தவக்காலம் முதல் ஞாயிறு - ஆண்டு-3
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
இணைச் சட்டம் 26:4-10
உரோமையர் 10:8-13
லூக்கா 4:1-13
திருப்பலியின் முன்னுரை:
இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் வரவு நல்வரவு ஆகுக. வருடம் ஒரு முறை, திருஅவை இயேசுவின் பாடுகளை மனதில் சிந்தித்து நம்மை மனமாற்றத்திற்கு மீண்டுமாய் அழைக்கிறது.
இறை மனித உறவைப் புதுப்பிக்கும் காலம். இருகிப்போன இதயங்கள் அன்பில் மீண்டும் துளிர்க்கும் காலம். ஆணவமும், சுயநலங்களும் களையப்பட்டுப் புதிய வாழ்வுப் பெற அழைக்கப்படும் காலம். நாற்பது நாட்கள் என்ற காலக்கட்டம் விவிலியத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் காணலாம். இந்த நாற்பது நாட்களின் முடிவில் கிடைத்த வெற்றி அனுபவங்களை நாமும் பெற்று மகிழ அழைக்கப்படுகிறோம்.
எதற்காக இயேசு 'எங்களுக்குச் சோதனைகள் வேண்டாம்' என்று கற்பிப்பதற்குப் பதில் 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைவேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும், அன்பும் உருவான எல்லாம் வல்லக் கடவுள் ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் உள்ளத்தில் எழக்கூடியவை. இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும் - தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம்.
சாத்தனின் போராட்டங்களை வென்று வெற்றிப் பெறுவோம். இவற்றிக்குத் தேவையான இறையருளையும் சாத்தனை வெல்ல உறுதியான மனத்திடத்தையும் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:-
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் இறைவன் தமக்குச் செய்த உதவிகளை நினைத்துத் துணை நின்று கடவுளுக்கு நன்றிக் கடன் செலுத்துவதைக் காட்டுகிறது. நாடோடிகளாக புலம் பெயர்ந்த மக்கள் தாங்கள் சந்தித்த துன்பங்களின் மத்தியிலும், சிறுமைகளின் போதும் வலிய கரத்தாலும் ஒங்கிய புயத்தாலும் இறைவன் தங்களை காத்ததை நினைத்துக் கண்ணீர் சிந்தி நன்றி செலுத்துகின்றனர். இவ்வாறு இஸ்ராயேல் மக்கள் இறையருளைப் பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முதல் வாசகமான இணைச்சட்டம் நூல் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15
பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.
உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி
தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி
உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:-
நம்பிக்கை ஒற்றை வாக்கியம்தான்: 'இயேசுவே ஆண்டவர்.' பழைய ஏற்பாட்டில் இறைவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவித்து, பாலும், தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார். புதிய ஏற்பாட்டு இறைவன் பாவம் என்னும் அடிமைத்தனம் விடுத்து, மக்களைப் புதிய வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். இயேசுவில் கடவுள் இன்னும் அதிகம் நெருங்கி வருகின்றார் மனுக்குலத்தோடு. இயேசுவின் வருகை மனிதர்நடுவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் அழித்துவிடுகிறது. இவற்றை உணர்த்தும் திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த இறைவார்த்தைகளை நம்பிக்கையுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அருஞ்செயல்களாலும், தாம் தெரிந்தெடுத்த இஸ்ராயேல் இனத்தைப் பாதுகாத்து வழிநடத்திய கடவுள், அவர் தாமே தேர்ந்தெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பாதுகாத்து, பரிபூரண உடல் நலத்தையும், திருஅவையைத் திறம்பட வழிநடத்த தேவையான திடனையும் தந்திட வேண்டுமென்றும், பல்வேறு நிலைகளில் பணியாற்றும் திருஅவைத் தலைவர்களையும் இறைமக்களையும், தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தாருக்கு பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை வாக்களித்து வழிநடத்திய கடவுள், போர்களாலும், வன்முறைகளாலும், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளாலும் இன்னலுறும் இவ்வுலகையும், சிறப்பாக எம்தேசத்தையும், கனிவோடு கண்ணோக்கி, உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர்களாகவும், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்களாகவும் மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தாரென உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவோம்” என்கிற மறையுண்மையை இந்தத் தவக்காலத்தில் ஆழமாய் உணர்ந்து, அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும், அளவற்ற நலன்களைப் பொழிகிற அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், ஜெபம், தவம், நற்செயல் ஆகியவற்றில் நிலைத்திருக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்பதைப் புரிந்தவர்களாய், கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்திடவும், எம்சிந்தனை, சொல், செயல் ஆகிய அனைத்திலும் கடவுளையே மகிமைப்படுத்தும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் திகழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment