பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…
இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனௌறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெற முடியும் என்பதே…
இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும். என்றும் உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.
எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது எனபதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.
முதல் வாசக முன்னுரை:
இறுதித் தீர்ப்பு நாளைக் குறித்த எச்சரிக்கையையும் அதே வேளையில், எதிர்நோக்கையும் தருவதே இன்றைய முதல் வாசகம். கடவுளுக்கு அஞ்சி நடக்காத ஆணவக்காரர்களுக்கு, எரியும் தீச்சூளையும், அவருக்கு அஞ்சு நடப்பவருக்கோ நலம் தரும் கதிரவன் எழுவானெனக் கூறும் வாசகத்துக்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 98: 5-6, 7-8, 9
பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கிக் கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்க நம்மை அழைக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம். கிறிஸ்துவ வாழ்க்கையின் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து உழைத்து வாழ அழைக்கும் இந்த வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கட்டப்படும் ஆலயங்கள் அழியலாம். ஆனால் கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாகிய திருஅவை, காலத்தால் அழிவுறாதது. கிறிஸ்துவின் பிரதிநிதியாய் இருந்து அதனை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை 14 ஆம் லியோ, மற்றும் ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரும், பொதுநிலையினராகிய நாங்களும், அழிந்துபோகும் உலக இயல்பின்படி வாழாமல், நிலை வாழ்வுக்குரிய இயல்பை அணிந்தவர்களாய் வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் தொடுக்கின்ற போர்களும், பல இடங்களில் ஏற்பட்டு வருகிற நிலநடுக்கங்களும், வெள்ளங்களும், பஞ்சமும், கொள்ளை நோயும், அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும், இனப்படுகொலைகள், மதக்கலவரங்கள் மற்றும் துப்புறுத்தல்கள் ஆகியவை குறைந்தொழியா இக்காலத்தில், நீர்தாமே நீதியின் கதிரவனை எழச்செய்து, அமைதியெனும் நலம் தரும் மருந்தினைத் தந்து, தலைவர்களையும், குடிமக்களையும் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என்கிற நற்செய்தி வாழ்த்தொலியால் நம்பிக்கை ஊட்டப்பெறும் நாங்கள், இறந்த அடியார்களை நினைவுகூரும் இந்த நவம்பர் மாதத்தில், எங்கள் குடும்பங்கள், அன்பியங்கள் மற்றும் பங்கில் மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும், நாங்கள் நன்றியோடு நினைவுகூர்ந்து ஜெபிக்க கடமைப்பட்டுள்ள அனைத்து நல்லோருக்காகவும் மன்றாடுகிறோம். நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்கிற பவுலடியாரின் போதனைக்கேற்ப, நாங்கள் அனைவரும் கடின உழைப்பாளிகளாகவும், பொறுப்புள்ள மனிதர்களாகவும் விளங்கிட வேண்டுமென்றும், எம் இளையோர்க்கும், வேலையின்றி தவிக்கும் அனைவருக்கும், அவரவர் தகுதிக்கேற்ப நல்ல பணி கிடைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டோ, தவறான போதனைகளால் ஈர்க்கப்பட்டோ ஏமாந்து போகாமலும், எமக்கெதிராக இழைக்கப்படும் துன்பங்கள், புறக்கணிப்புகள், துரோகங்கள் ஆகியவற்ற்றைக்கண்டு கலங்காமலும், மன உறுதியோடு இருந்து, எங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment