தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12
லூக்கா:- 13: 1-9
திருப்பலி முன்னுரை:
இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பு வாழ்த்துக்கள்! நம் கடவுள் இரக்கத்தின் கடவுள். தண்டனையின் இறைவன் அல்ல. மாறாக மன்னிப்பின் இறைவன். எனவே பிறர் வழியாக இறைவன் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அலட்சியம் செய்யாமல் அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார்.
இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக் கூடாது. அத்திமரத்திற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்குத் தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம். ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்தவர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம். அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டிப் பங்கேற்போம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
இன்றைய முதல்வாசகத்தில் வித்தியாசமான கடவுளை அஃதாவது உணர்வுள்ள, மக்களின் துயர்கண்டுத் துடிக்கிற கடவுளைக் காட்டுகிறது. மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப் போவதில்லை ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பங்களுக்காக. கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி
ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
`கிறிஸ்துவே அப்பாறை!' எனக் கிறிஸ்துவின் மேன்மையை முன்வைக்கின்றார் திருத்தூதர் பவுலடிகளார். இரக்கம் நிறைந்த கடவுளின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற நற்கனித் தராவிட்டால் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும் என்று எச்சரிக்கின்றார். `எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடிப் பார்த்துக்கொள்ளட்டும்!' என்று கூறும் இந்தப் பவுலடிகளாரின் அறிவுரைக்குக் கவனமுடன் செவிய்மெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வசனம்
`மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,’ என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. எரியும் முட்புதரிலிருந்து ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்று உம்மை வெளிப்படுத்திய கடவுளே, எம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலனில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிற வேளையில், அவர்களுக்குப் பூரண உடல் நலம் தரும்படியாகவும், இறைமக்களை உள்ளடக்கிய திருஅவை முழுவதுமே, நல்லாயனின் பின்னே அணிவகுக்கும் ஆடுகள்போல, எதிர்நோக்கின் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “அவர்களின் துயரங்களை நான் அறிவேன். அவர்களை விடுவிக்கவும், நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.” எனக்கூறி இஸ்ராயேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் உடனிருந்து வழிநடத்தியவரே, அமைதியிழந்து தவிக்கும் இவ்வுலகிற்கு நிலையான அமைதி தரவும், பல்வேறு இன்னல்களால் அவதியுறும் உலக நாடுகள் நல்வாழ்வை நோக்கி நகரவும், எம்தாயகமாம் இந்திய தேசமும், நீதியின் வழியில், சமத்துவம் நோக்கிப் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கிறிஸ்து என்கிற ஆன்மீகப் பாறையிலிருந்து, ஆன்மீகப் பானத்தைப் பருகியும், ஆன்மீக உணவை உண்டும் வருகிற நாங்கள் அனைவரும், தீயனவற்றில் ஆசை கொண்டு, அழிவு விளைவிக்கும் முணுமுணுப்பின் பாதையில் பயணித்த இஸ்ரயேலரைப் போல் அல்லாமல், கடவுளுக்கு உகந்தவராய் எம்வாழ்க்கைப்பயணத்தைத் தொடரவும், குறிப்பாகத் தேர்வு காலத்தில் இருக்கும் எம்குழந்தைகள் அனைவரும், உல்லாசத்தைத் துறந்து, உற்சாகமாய் உழைத்து, வெற்றி நோக்கிப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கனி கொடுக்கத் தவறினாலும், எம்மை வெட்டி வீழ்த்தாமல், விட்டுவைத்து, இன்னொரு ஆண்டையும், மற்றொரு தவக்காலத்தையும் தந்துள்ள இறைவா, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இந்த அருள் தரும் காலத்தைச் செவ்வனே செலவிட்டு, மனமாற்றத்தின் பாதையில் பயணிக்க அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ஞானத்தின் இருப்பிடமே இறைவா! தங்கள் கல்வியாண்டு இறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்க எங்கள் பிள்ளைகள் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் சிறப்பாகவும், விவேகத்துடன் செயல்பட்டு, தங்கள் உழைப்பின் வெற்றிக் கனியைச் சுவைத்திடவும், அவர்களின் அடுத்தக் கல்வியாண்டுச் சிறப்புடன் அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்…
No comments:
Post a Comment