பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
சாலமோனின் ஞானம் 18:6-9
எபிரேயர் 11:1-2,8-19
லூக்கா 12: 32-48
திருப்பலி முன்னுரை:
தெய்வத்தின் திருப்பாதங்களில் அமர்ந்து பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு திருவழிப்பாட்டில் கலந்துக்கொள்ள வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.
கிறிஸ்துவ வாழ்வின் மையமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை தான் ஆபிரகாமை கடவுளோடு ஒன்றிணைத்தது. அதே நம்பிக்கைதான் நோய்களைக் குணமாக்கியது. பாவிகள் மன்னிப்புப் பெற்றதும், இறந்தவர் உயிர் பெற்றதும் இந்த நம்பிக்கையில்தான்...
இன்றைய காலக்கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின் அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலைமாறத் தான் எங்கிருந்தோ ஒரு ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நடசத்திரமாக இயேசு தோன்றுகிறார். ”சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம் உங்கள் பரம தந்தையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அழைக்கின்றார்.
நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதியான நம்பிக்கையில் விழிப்போடு செயல்படும் பணியாளர்களாக மாறவும் உயிரேட்டம் நிறைந்த செயல்பாடுள்ள வாழ்வு வாழ்வதற்காக வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்… வாரீர்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
இறைவனின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு அவரின் வாக்குப்பிறழாமை. அஃதாவது, அவரின் சொல்லுக்கும், செயலுக்கும் முரண் இருக்காது. அவரின் வாக்குப்பிறழாமைக்கு ஓர் உதாரணம் தருகின்றது இன்றைய முதல் வாசகம். கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள். அவர்களும் இறைவனைப் புகழ்ந்துப் பாடுவர் என்று சாலமோனின் ஞானம் கூறுவதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 33: 1,12. 18-19. 20,22 (பல்லவி: 12b)
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
1. நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். - பல்லவி
2. தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி
3. நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி
இரண்டாம் முதல் வாசக முன்னுரை:
'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை' என்று நம்பிக்கையை வரையறுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம். நம்பிக்கைக்கு வரையறைத் தருகின்ற திருத்தூதர் பவுல் தொடர்ந்து, ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கைப் பற்றி எழுதுகின்றார். நிலையற்றவைகளை நிலையற்றவைகள் என ஏற்றுக்கொள்ளும், இறைவனின் நம்பகத்தன்மை உணர்ந்து கொள்ளும் ஒருவரால் மட்டுமே நம்பிக்கைக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்கிற நற்செய்தி வரிகளால் திடம் பெற்று, தாயாம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். எமது திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரோடு இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், தந்தையின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாகவே வாழுகிற வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும்” ஏற்றுக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் தந்தையரிடமிருந்து பாடம் பயின்றவர்களாய், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், தற்காலிக லாபங்களுக்காக, நிலையான அமைதியையும், அனைவருக்குமான நல வாழ்வையும் அடகு வைக்காமல், நீதியின் பாதையில் எமை ஆளவும், குடிமக்கள் அனைவரும், தம் கடமை உணர்ந்து செயலாற்றவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்” என்கிற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்முடைய கடைக்கண் பார்வையால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும், ஆண்டவர் தமது உரிமை சொத்தாகத் தெரிந்தெடுத்த, பேறுபெற்ற மக்களாக, அல்லல்கள் யாவும் நீங்கப்பெற்று, அருள்வரங்கள் அனைத்தும் நிரம்பப்பெற்றவர்களாக வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. யூபிலி ஆண்டினை கொண்டாடிவரும் நாங்கள் அனைவரும், அசையாத அடித்தளமுள்ள, சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிற, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கவும், அதற்குரிய விழுமியங்களோடு வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ‘நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்’ என்கிற உண்மையை உணர்ந்தும், ‘மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்’ என்கிற அளவுகோலை அறிந்தும், எம்கிறித்தவ அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொண்டு, விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment