Tuesday, November 25, 2025

  திருவருகைக் காலம் முதல் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

திருப்பலி முன்னுரை:-

திருவழிப்பாட்டின் புதிய ஆண்டைத் தொடங்கும் இவ்வேளையில் திருவருகைக்கால முதல்ஞாயிறு ஆன இன்று இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள்.

கிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடத் தயாராகும் நாம் அவரின் இரண்டாம் வருகைக்கு நம்மை நாமே தயாரிக்க வேண்டியநிலையில் உள்ளோம். இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். இறைமகனின் வருகையை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துகளை வலிறுத்திக் கூறுகின்றன. நற்செய்தி வாசகம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, விழிப்பாய் இருக்க அழைப்பு விடுக்கின்றது.

இன்று ஏற்றப்படும் திருவருகைக் கால முதல் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கின்றது. கிறிஸ்துவின்‌ வருகைக்காகத் தயாரிக்கும் நாம்‌ ஒளியின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ எனத் திருத்தூதர் பவுல்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறார்‌. இதை உணர்ந்து எதிர்நோக்கு என்கின்ற முதல்‌ திரியை ஏற்றி இயேசுவின்‌ வருகைக்கு ஆயத்தமாவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

யாக்கோபின் குடும்பத்தாரே, ஆண்டவரின்‌ ஒளியில்‌ நடக்க அனைத்து மக்களும்‌ ஒன்றுகூடி ஆண்டவரின்‌ கோவில்‌ அமைந்துள்ள மலைக்கு வருவார்கள்‌. இதனை இறைவாக்கினர்‌ எசாயா இறைவனின்‌ மீட்பு அனைவருக்கும்‌ உரியது என்ற வார்த்தைகளால்‌ முன்னறிவிப்பதை முதல்‌ வாசகம்‌ வழியாகக்‌ கேட்போம்‌.

பதிலுரைப்‌ பாடல்‌: திபா 122:1-2, 4-5, 6-7, 8-9

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப்‌ போவோம்‌.

1. ‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

2. ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

3. எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

4. “உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி 

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

உரோமை நகரக் கிறிஸ்தவச் சபைக்குப் எழுதிய கடிதத்தில் பவுல் 'இறுதிக்காலம்' பற்றிப் பேசுகின்றார். இயேசு கிறிஸ்து மனிதராக நம்மிடையே வந்து 'இறுதிக்காலத்தை' ஏற்கெனவே தொடங்கிவைத்தார். அவருடைய வருகையால் உலகில் கடவுளின் உடனிருப்பு ஒரு சிறப்பான நிலையை எய்தியது. உலகில் ஒரு புதிய விடியல் தோன்றியது. கிறிஸ்துவை அணிந்து கொள்ளவும்‌ பாவத்தைத்‌ தவிர்க்கவும்‌ அழைப்பு விடுக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக்‌ காட்டியருளும்‌; உமது மீட்பையும்‌ எங்களுக்குத்‌ தந்தருளும்‌. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு ஆகிய இன்று, தாயாம் திரு அவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய நமக்காகவும் மன்றாடுவோம். இயேசுவின் முதல் வருகையாகிய வரலாற்றுப் பிறப்பை கொண்டாடுகிற கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்காக மட்டுமல்லாது, அவரது இரண்டாம் வருகைக்காகவும், ‘ஆயத்தமாய் இருங்கள்’ என்கிற நற்செய்தி அறிவுறுத்தலின்படி, விழிப்பாயிருந்து, தகுந்த முறையில் எம்மைத் தயாரிக்க, அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால தயாரிப்பு வளையத்தின் முதல் மெழுகுதிரியை ‘எதிர்நோக்கின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், யூபிலி ஆண்டினை கொண்டாடுகிற நாங்கள் அனைவரும், இவ்வுலகிலும், எம்நாட்டிலும், நாங்கள் வாழுகிற சமுதாயத்திலும், எங்கள் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வளவுதான் துன்பங்கள் நிலவினாலும், ‘கடவுள் நம்மோடு’ என்கிற நம்பிக்கையுடன், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. போர்களும், வன்முறைச்செயல்களும், தீவீரவாதமும் தலைதூக்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில், “ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்” என்கிற முதல் வாசக இறைவாக்கு நிறைவேற வேண்டுமென்றும், உலகையும், எம்நாட்டையும் ஆளும் தலைவர்களும், மாந்தர் அனைவருமே, அமைதியை நாடுபவர்களாய், ஆண்டவரின் ஒளியில் நடந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நவம்பர் மாத இறுதி நாளாகிய இன்று, இறந்த அடியாளர்கள் அனைவரும், குறிப்பாக எங்கள் குடும்பங்களிலே மரித்தவர்கள், எங்கள் உறவு மற்றும் நட்புச் சூழல்களில் மரித்தவர்கள், தங்களுக்காக ஜெபிக்க யாருமே இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் ‘உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் வந்துவிட்டது, மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது’ என்கிற பவுலடியாரின் நம்பிக்கையைத் தமதாக்கி, நிலைவாழ்வில் பங்குபெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகிய இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை ஏந்தியவர்களாய், பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து, இயேசு கிறிஸ்துவை அணிந்து கொண்ட ஒரு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment