Monday, March 9, 2026

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026
Daily Reading: 22 June – The Miracles of Jesus: Healing a Blind Man – John  9:1-41 – The Peanut Gallery

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1 சாமுவேல் 16:1ஆ,6-7,10-13அ
1 எபேசியா 5:8-14
யோவான் 9:1-41

திருப்பலி முன்னுரை: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. பாஸ்கா பெருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, திருச்சபை இன்று மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது.

இன்றைய நற்செய்தியில், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை அளிக்கும் புதுமையை நாம் காண்கிறோம். இது வெறும் உடல் சார்ந்த பார்வை மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையைப் பற்றியது. நாம் பல நேரங்களில் பாவம், பொறாமை மற்றும் அறியாமை எனும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். "நானே உலகின் ஒளி" என்றுரைத்த இயேசு, நம் இதயக் கண்களைத் திறந்து, உண்மையை உணரச் செய்கிறார்.

இந்தத் திருப்பலியில் பங்கேற்கும் நாம், நம்முடைய அகக்கண்கள் திறக்கப்படவும், இருளின் செயல்களை விட்டு ஒளியின் மக்களாக வாழவும் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (1 சாமுவேல் 16:1, 6-7, 10-13)

மனிதர் முகத்தைப் பார்க்கிறார், இறைவனோ இதயத்தைப் பார்க்கிறார். இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலின் அரசராகத் தாவீதை இறைவாக்கினர் சாமுவேல் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். மனிதர்கள் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குகிறார்கள், ஆனால் இறைவன் இதயத்தைப் பார்க்கிறார் என்பதை இவ்வாசகம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. வெளிவேடங்களைத் தவிர்த்து, தூய்மையான உள்ளத்தோடு இறைவனைத் தேட இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

பதிலுரைப் பாடல்

பல்லவி : ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை!
திருப்பாடல்கள்: 23: 1-3, 3-4,5,6

ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார், அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார், மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (எபேசியர் 5:8-14)

ஒளியின் மக்களாக வாழுங்கள். ஒரு காலத்தில் இருளாக இருந்த நாம், இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாக மாறியிருக்கிறோம் என்று புனித பவுல் அடியார் கூறுகிறார். ஒளியின் பிள்ளைகளுக்குரிய நற்பண்புகள், நீதி மற்றும் உண்மை ஆகியவற்றில் நாம் நிலைத்திருக்க வேண்டும். தூக்கத்திலிருந்து விழித்து, கிறிஸ்துவின் ஒளியில் பிரகாசிக்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வுடன் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்கிறார் ஆண்டவர்!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எப்படி நீர் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த தாவீதின் மீது, ஆண்டவரின் ஆவி நிறைவாக இருந்ததோ, அதே போல உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, திருப்பொழிவு செய்யப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்கள்மீதும், மறைப்பணியாளர்கள் மீதும், இறைமக்களாகிய எங்கள்மீதும், ஆவியானவர் நிறைவாகப் பொழியப்படவும், அவர் தரும் ஒளியில், நாங்கள் அனைவரும், நேரிய பாதையில் நடந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆண்டவர் ஆயனாய் இருக்கிறபோது இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையெனப் பறைசாற்றும் திருப்பாடல் இருப்பது மூன்றை பதிலுரையாகப் பகர்ந்த நாங்கள், வாழ்வின் பாதையைத் தெரிவு செய்து வாழவும், போர்கள், சண்டைகள், வன்முறை, தீவிரவாதம் போன்ற சாவுக்கு இட்டுச்செல்லும் இருளின் செயல்களை, உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும் கைவிட வேண்டுமென்றும், எதிர்வரும் சட்டமன்ற  தேர்தலின் முடிவில், சமயசார்பற்ற நல்லாட்சி அமைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘தூங்குகிறவனே, விழித்தெழு … கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்கிற பவுலடியாரின் அறைகூவல், பொதுத் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் எம்மாணவச்செல்வங்களையும், ஏனைய எம்பிள்ளைகள் அனைவரையும், சோம்பலிலிருந்து தட்டி எழுப்பி, உத்வேகத்துடன் உழைக்கச் செய்து, அவர்கள் சந்திக்கும் தேர்வுகள் அனைத்திலும் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும், கிறிஸ்துவின் ஒளியில் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை ஒளிமயமானதாக அமைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும் பாவத்தின் காரணமாய் விளைந்திருக்க வேண்டிய அவசியமில்லை, கடவுளின் செயல் இவை வழியாக வெளிப்படும்பொருட்டு கடவுளால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்து, மனஉறுதியுடன் கூடிய மனந்திரும்புதல் மூலமாக, இந்தத் தவக்காலத்தில் நல்வாழ்வு நோக்கிப் பயணிக்கும் அருள் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்பதை உணர்ந்தவர்களாய், தவக்கால அடையாளாச் செயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பார்த்து, பயனற்ற இருளின் செயல்களைச் செய்யாது, ஒளியின் செயல்களாகிய ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் ஈடுபட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment