Thursday, February 25, 2016

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு 28/02/2016



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே
! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நம் கடவுள் இரக்கத்தின் கடவுள். தண்டனையின் இறைவன் அல்ல. மாறாக மன்னிப்பின் இறைவன். எனவே பிறர் வழியாக இறைவன் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அலட்சியம் செய்யாமல் அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார். 

இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக்கூடாது. அத்திமரத்திற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்கு தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம். ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்தவர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம். அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டி பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:


இன்றைய முதல்வாசகத்தில் இந்த நிகழ்வில் கடவுளின் வெளிப்பாடு நிகழ்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. கடவுள் தன்னை காட்சி வடிவிலும், ஒலி வடிவிலும் வெளிப்படுத்துகின்றார். மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். அவரின் வார்த்தைகளைக் கேட்கிறார். இனி மோசேயின் வேலை ஆடு மேய்ப்பது அல்ல. இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப்போவதில்லை. அவரின் குடும்பம் இனி இத்திரோவின் குடும்பம் அல்ல. ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பம்.கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள்  இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் என்ற அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

'கிறிஸ்துவே அப்பாறை!' என கிறிஸ்துவின் மேன்மையை முன்வைத்து, அதிலிருந்து அப்படியே அறிவுரைப் பகுதியை எழுதத் தொடங்கும் திருத்தூதர் பவுல் அடிகளார் கொரிந்தியர்களுக்கு எமுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்ட  இரண்டாம் வாசகத்தில் நம் சிந்தனையைத் தூண்டும் மிக முக்கியமானது 12ஆம் வசனத்தில் உள்ளது: 'எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்!' அதாவது, 'எங்கள் கப்பலை யாராலும் மூழ்கடிக்க முடியாது!' என்ற சொன்ன டைட்டானிக் கப்பல்காரர்கள்போல, இஸ்ரயேல் மக்களும், 'எங்களோடு இறைவன் இருக்கிறார்! எங்களுக்கு ஒரு தீங்கும் நடக்காது!' என்கின்றனர். ஆனால், பலர் பாம்பினாலும், கடவுளின் தூதராலும் அழிக்கப்படுகின்றனர். இந்த பவுலடிகளாரின் அறிவுரைக்கு கவனமுடன் செவிய்மெடுப்போம்


பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;
ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.
அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்;
அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு
மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி

மன்றாட்டுகள்:


அன்புத் தந்தையே! எம் இறைவா! திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறை இரக்கத்தின் ஆண்டின் மையமான இறை இரக்கம் அனைத்து மாந்தருக்கும் முழுமையாக சென்றடைய அவர்கள் அனைவரும் தங்கள் சொல்லாலும், செயலாலும் சான்று பகர வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்ஆலோசனை கர்த்தரே! எம் நாட்டில் நிலவும் அரசியல், பண்பாடு, மொழி, இனவேறுபாடுகள் வேரறுக்கப்பட்டு உம் மதிப்பீடுகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் சேர்ந்த நல்ல ஆட்சி அமைக்க தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளைனோரை பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

Friday, February 19, 2016

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு 21/02/2016


தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.





முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே
! தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். புயலுக்குப்பின் அமைதி, இரவுக்குப்பின் பகல், துன்பத்திற்குப் பின் மகிழ்ச்சி என்பதைப்போல் இயேசுவின் பாடுகளுக்குப்பின் மகிமை உண்டு என்ற ஆழ்ந்தப் பொருள் நிறைந்த நம்பிக்கையை நாம் மனதினில் பதிவு செய்கிறது இன்றைய வாசகங்கள். மலையின் மேல் ஏறி ஓர் ஆன்மீகதேடலைத் தேடுவதை நம் நாட்டில் எப்பொழுதும் காணலாம். அன்று இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வுகள் உண்டு என்பதை விவிலியத்தில் காணலாம். தாபோர் மலையில் திருத்தூதர்கள் அடைந்த ஆன்மீக தெய்வீக நிகழ்வின் மகிழ்ச்சி என்றும் நம்மில் நிறைந்திருக்கட்டும்..

மகிழ்ச்சியான தாபோர் மலைக்கும் துன்பமான கெத்சமணித் தோட்டத்திற்கும் அதே சீடர்களை அழைத்துச் செல்கிறார்
. அதுபோல அன்றாட வாழ்வில் பல மகிழ்ச்சியான ஆறுதலான நேரங்களில் இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார். சந்திக்கவிருக்கும் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தருகிறார். ஆனால் நாம் அதைப் பலமுறை கண்டுகொள்வது கிடையாது. துன்பங்கள் மட்டுமே நமக்கு பெருஞ்சுமையாக இருக்கிறது. எந்நாளும், எந்நேரமும் நம்மை வழிநடத்தும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம். காற்றில் ஆடும் நாணலைப் போல் நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால் அச்சம் என்பது இல்லை நம் வாழ்வில்! எனவே இன்பத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டி அருள் வரங்கள் இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:


உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உன் பெயரைச் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியாக விளங்குவாய்' என்று ஆபிராமை அழைத்த இறைவன் இன்றைய முதல் வாசகப் பகுதியில் அவரோடு உடன்படிக்கைச் செய்கின்றார். ஆபிராமுடன் யாவே இறைவன் செய்யும் இந்த உடன்படிக்கையில் மூன்று நிகழ்வுகள் உள்ளன. வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல். விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்ற வாக்குறுதி.உடன்படிக்கையின் அடையாளமாக இரண்டு பாறைகளின்மேல் ஆண்டவரின் கட்டளைப்படி ஆபிராம் விலங்குகளை வெட்டி வைக்கின்றார். 'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'. இதுதான் ஆபிராமின் கீழ்ப்படிதல்.இவ்வாறு யாவே கடவுள் ஆபிராமுடன் செய்த உடன்படிக்கை மற்றும் அவர் மீது ஆபிராம் கொண்ட நம்பிக்கை முதல் வாசகமான தொடக்க நூல் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாவது வாசகத்தில் தன் வாஞ்சைக்குரிய பிலிப்பி நகர திருஅவையை, கிறிஸ்து என்னும் இலக்கை நோக்கி ஓட அழைக்கிறார்
. 'கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்.' இவர்கள் யாரென்றால் துன்பங்களையே விரும்பாதவர்கள். ஆனால், இயேசுவின் பாதையில் வலியும், துன்பமும் நிறைந்தது. வலி மற்றும் துன்பத்தின் அடையாளமே சிலுவை. அதனால் 'விண்ணகமே தாய்நாடு' என்று பவுல் கொண்டிருந்த நம்பிக்கையை நமக்குக் காட்டுவது என்னவென்றால் இந்த எண்ணம் நம்மிடம் இருக்குமானால், நாமும் எப்போதும் உயர்ந்தவைப் பற்றியே எண்ணத் தொடங்குவோம் என்பதே ஆகும். தன் மக்கள் மீது அவருக்குள்ள அன்பை உச்சிமுகர்ந்துக் கொண்டடும் அவர் 'ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்“ என்று திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த அறிவுரைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1,7-8,9-13-14

பல்லவி: ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்க அடைக்கலம். யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? -பல்லவி

ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குலரைக் கேட்டருளும். என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ”புறப்படு அவரது முகத்தை நாடு” என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும். -பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.-பல்லவி


மன்றாட்டுகள்:


1.உடன்படிக்கையின் நாயகனே! எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறைமகன் இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர் வழியில் செல்லவும், எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான் இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று பற்றி நிற்பவர்களுக்கு எல்லா நாளுமே உருமாற்றம்தான்! என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தை பயன்படுத்த வேண்டி வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் திருத்தூதர்களைப் போல் வாழ்ந்திடவும், விண்ணகதே எமது தாய் நாடு, அங்கிருந்து வரும் இறைமகன் இயேசுவிற்காக காத்திருக்கவும், மாட்சிமைக்குரிய அவரின் உடல் போன்று உருமாற்றம் பெற்றிடவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நிலையான நாடு விண்ணகமே என்ற உணர்த்திய எம் இறைவா! அரசியல் தலைவர்கள் இவ்வுலகச் சொத்துக்களையும் புகழையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு மக்களின் நலன்கள் காக்கும் தன்னலமற்ற போக்கை கடைப்பிடிக்கவும், நாட்டில் நிலவும் குழப்பங்களிலும், வேலை நிறுத்தப் போராட்டங்களிலும் சமாதானப் போக்கை கையாண்டு விருப்பு வெறுப்புகளை விடுத்து விரைவில் மக்களுக்கு நல்லதோரு எதிர்கலத்தையும் வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் சிலுவை நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், மலை அனுபவத்தில் 'இவருக்குச் செவி கொடுங்கள்!' என்ற உமது கட்டளையை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

                       www.anbinmadal.org

Thursday, February 11, 2016

தவக்காலத்தின் முதல் ஞாயிறு 14-02-2016

தவக்காலத்தின் முதல் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


இணைச் சட்டம் 26:4-10
உரோமையர் 10:8-13
லூக்கா 4:1-13

முன்னுரை:


இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே!  தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் வரவு நல்வரவு ஆகுக. வருடம் ஒரு முறை திருச்சபை இயேசுவின் பாடுகளை மனதில் சிந்தித்து நம்மை மனமாற்றத்திற்கு மீண்டுமாய் அழைக்கிறது.  இறை மனித உறவைப் புதுப்பிக்கும் காலம். இருகிப்போன இதயங்கள் அன்பில் மீண்டும் துளிர்க்கும் காலம். ஆணவமும், சுயநலங்களும்  களையப்பட்டு புதிய வாழ்வு பெற அழைக்கப்படும் காலம். நாற்பது நாட்கள் என்ற காலக்கட்டம் விவிலியத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் காணலாம். இந்த நாற்பது நாட்களின் முடிவில் கிடைத்த வெற்றி அனுபவங்களை நாமும் பெற்று மகிழ அழைக்கப்படுகிறோம்.

உணவும், பாதுகாப்பும் இல்லாமல் நாடோடியாக நாற்பது ஆண்டு காலம் பயணித்திருந்த இருந்த இஸ்ரயேல் இனம் இன்று கைகளில் பழக்கூடைகளை ஏந்தி ஆலயத்தின் வாசலில் நிற்கிறதென்றால் அதற்குக் காரணம் இறைவனின் அருள். நம்பிக்கை அறிக்கையை உரோமைத் திருச்சபைக்கு வழங்குகிறார் பவுல். இந்த நம்பிக்கை ஒரு வாக்கியம்தான்: 'இயேசு ஆண்டவர்.' நன்மை - தீமை என்பது மனிதரின் தொடக்கமுதல் இருந்துவரும் ஒரு தேடல். எதற்காக இயேசு 'எங்களுக்குச் சோதனைகள் வேண்டாம்' என்று கற்பிப்பதற்குப்  பதில் 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைவேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும், அன்பும் உருவான எல்லாம் வல்ல கடவுள் ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் உள்ளத்தில் எழக்கூடியவை. இந்தக் கேள்விகளுக்கு பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும் - தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம். சாத்தனின் போராட்டங்களை வென்று வெற்றி பெறுவோம். இவற்றிக்கு தேவையான இறையருளையும் சாத்தனை வெல்ல உறுதியான மனத்திடதையும் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

 

வாசகமுன்னுரை:


இஸ்ராயேல் மக்கள் தங்கள் முதற்கனிகளை இறைவனிடம் காணிக்கையாக எடுத்து வரும் போது, அவர்கள் செய்யவேண்டியவற்றையும், சொல்ல வேண்டியவற்றையும் இன்றைய முதல்வாசகம் குறித்துக் காட்டுகிறது. வேர்கள் கசப்பானாலும், கனிகள் இனிமையானவை. நம் கைகளில் பழக்கூடைகளை நாம் ஏந்தி நிற்க வேண்டுமெனில், நாம் மண்ணில் கசப்பான வேர்படர்ந்து நிற்கவேண்டியது அவசியம். இஸ்ரயேல் இனம் பட்ட கஷ்டத்தின், அடிமைத்தனத்தின் பலன்தான் இன்று அவர்கள் ருசிக்கும் கனிகள். ஆக, நம் கசப்பான வேர்களையும், நம் கஷ்டங்களையும் நினைத்து நாம் கலங்கத் தேவையில்லை. இவ்வாறு இறையருளைப் பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முதல் வாசகமான இணைச்சட்டம் நூல் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

முதல் வாசகத்தில் உள்ள நம்பிக்கை அறிக்கையைப் போலவே இன்னொரு நம்பிக்கை அறிக்கையை உரோமைத் திருச்சபைக்கு  வழங்குகிறார் பவுலடியார். இந்த நம்பிக்கை ஒற்றை வாக்கியம்தான்: 'இயேசு ஆண்டவர்.' முதல் ஏற்பாட்டு இறைவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவித்து, பாலும், தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார். இரண்டாம் ஏற்பாட்டு இறைவன் பாவம் என்னும் அடிமைத்தனம் விடுத்து, மக்களை புதிய வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். இயேசுவில் கடவுள் இன்னும் அதிகம் நெருங்கி வருகின்றார் மனுக்குலத்தோடு. இயேசுவின் வருகை மனிதர்நடுவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் அழித்துவிடுகிறது. இவற்றை உணர்த்தும்  திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த இறைவார்த்தைகளை நம்பிக்கையுடன்  செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.


உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி

தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி

உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி

அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்;அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்;அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. -பல்லவி

மன்றாட்டுகள்:


1.எங்களுக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாக இருப்பவரே! எம் இறைவா!  தவக்காலத்தை தொடங்கியுள்ள உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் என எல்லோரும் நீர் அளித்த அருட்சாதனங்களின் மேன்தைகளை உணர்ந்து, அதன் வழியாக உமது இறையரசை அடைய வேண்டிய மனமாற்றத்தையும், அதற்கான தவவாழ்க்கையை மேற்க்கொள்ள திறந்த மனதையும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட இறைவா! எங்கள் குடும்பங்கள் தன்னலம் மறந்து உம்மைப் போல் அடுத்தவர்களின் வாழ்வு மலர  உளமாற உழைக்கவும், உமது நற்செயல்களை எங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வாழவும், மற்றவர்களையும் உமது இறையரசில் அழைத்து வர நற்சாட்சிகளாக மாறவும் வேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உள்ளத்து உண்மையை விரும்பும் எம் இறைவா!  அரசியல் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளக்கு பலியாகி தங்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும், சொந்தங்களையும், சொத்துக்களையும் இழந்து அநாதையாகவும், அகதிகளாகவும் நிற்க்கும் அபலை மக்களுக்காக உம்மை வேண்டுகிறோம். அவர்கள் இழந்ததை மீண்டும் பெற்று அமைதியிலும், அன்பிலும், வளமையிலும், உடல்நலத்திலும் சிறப்புற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்கொடைகளை வாரிவழங்கிடும் எம் இறைவா! இயற்கை என்னும் பெரும்கொடையை எங்களுக்கு கொடையாக, இலவசமாக  கொடுத்ததை, நாங்கள் சரியான முறையில் கையளும் திறமையின்றி, சுயநலவாதிகளின் தவறான வழிகாட்டுதலால் எல்லா இயற்கை செல்வங்களை இழந்து எங்களுக்கு நாங்களே இழைத்த தவறுகளுக்காக வருந்தும் இத்தருணத்தில் எங்களை மன்னித்து, எங்கள் வருங்கால தலைமுறையினருக்கு உமது இயற்கை கொடைகளை நல்லமுறையில் வழங்கிட வேண்டிய வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



Thursday, February 4, 2016

ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு 07/02/2016

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

முன்னுரை:


இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே!  ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு அன்புடன் அழைக்கப்படுள்ளோம். ஆம்! இன்றைய வாசகங்கள் இறைவன் நம்மை அழைக்கின்றார் என்ற செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் எத்தகையராக இருந்தாலும் நம்மை புடமிட்டு தூய்மைப்படுத்தி இறைவார்த்தைகளை அறிவிக்க பயன்படுத்துவார். அவரின் அழைப்பை ஏற்று நம்மை அவருக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கும்போது நாம் அவரில் வளர்கிறோம்.

இன்று அழைக்கப்பட்டவர்கள் மூவரும் சாதாரணமானவர்ளே! இந்த மூவரும் அழைக்கப்பட்டபோது தன் இயலாமையை  உணர்ந்திருந்தார். அந்த இயலாமையில் இறைஆற்றலைக் கண்டுணர்ந்தார்கள்.  மீனவரானப் பேதுரு திருச்சபையின் தலைவராக நியமனம் பெறுகிறார். ஏசாயா அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கை உரைக்க முடியும் என்ற அஞ்சியபோது இறைவன் அவரது உதடுகளைத் தூய்மைப்படுத்தி "நான் என்றும் உன்னோடு" என்று அனுப்பிவைக்கிறார். தடுத்து ஆட்கொள்ளப்பட்ட பவுலடியார் புறவினத்தாரின் திருத்தூதராக மாறுகிறார். இப்படி நம்மையும் தன் பணிக்காக அழைக்கும் இறைவனின் குரலுக்கு இதோ உமது அடிமை நானிருக்கிறேன் என்று உறுதியளித்து நமது இயலாமையை இறைவனின் ஆற்றலாக மாற்ற இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

 

வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவை இறைவாக்கு அளிக்க அழைத்த போது தன் அசுத்த உதடுகள் கொண்டவன்.அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு உரைக்க முடியும் எனத் திகைத்த நின்ற வேளையில் இறைவன் அவரின் உதடுகளைத் தூய்மைப்படுத்தி துணிந்து செல் தயக்கம் வேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன் என்று ஆறுதலும் தேற்றுதலும் தந்து அனுப்பி நிகழ்வுகளை  கவனமுடன் கேட்டு நம் மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார்  தன் கிறிஸ்துவர்களைத் துன்புறுத்தியதையும், இயேசு அவரை தடுத்து ஆட்கொண்டதையும், திருத்தூதர்களில் கடைசியானவராக இருந்தாலும் அவரை ஆட்கொண்ட இறையருளே அவரை இறைவாக்கு உரைக்க துணிச்சலையும் ஆற்றலையும் அளித்தது என்று தம்மையே தாழ்த்திக்கூறும் இந்த உண்மைகளை மனதின் ஆழத்தில் பதிவுச் செய்து இறைவனின் அழைத்தலை ஏற்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 138: 1-2. 2-3. 4-5. 7-8

பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி

உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

மன்றாட்டுகள்:


1.துணிந்து செல். நான் உன்னோடு இருக்கிறேன் என்றுரைத்த எம் இறைவா!   திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் உமது அழைப்பை ஏற்று துணிவுடன் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் உமது அருள்வாக்கை எடுத்துரைக்கவும், வாழ்ந்து காட்டிடவும் வேண்டிய வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நாங்கள் பேச வேண்டியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் எங்களுக்கு கற்றுத்தரும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் எசாயாவைப்போல் உமது அழைப்பை ஏற்று எங்கள் அருகில் உள்ளள ஏழைகள்,அநாதைகள், கைவிடப்பட்டோருக்கு எங்களால் இயன்ற உதவி செய்து உமது அன்பைப் பகிர்ந்து வாழவேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மாந்தர் அனைவரையும் ஆண்டு வருகின்ற இறைவா! எம் அரசியல் தலைவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக இலஞ்சம் தவிர்த்து மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும்,பொருளாதாரவளமும் பெற உழைத்திட வேண்டிய நல்ல மனதினைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கத்தின் உறைவிடமாகிய இறைவா, இன்றைய நற்செய்தி வாசகங்களில் நீர் அழைத்துபோல் நாங்களும் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து தூய்மையற்ற எங்களை தூய்மைப்படுத்தவும், எங்கள் இயலாமைகளை இறைஆற்றலாக மாற்றவும், உமது தூதர்களாக இவ்வுலகில் வலம் வரவும் வேண்டிய வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.