பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எரேமியா 38:4-6, 8-10எபிரேயர் 12:1-4
லூக்கா 12:49-53
திருப்பலி முன்னுரை:
படைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.
இயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும்! தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
எரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.பதிலுரைப்பாடல்
ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.திருப்பாடல்40: 1. 2. 3. 17
1. நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி
2. அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி
3. புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி
4. நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி
இரண்டாம் முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்துத் தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன ... அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.” என்கிற நற்செய்தி வாழ்த்தொலிக்கு ஏற்ப, இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரில், நல்லாயனாம் உம்மைக்கண்டு, உம் குரலுக்குச் செவிசாய்த்து பின்தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.2. மண்ணுலகில் நீர்மூட்டவந்த அன்பெனும் நெருப்பையும், நீதியின் சுடரையும் அணைத்துவிட்டு, பகைமையின் பாதையில் பயணிக்கும் இவ்வுலகையும், உலகின் தலைவர்களையும், எம்நாட்டின் தலைவர்களையும், சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி, வாழுகிற மற்றும் ஆளுகிற, நல்லோராய் நீர் உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “நானோ எளியவன்; நீரே என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்” என்கிற திருப்பாடல் வரிகளையே, எங்கள் வேண்டுதலாக உம்முன் எழுப்பி, இன்னல்கள் நிறைந்த எம்வாழ்வில், மனம் சோர்ந்து, தளர்ந்து போகாமல், நம்பிக்கையோடு பயணிக்கவும், குறிப்பாக இளையோர் மற்றும் வலுவற்றோர், உம்மையே தங்கள் துணைவகராகக் கொண்டு, துணிவோடு முன்னேற அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிச் செல்லவும், எங்கள் தனிப்பட்ட அழைத்தல் மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, எங்களுக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில், மன உறுதியோடு ஓடிடத் தேவையான, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், மனவுறுதியோடு பங்கேற்று, எங்களைப் பற்றிகொண்டிருக்கிற எல்லா சுமைகளையும், பாவநாட்டங்களையும் உதறித் தள்ளிவிட்டு, உம் சார்பாகவும், உமது அரசுக்கு ஏற்றவர்களாகவும் வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment