்பலி முன்னுரை:
இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஞாயிறும் ஒரு தனிப்பட்ட கருத்தை எடுத்துச் சிந்தித்து நம் அகவாழ்வை ஆராய்ந்துப் பார்க்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று மீண்டும் நம் அகவாழ்வைச் சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தவறுவது மனித இயல்பு. ஆனால் தவறுக்குப் பின் திருந்தி எழுவதுதான் மனிதனின் மாண்பு. அது தான் கிறிஸ்தவனின் பண்பு என்பதை இன்றைய இறைவாக்குகள் அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது
இயேசு இரக்கத்திலும், மன்னிப்பதிலும், அன்புச் செய்வதிலும் என்றும் மாறாதவர். இயேசு யாரையும் தீர்ப்பிடுவதில்லை. இரண்டாம் வாசகத்திலும் நான் விரும்புவது எல்லாம் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற திருத்தூதர் பவுலின் கூற்றும், முதல் வாசகத்தில் இதோ, நாம் புதியனச் செய்கிறோம் என்ற எசாயா இறைவாக்கினின் முழக்கமும், இயேசுவின் பாணியில் நாம் பிறருக்குத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்திற்கு நம்மை அழைக்கின்றது. அவரில் ஓப்புறவு கொண்டு நம்மிலே மனமாற்றம் காண இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த யூத மக்களை விடுதலைச் செய்வதாக இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்களிக்கும் இறைவன், அவர்களுக்குத் தான் எகிப்தில் செய்த அறிகுறியை நினைவுபடுத்தி, தான் இப்போது செய்வது அதனிலும் புதியது என்று தான் தரவிருக்கும் விடுதலையின் மேன்மையைச் சொல்கின்றார். எகிப்தின் அடிமைத்தனம் மிகப்பெரிய வடுவை இஸ்ரயேலரின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கலாம். 'என்னை அவன் அடிமையாக வைத்திருந்தான்' என்பதை அவர்களால் எப்படி மறக்க முடியும். ஆனால், மறந்தால்தான் இறைவனின் புதிய அற்புதங்களை இரசிக்க முடியும்.இறைவனின் புதிய செயல் என்னவென்று இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க நாம் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்:
திருப்பாடல்126: 1- 6
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவுக் கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி
உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
திருத்தூதர் பவுலடியாரைப் பொறுத்தமட்டில் ஒருகாலத்தில் முதன்மையானவையென இருந்தவை இப்போது கிறிஸ்துவை அறிந்தவுடன் கடைநிலைக்குச் சென்றுவிட்டன. 'கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் முன் இவை யாவும் குப்பை அல்லது இழப்பு'. 'கடந்ததை மறந்து விட்டு, முன்னிருப்பதைக் கண்டுகொண்டு' என்று கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குப் பவுலடியார் இங்கே பயன்படுத்தும் ஓர் உருவகம் தான், 'பந்தயத்தில் ஓடுவது.' பந்தயத்தில் ஓடுவோரின் கண்முன் இலக்கு மட்டுமே இருக்க வேண்டும். நாம் இதுவரை ஓடிவந்த டிராக் எப்படி இருந்தாலும், டிராக் மாறி வந்தாலும், இன்றுமுதல் சரியான டிராக்கில் ஒவ்வொரு அடியையும் முழுமையாக எடுத்து வைத்து வாழ்வோம். இவ்வாறு இயேசுவைப் பற்றிக் கொள்ள அழைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வசனம்:
இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. கிறிஸ்து இயேசு தன்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத், தொடர்ந்து ஓடிய பவுலடியாரைப் போலவே, உடல்நலம் தேறி வருகிற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், இறைமக்களும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாய், துடிப்புடன் செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்” என்கிற முதல் வாசக வாக்குத்தத்தங்கள், நாங்கள் வாழுகிற இக்காலத்தில், இவ்வுலகிலும், எம்நாட்டிலும் நிறைவேற வேண்டுமென்றும், அமைதியும், சமத்துவமும், நீதியும், நேர்மையும், செழித்தோங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்” என்று சொன்ன பவுலிடம் இருந்த, தொடர் முயற்சியும், அயராத உழைப்பும், தங்களது பள்ளித்தேர்வுகளைச் சந்தித்த, மற்றும் சந்திக்கவிருக்கிற மாணவச் செல்வங்களிடமும் இருந்து, அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இல்லாமை, இயலாமை, வறுமை, வேலையின்மை, சமாதானமின்மை, உடல்நலமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால், இன்னலுறும் மக்களின் வாழ்வில், “இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது” என்கிற வரிகள், மெய்ப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கத்தின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும் ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்கிற உமது வார்த்தைகளால் திடம் பெற்று, முன்பு நடந்தவற்றை மறந்து, புதுச்செயல் ஒன்றை செய்கிற உமது பேரருளை நம்பி, மனமாற்றத்தின் பாதையில் நடந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.