Monday, November 3, 2025

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியேல்  47: 1-2, 8-9, 12
கொரிந்தியர்    3: 9b-11, 16-17
யோவான்         2: 13-22

திருப்பலி முன்னுரை 

இனியவர்களே ! இவ்வுலகில்‌ உள்ள அனைத்துக்‌ கோவில்களுக்கும்‌ தாயான லாத்தரன்‌ பெருங்கோவிலின்‌ நேர்ந்தளிப்பு நாளை இன்று தாய்‌ திரு அவை கொண்டாடுகிறது. நம்‌ உடல்‌ இறைவன்‌ வாழ்கின்ற கோவில்‌. இக்கோவிலின்‌ மாண்பினை அறிந்து, இறைவன்‌ என்றென்றைக்கும்‌ தங்கும்‌ கோவிலாக நாம்‌ மாற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கின்றது. 

“உள்ளம்‌ பெருங்கோயில்‌ ஊன்‌ உடம்பு ஆலயம்‌” என்கிறார்‌ திருமூலர்‌. உடலும்‌ உள்ளமும்‌ ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளம்‌ இல்லாமல்‌ உடலும்‌, உடல்‌ இல்லாமல்‌ உள்ளமும்‌ வாழ்வின்‌ அர்த்தத்தைக்‌ கொடுப்பதில்லை. உள்ளத்தில்‌ உறைகின்ற இறைவனுக்கு உடலே கோவிலாக அமைகின்றது. இறைவனும்‌ மனிதனும்‌ இணையும்‌ இடந்தான்‌ கோவில்‌. கோவிலில்‌ தான்‌ பலிகள்‌ ஒப்புக்கொடுக்கப்பீநிகின்றன. இறைமனித உறவை ஒப்புரவாக்க வந்த இயேசு, எருசலேம்‌ கோவிலைத்‌ தூய்மைப்படுத்துவதை இன்று யோவான்‌ நற்செய்தியில்‌ வாசிக்கிறோம்‌. தூய ஆவியாரின்‌ ஆற்றலால்‌ தந்தையின்‌ திருவுளத்தை நிறைவேற்ற வந்த இயேசுவே அந்தக் கோவில் என்பதை யூதர்கள்‌ புரிந்து கொள்ளவில்லை.

கற்களால்‌ ஆனது ம்ட்டும்தான்‌ கோவில்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. “கடவுளின்‌ ஆவியார்‌ உங்களுள்‌ குடிகொண்டிருக்கிறார்‌ நீங்களே அக்கோவில்‌” என்று திருத்தூதர்‌ பவுல்‌ இரண்டாம்‌ வாசகத்தில்‌ குறிப்பிடுகிறார்‌. இக்கோவிலிலிருந்து செல்லும்‌ ஆற்றல்‌ தீமை அனைத்தையும்‌ நன்மையாக மாற்றுகிறது என்று இறைவாக்கினர்‌ எசேக்கியல்‌ நூலிலிருந்து முதல்‌ வாசகத்தில்‌ வாசிக்கின்றோம்‌. இறைவன்‌ வாழுகின்ற கோவிலாக நாம்‌ மாற அருள்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ மன்றாடுவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

கோவிலிலிருந்து பாயும்‌ தண்ணீர்‌ உயிர்‌ அளிக்க வல்லது. தண்ணீர்‌ தொடுகின்ற இடமெல்லாம்‌ புத்துணர்வையும்‌, நற்குணத்தையும்‌ நல்ல உணவையும்‌ தந்து உதவுகின்றது எனக்‌ கூறும்‌ முதல்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2,3c. 4-5. 7-8 (பல்லவி: 4)
பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. - பல்லவி

ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! 
- பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

நாம்‌ அனைவரும்‌ இறைவன்‌ கட்டுகின்ற கோவில்‌. இயேசுவே அதன்‌ அடித்தளம்‌. நம்‌ உடல்‌ தரய்‌ ஆவியார்‌ தங்கும்‌ கோவில்‌, அதைத்‌ தூய்மையாக வைத்திருப்பது நம்‌ ஒவ்வொருவரின்‌ பொறுப்பு என்று கூறும்‌ இரண்டாம்‌ வாசகத்துக்குச்‌ செவிசாய்ப்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌  வாழ்த்தொலி:

அல்லேலூயா, எனது பெயர்‌ என்றென்றும்‌ போற்றப்படுமாறு இக்கோவிலை நான்‌ தெரிந்தெடுத்துத்‌ திருநிலைப்படுத்தியுள்ளேன்‌, என்கிறார்‌ ஆண்டவர்‌. அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. உரோமை நகருக்கு மட்டுமல்லாமல், அனைத்துலகத் திரு அவைக்கும் தாய்த்தலமாகவும், தலைமை ஆலயமாகவும் விளங்குகிற லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவினை கொண்டாடுகிற இந்நாளில், திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும், நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருக்கோவிலிலிருந்து புறப்படுகிற ஆறு பாய்கிற இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும் என முன்னுரைக்கும் இறைவாக்கினர் எசேக்கியேலின் கூற்றுப்படி, இவ்வுலகும், உலகின் உயிரினங்கள் அனைத்தும், வாழ்வாங்கு வாழவும், துளிர்விட்டிருக்கும் அமைதிக்கான முயற்சிகள் நிறைவான பலன் தந்து, அமைதியும் சமாதானமும் செழிக்கும் பூமியாக இவ்வையகம் விளங்கவும், நாடுகளை ஆட்சி செய்கிற தலைவர்கள் மற்றும் மக்கள் யாவரும், நாளுமே உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே” என்கிற திருப்பாடல் வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய், எம்மை வாட்டி வதைக்கும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், சோதனைகள், வறுமை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், கடன் தொல்லைகள், இன்னும்பிற இன்னல்கள் ஆகியவற்றை, உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். நீர் தாமே எங்களுக்குத் துணையாகவும் அரணாகவும் இருந்து, கரைசேர்க்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தந்தையின் இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய இயேசுவின் அறச்சீற்றத்தை புரிந்தவர்களாய், நாங்களும், எங்கள் பங்குத் தந்தையரோடும் பங்குப்பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களோடு இணைந்து, எங்கள் பங்குத்தளத்தைப் புனிதமிகு ஆலயமாகக் கட்டியெழுப்பத் தேவையான அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? என்கிற பவுலடியாரின் வினாவினை உள்வாங்கியவர்களாய், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், சமூக மற்றும் பங்கு வாழ்க்கையையும் தூயதாக அமைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF