Sunday, March 15, 2026

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026 
The Gospel: 26th March 2023 – Keash Parish

திருப்பலி முன்னுரை 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, 

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) பாஸ்கா பெருவிழாவிற்கு மிக அருகாமையில் இருக்கும் நாம், இன்று சாவையே வெல்லும் கிறிஸ்துவின் வல்லமையைத் தியானிக்கிறோம். இன்றைய நற்செய்தியில், நான்கு நாட்கள் கல்லறையில் அழுகிய நிலையில் இருந்த லாசரை இயேசு உயிர்த்தெழச் செய்கிறார். "உயிர்ப்பும் வாழ்வும் நானே" என்று பிரகடனம் செய்யும் இயேசு, நம்முடைய பாவங்களினால் ஆவிக்குரிய நிலையில் செத்துப்போயிருக்கும் நம்மையும் எழுப்ப விரும்புகிறார். நம்முடைய தவறான பழக்கங்கள், விரக்தி மற்றும் பாவங்கள் எனும் கல்லறைகளிலிருந்து வெளியே வர இயேசு இன்று நமக்குக் கட்டளையிடுகிறார்.
 "லாசரே, வெளியே வா!" என்று அழைத்த அதே குரல் இன்று நம்மையும் அழைக்கிறது. அந்த உயிருள்ள குரலுக்குச் செவிசாய்த்து, புதிய வாழ்வு பெறத் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

 

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 37:12-14) 

கல்லறைகளைத் திறக்கும் இறைவன். பாபிலோனிய அடிமைத்தனத்தில் நம்பிக்கையற்று இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இறைவன் ஒரு மாபெரும் வாக்குறுதியைத் தருகிறார். "நான் உங்கள் கல்லறைகளைத் திறப்பேன், என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்" என்று அவர் கூறுகிறார். இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதையும், அவர் இழந்த வாழ்வை மீண்டும் தரவல்லவர் என்பதையும் உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

பதிலுரைப்பாடல் 

பல்லவி : ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது. 
திருப்பாடல்: 130: 1- 8.
 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம் முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி 
ஆண்டவரே! நீர் எம்குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி 
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின் றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். பல்லவி 
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி 
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8:8-11)  

உங்களில் குடிகொண்டிருக்கும் தூய ஆவி. புனித பவுல் அடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையை விளக்குகிறது. இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய அதே ஆவி நமக்குள் குடிகொண்டிருந்தால், நம்முடைய சாவுக்குரிய உடல்களுக்கும் அது உயிர் அளிக்கும். நாம் ஊனியல்புக்குக் கட்டுப்படாமல், தூய ஆவிக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று இவ்வாசகத்தைக் கேட்போம். 

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

1. “என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்” என்கிற இயேசுவின் கூற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு, திருஅவை என்கிற படகில் பயணிக்கும் இறைமக்களாகிய நாங்களும், எங்களை வழிநடத்தும் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு, ஆகியவற்றில் நிலைத்திருந்து, நிறைவாழ்வை நோக்கிப் பயணிக்கிற அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

2. இரவில் நடப்பவர் இடறி விழுவது போல, இன்றைய உலகு, போர்கள், வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றால் தடுமாறுகிற வேளையில், நீர் தாமே ஒளியாய் இருந்து, அமைதியின் பாதையில் வழிநடத்திட வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும் அறவழியில் ஆட்சி புரியவும், தமிழகத்திலும் ஏனைய மாநிலங்களிலும் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில், சமயசார்பற்ற அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

3. ‘என் ஆவியை உங்கள்மீது பொழிவேன்; நீங்களும் உயிர் பெறுவீர்கள்’ என எசேக்கியேல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதுபோல, எங்கள் பிள்ளைகளும், பொதுத் தேர்வுகளையும் ஆண்டு இறுதி தேர்வுகளையும் எழுதிக்கொண்டிருக்கும் எம்மாணவச்செல்வங்களும், தூய ஆவியால் நிரப்பப்படவும், அவர்கள் அனைவரும் தாங்கள் சந்திக்கும் தேர்வுகள் அனைத்திலும் சிறந்ததொரு வெற்றிபெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

4. ‘கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்’ என்று கூறியதோடு “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய்” என்றும் சொல்லி, இறந்த இலாசரை உயிர்த்தெழச்செய்த இறைவா, நீர் எம்மோடு இருந்தால், நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும், எம்மை விட்டு விலகும் என்பதோடு, இறுதி நாளில் உம்மோடு கூட உயிர்ப்போம் என்கிற நம்பிக்கையுடன் நாங்கள் வாழ்ந்திட, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது’ என்று இரண்டாம் வாசகம் கூறுகிற உண்மையை உணர்ந்தவர்களாய், ஆவிக்குரிய வாழ்வை மேற்கொள்ளவும், தவக்காலத்தின் சிறப்பு முயற்சிகளான ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் இன்னும் முனைப்பாக ஈடுபட்டு புனிதம் நோக்கிப் பயணிக்கவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

1 comment:

  1. Thank you so much for all the work you do. Please, post the introduction and intercession for the holy week, especially the paschal triduum.

    ReplyDelete