Wednesday, May 6, 2026

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 10-05-2026

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 10-05-2026

Jesus Promises the Holy Spirit ‼️ READ John 14:15-21 15 “If you love me,  keep my commands. 16 And I will ask the Father, and he will give you  another advocate to

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு ஆன இன்று  "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம், தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப் போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் “என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்” என்கிற உமது குரலுக்குச் செவிசாய்த்து, எங்கள் கீழ்ப்படிதல் மூலம். உம்மீது நாங்கள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிற அருளினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அமைதியின் அரசரே எம் இறைவா, உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டுமென்றும், அதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், எங்கள் நாட்டிலும், மாநிலங்கள் அனைத்திலும், நல்லாட்சி, ஒற்றுமை, சமாதானம், சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை செழிக்க வேண்டுமென்றும்    இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உயிர்த்த ஆண்டவராகிய நீர் வாக்களித்த “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின்” துணையோடு, எம்பிள்ளைகளும், இளையோரும், தங்கள் வாழ்விற்கான நல்வழியைத் தேர்வு செய்து, கல்வியிலும், பணிகளிலும், தொழில்களிலும், மென்மேலும் உயர்ந்து, அனைத்து விதங்களிலும் வளம்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிற உமது வாக்குறுதியை இறுக்கப்பற்றியவர்களாய், எம்வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலும், இன்னல்களிலும், இடையூறுகளிலும், உறுதியாகப் போரிட்டு, “நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்” என்கிற உமது கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணமாய் ஒரு வெற்றிகரமான  வாழ்க்கையை  நடத்திட  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்ற்றவும், அனைவருடனும் பணிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்ளவும், குற்றமற்ற மனச்சான்றுடன் ஒழுகவும், நன்மை செய்து துன்புறுவதில் உம்மைப் போல் விளங்கவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

No comments:

Post a Comment