Wednesday, August 20, 2025

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 66: 18-21
எபிரேயர் 12:5-7,11-13
லூக்கா  13: 22-30

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிறைவாழ்வை நோக்கி வெற்றி நடைபோடும் இறைகுலமே! பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

வாழ்வுக்குச் செல்லும் வழிக் குறுகலானது. ஆனால் அழிவுக்குச் செல்லும் வழியோ அகலமானது. நம்மில் எத்தனையோ பேர் வாழ்க்கைப் போராட்டத்தில் துவண்டு விடாமல் இறுதிரைப் போராடி நம் வாழ்வில் வெற்றிப் பெறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

எசாயா இறைவாக்கினர் கலக்கமுற்றுக் கவலையில் இருந்த மக்களை நம்பிக்கையில் தேற்றுவதை நாம் காணலாம். இறையாட்சியில் நுழைவதற்கும் நம் வாழ்வில் நம்பிக்கை என்னும் நங்கூரம் அவசியமானது. ஆண்டவரின் கண்டிப்பால் திருந்தியவர்கள் துயரத்திற்கு உள்ளனாலும் பின்பு அவர்கள் அமைதியும், நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.

இடுக்கலான வழி நீதியின் வழி, அமைதியின் வழி, மகிழ்ச்சியின் வழி. இடுக்கலான வாயில் வழியே நுழைவோர் நிலைவாழ்வைப் பெறுவர். இதை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலராகிய நாம் இறைமகன் இயேசுவில் நம்பிக்கை வைத்து அர்ப்பணவாழ்வு வாழ இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பாபிலோனியாவிற்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் எசாயா, தொடர்ந்து, பிற இனத்தவரும் இஸ்ரயேலின் மாட்சி நோக்கி வருவர் என்று இறைவாக்கு உரைக்கின்றார். எருசலேமின் கதவுகள் பிற இனத்தாருக்கும் திறந்துவிடப்படுகின்றன. உள்ளே நுழையும் அவர்கள் இறைவனின் மாட்சிமையை உணர்ந்து கொள்வார்கள். இறைவனின் மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வார்கள். இறைவன் அவர்களின் உரிமைச்சொத்தாகவும் மாறுவார் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:- உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
திருப்பாடல் 117: 1. 2
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி
ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி 

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில்  திருத்தூதர் பவுலின் நமது வாழ்வில் துன்பங்களும், துயரங்களும், குறுக்கிடும்போது யேசுவின் பாடுகளும், துன்பங்களும் நமக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். இயேசுவின் துன்பம் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மட்டுமல்ல மாறாக நம் வாழ்வின் மீட்பை உறுதி செய்யவே. ஆனால் நமது துன்பம் மற்றவர்களுக்காக அல்ல மாறாக நமது விசுவாச வாழ்வின் போராட்டத்திற்காக மட்டுமே. அதற்கு இயேசுவின் வாழ்வும் வழியும் ஓர் பாடமாக அமைய வேண்டும் என்று திருத்தூதர் பவுல் கூறுகின்றார்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து, மக்கள் அனைவரையும் இறையாட்சியில் கூட்டிச்சேர்க்கும் திருப்பணியைச் செய்துவருகிற எங்கள் திருத்தந்தை லியோ அவர்களும், ஏனைய ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், உம்மால் நிறைவாக ஆசீர்வதிக்கப்படவும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் அறிந்தவராகிய நீர், உலகையும் உலகத் தலைவர்களையும், எம்நாட்டுத் தலைவர்களையும், பகைமை உணர்விலிருந்தும், போர் வேட்கையிலுமிருந்தும் விடுவித்து, அமைதியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்” என்பதையும், எங்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும், நாங்கள் திருத்தப்படுவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்து, அவற்றைத் தாங்கிக்கொள்ளவும், உம்முடைய துணையோடு, அவற்றை மேற்கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், “கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்” என்கிற உண்மையை உணர்ந்து, பழம்பெருமை, இனப்பெருமை, செல்வச்செருக்கு, பதவி ஆணவம் ஆகியவற்றைத் துறந்து, தாழ்ச்சி என்கிற நற்பண்பை அணிந்தவர்களாய், இறையரசை நோக்கி நம்பிக்கையோடு பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பணமும் பகட்டும், சிற்றின்பமும் உல்லாசமும், பாவமும் பழிச்செயலும் பெருகிவிட்ட இவ்வுலகில் “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிற உம் போதனைக்குச் செவிமடுத்து, ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த நல்லதொரு வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment