பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு.
திருப்பலி முன்னுரை:
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியைத் தியானிக்கும் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தை இறைவனிடம் செல்லவிருப்பதை முன்னிட்டு கலங்கி நின்ற சீடர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். "உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்" என்று தொடங்கும் இயேசு, விண்ணகத்தில் பல உறைவிடங்கள் உள்ளன என்றும், அங்கேயே நாம் சேருவதற்கு "நானே வழியும் உண்மையும் வாழ்வும்" என்றும் உறுதி அளிக்கிறார். கிறிஸ்துவை நாம் வழியாய் ஏற்று நடக்கும்போது, உண்மையை அறிந்து கொள்கிறோம்; அந்த உண்மை நமக்கு நிலைவாழ்வைத் தருகிறது.
நாம் அனைவரும் தந்தையாம் இறைவனோடு இணைந்திருக்கவும், கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகில் வாழவும் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 6:1-7)
திருச்சபையின் பணிப் பகிர்வு - திருத்தொண்டர்கள் நியமனம். தொடக்க காலத் திருச்சபை வளர்ச்சியடைந்தபோது, விதவைகளைப் பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கலைத் திருத்தூதர்கள் எப்படித் தீர்த்தார்கள் என்பதை இவ்வாசகம் விவரிக்கிறது. செபத்திலும் இறைவார்த்தைப் பணியிலும் திருத்தூதர்கள் கவனம் செலுத்தவும், பந்திப் பணி செய்ய ஏழு திருத்தொண்டர்களை (Deacons) அவர்கள் நியமித்தார்கள். இது திருச்சபையில் பணிப் பகிர்வின் அவசியத்தையும், தூய ஆவியின் வழிநடத்துதலையும் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி : ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33:1-2,4-5, 18-19
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 2:4-9)
உயிருள்ள கற்களாகிய நாம். நாம் அனைவரும் உயிருள்ள கற்களாக இருந்து, கிறிஸ்துவின் மேல் ஒரு ஆன்மீக இல்லமாகக் கட்டப்பட அழைக்கப்படுகிறோம் என்று புனித பேதுரு கூறுகிறார். கிறிஸ்துவே தலைக்கல்லாக இருக்கிறார். நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரச குலக் குருக்கள் மற்றும் தூய மக்களினம் என்ற மேலான தகுதியை நற்செய்தியின் வழியாகப் பெற்றுள்ளோம் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்பதுவே தங்கள் தலையாயப் பணி என்பதை உணர்ந்து, திருத்தொண்டரைகளை தெரிவு செய்த திருத்தூதர்களைப் போலவே, இன்றைய திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், இறையாட்சிப் பணியினை சிரமேற்கொண்டு செயல்பட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் அரசரே எம் இறைவா, நாளை விடிகின்றபோது, நல்லாட்சி தொடர்வதற்கான தேர்தல் முடிவுகள் வர வேண்டும் எனவும், தமிழ் நாடு உள்பட சில சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள், சமயசார்பற்ற, சமூக நீதியைப் பேணுகின்ற நல்ல அரசுகள் அமைவதற்கு வழிகோல வேண்டுமென்றும், உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டுமென்றும், அதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்றுரைத்த இறைவா, எம்குடும்பங்களும், எம்பிள்ளைகளும், இளையோரும், உம்மையே தங்கள் வழியும் உண்மையும் வாழ்வுமாகக் கொண்டு, தங்கள் கல்வி, திறன்-வளர்ப்பு, பணியமர்வு, எதிர்காலம் ஆகியவற்றில் கவனத்துடன் செயல்படவும், ஒளிமயமான எதிர்காலம் அவர்கள் எல்லோருக்கும் அமைந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்கிற உம் குரலைக் கேட்டு, நாங்கள் நம்பிக்கை நிறைந்தவர்களாய் வாழவும், எங்களுக்கு நேரிடும் துன்பங்களினால் உள்ளம் துவண்டுபோகாமல் இருக்கவும், “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்கிற கூற்றின்படி, வியத்தகு செயல்களைச் செய்யக்கூடிய ஆற்றலை நீர் தாமே எங்களுக்கு அருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது எங்கள் பணி” என்பதை உணர்ந்து, திருமுழுக்கின் வழியாகப் பெற்றுக்கொண்ட பொதுக்குருத்துவத்தின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment