Monday, November 17, 2025

கிறிஸ்து அரசர் பெருவிழா

 கிறிஸ்து அரசர் பெருவிழா

இன்றைய வாசகங்கள்

2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
மத்தேயு 1:18-24

திருப்பலி முன்னுரை

அன்பானவர்களே ! திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை 'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' என்ற பெருவிழாவாகத் தாய் திருஅவை கொண்டாடுகிறது.
இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்தான். ஆனால் அவரின் அரசாட்சி இவ்வுலக அரசர்களின் ஆட்சி போன்றதல்ல. இவ்வுலக அரசர்களின் ஆட்சி அதிகாரத்தையும் பணத்தையும் மையமாகக் கொண்டது. கிறிஸ்துவின் அரசாட்சியோ அன்பு, தியாகம், இரக்கம், உண்மை, நீதி, சகோதரத்துவம், அமைதி போன்றவைகளை மையமாகக் கொண்டது.

இஸ்ரயேல் மக்கள் தாவீதைப் போன்று போர் புரிகின்ற ஓர் அரசனை எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். உரோமை ஆட்சியினரின் பிடியிலிருந்து விடுவிக்க ஓர் அரசியல் நெறி சார்ந்த அரசரை எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ இவ்வுலக அரசியல் தலைவர்களைப் போன்று இல்லாமல், அடிமையின் நிலை ஏற்று வந்தார். அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் போதித்தார். தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி துன்பத்தைக் கண்டு தப்பி ஓடவில்லை. மாறாக, சிலுவையை ஏற்றுக் கொண்டு, பகைவரை மன்னித்து, இறைவனின் ஆட்சியை மண்ணுலகில் விதைத்தார். எந்த ஓர் அரசரும் தர முடியாத விடுதலையை பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் நமக்குத் தந்தார். 

அவர் விட்டுச் சென்ற இறையாட்சிப் பணியை இன்றைய திரு அவை இலட்சியப் பயணமாக ஏற்றுப் பயணிக்கிறது. இயேசு கிறிஸ்துவே நம் குடும்பங்களின் அரசர், இறையாட்சியே நம் இலட்சியக் கனவு என்ற சிந்தனைகளோடு இப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: 

இஸ்ரயேலின் அரசராகச் சவுலுக்குப் பின் தாவீதை இறைவன் திருப்பொழிவு செய்கிறார். தாவீது அரசர் இஸ்ரயேல் மக்களை ஒன்றிணைத்து, உடன்படிக்கைப் பேழையை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வருகிறார் என்பதைப் பறைசாற்றும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்: திபா 122:1-2, 4-5

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1. “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி
2. ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

கிறிஸ்து நம்மைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, உலகம் முழுவதையும் தந்தையாம் கடவுளோடு ஒப்புரவு ஆக்கினார். இவ்வுலகப் படைப்பு அனைத்திற்கும் கிறிஸ்துவே அரசர். அவர்  வழியாகவே, அவருக்காக, அனைத்தும் படைக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் எனும் பெருவிழவை கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திருவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலைத் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம். “திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமுமான கிறிஸ்துவே எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு” எங்கள் வாழ்க்கை அமைய   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்” என்கிற பவுலடியாரின் உண்மை கூற்றின்படி, உலகாளும் அதிபர்களும், நாடாளும் தலைவர்களும், இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஏற்றபடி தம் ஆளுமை அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டுமென்றும், அமைதி, சமத்துவம், நல்லிணக்கம், மனிதமாண்பு ஆகியவை பேணப்படுகிற  பூமியாக இந்நாநிலத்தை மாற்றிட, மாந்தர் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திருவழிபாட்டு ஆண்டின் நிறைவு வாரத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும், மரித்த விசுவாசிகளுக்காகச் சிறப்பாக ஜெபிக்கும் இந்த நவம்பர் மாதத்தில், மண்ணுலக வாழ்வின் நிலையாத்தன்மையை உணர்ந்தவர்களாய், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என இறைவேண்டல் செய்வதோடு, நேரிய வழியில் எம்வாழ்க்கையை கட்டியெழுப்பவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இறந்த அடியாளர்கள் அனைவரும், குறிப்பாக எங்கள் குடும்பங்களிலே மரித்தவர்கள், எங்கள் உறவு மற்றும் நட்புச் சூழல்களில் மரித்தவர்கள், நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் மற்றும் மறந்துபோனவர்கள், தங்களுக்காக ஜெபிக்க யாருமே இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் “என்னோடு பேரின்ப வீட்டில் இன்று நீர் இருப்பீர்” என்கிற அருள்வாக்கை கேட்கிற நற்பேறு பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      
 
5. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும், தம்மோடு ஒப்புரவாக்க திருவுளம் கொண்ட, கடவுளின் திருமகனது வருகையை எதிர்நோக்கியிருக்கும் நாங்கள் அனைவரும், சிறப்பாக  இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பகைமை உணர்வுகளை மறந்து, ஒன்றிப்பு, உடனிருப்பு, பங்கேற்பு, ஆகிய பண்புகளை வளர்த்து, ஒப்புரவின் மக்களாகவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment