Tuesday, June 17, 2025

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா



இன்றைய வாசகங்கள்:

தொடக்க நூல் 14:18-20 
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

திருப்பலி முன்னுரை:

உலகம் உயிர்ப்புடன் இயங்க தன் உயிரைத் தானமாய் தந்து இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை இன்று அன்னையாம் திரு அவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. 
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்க தனது உடலையே உணவாகத் தந்து தனது ரத்தத்தை உயிர் வாழ உதவும் பானமாகத் தந்த இயேசுவின் பேரன்பை நினைத்து இன்று அன்னையாம் திரு அவை விழா எடுக்கின்றது. 
ஆம், தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப் போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 
நம்மை எவ்வாறு பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது ? நமது திறமைகளை, நமது உழைப்பை நமது நேரத்தை நமது பணத்தை நமது நல்ல மனதை பிறருக்கு தாராளமாய் தந்து உதவுவதன் மூலம் நம்மைப் பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.  
பகிர்தளிலும் இழப்பதிலும் கிடைக்கின்ற இன்பத்தைச் சுவைத்திட தம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நம்மை நேசித்த இயேசுவை நெருக்கமாய் நேசிப்போம். 
தன் உடலையும் உயிரையும் நமக்குக் கொடையாகத் தந்த இயேசுவின் வழியில் இரத்தத் தானம் உடல் உறுப்புத் தானம் போன்றவை செய்திட மனமுவந்து முன்வருவோம். கொடுப்பதில் இன்பம் பெறுவோம். இழப்பதில் நிறைவு காண்போம். அதற்கான அருளை இன்றைய திருப்பலியில் கொடையாகப் பெறுவோம்.  

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையின் நாயகனான ஆபிரகாமுக்கு உன்னத கடவுளின் குருவாக இருந்த மெல்கிசதேக் வாழ்த்து கூறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கொள்கிறது. குருத்துவம் என்னும் சிறப்பு அழைப்பைப் பெற்றவர்கள் நமக்கு ஆசீர் வழங்கும்போது அது பன்மடங்காக நிலைக்கிறது என உணர்ந்தவர்களாய் நமது ஞான மேய்ப்பர்களை மதிக்கவும் அவர்களிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் நம்மாலான தாராள செப, பொருள் உதவிகளை ஆலய பங்கு வளர்ச்சிக்கு வழங்கவும் இறையருள் வேண்டி முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.  

பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி…

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி…

4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி.

இரண்டாம் வாசக முன்னுரை :  

திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது நாம் கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உணவாக உட்கொள்கிறோம் என்பதாகும். கிறிஸ்துவை உணவாக உட்கொள்ளும் நாம் அவரது சாயலாக மாற வேண்டும். கிறிஸ்துவின் சாயலாக நமது வாழ்வு மாற அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம். 



கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
தொடர்பாடல் (குறுகியபாடம்)ஒலிவடிவில்

-----------------------------------------------
சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
1
எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.

உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
போற்றுதற்குரிய இப்பேருண்மை இன்று 
சிந்தனைக்கு ஏற்றப் பொருளே
2
தூய விருந்தின் பந்தியில் அன்று
பன்னிரு சோதரர் கூட்டம் அதற்கே
கிடைத்த உணவிது;  ஐயமேயில்லை.

ஆர்ப்பரிப்புடனே இனிமையும் கலந்த
நிறைபுகழ் கீதம் ஒலிப்பதோ டன்றி
மகிழ்வும் மனதில் பெருகிடுமே.
3
நல்ல ஆயனே, உண்மை உணவே,
இயேசுவே, எம்மேல் இரங்கிடுவீரே,
எமக்கு நல்அமுதே ஊட்டிடுவீரே.

நும் திருமந்தை எம்மைக் காத்து,
நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : 

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

1. “மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்கிற திருப்பாடல் வரிகளின்படி, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிக்குருத்துவத்திலும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், எங்களது பொதுக்குருத்துவத்திலும், பிரமாணிக்கமாக இருக்கவும், கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னதக் கடவுள்” ஆபிராமுக்கு ஆசி வழங்கியது போலவே, இவ்வுலகிற்கும், உலகாளும் தலைவர்களுக்கும், ஆசியும் ஞானமும் வழங்கும் அமைதியின் அரசராய் விளங்கவும், போர்கள், சண்டைகள், கலவரங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற தீங்குகள் யாவும் நீங்கப்பெற்ற நிம்மதியான சூழலை உருவாக்கித்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் “நற்கருணை இல்லையேல், திருஅவை இல்லை; குருக்கள் இல்லையேல் நற்கருணை இல்லை” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், நற்கருணை, குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் மேன்மையைப் போற்றவும், தேவ அழைத்தலுக்காக ஜெபிக்கவும், தேவ அழைத்தலை எங்கள் குடும்பங்களிலே ஊக்குவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம், ஆண்டவருடைய சாவை, அவர் வரும்வரை அறிவிக்கிறோம்” என்கிற நம்பிக்கையின் மறையுண்மையை, எங்கள் வாய்களால் மட்டுமல்லாமல், வாழ்க்கையாலும் அறிக்கையிடவும், ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்திலிருந்து பருகுவதன் மூலம், ஒன்றிப்பின் சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, அவற்றின்மீது ஆசிக் கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறச்செய்து, அனைவரும் வயிறார உண்ணச்செய்த ஆண்டவரே, எங்களது நற்கருணை பக்தியானது வழிபாட்டோடு நின்றுவிடாமல், பிறரோடு, குறிப்பாக வறியவரோடு, பகிருகின்ற வாழ்வாகத் தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 10, 2025

மூவொரு இறைவன் பெருவிழா 2025

மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31 
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இருந்தவரும்‌ இருப்பவரும்‌ வரவிருக்கின்றவருமான தந்தை, மகன்‌, தூய ஆவியார்‌ என்னும்‌ தூய்மைமிகு மூவோரு இறைவனின்‌ பெருவிழாவை சிறப்பிக்கத் திரு அவையாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ அன்புடன்‌ வரவேற்கின்றோம்‌.

விண்ணகத் தந்தை, மனிதனாக மண்ணிற்கு வந்த இறைமகன்‌ இயேசு, துணையாளராக நமக்குத் தரப்பட்ட தூய ஆவியாரால்‌ மூவரும்‌ இணைந்து மூவொரு இறைவனாக, ஒரே கடவுளாக, ஒரே எண்ணம்‌, ஒரே சிந்தனை, ஒரே சொல்‌, ஒரே செயல்‌ என யாவிலும்‌ இணைந்தவர்களாக இருக்கிறார்கள்‌. குடும்பத்தைக் கட்டியெழுப்ப கடவுளால்‌ படைக்கப்பட்ட இறைமக்கள்‌ சமூகமாகிய நாம்‌ ஒவ்வொருவரும்‌ மூவோரு இறைவனின்‌ சாயலை நமதாக்கி வாழும்போது நமது குடும்பங்கள்‌ ஒற்றுமையின்‌ விளைநிலமாக, மகிழ்ச்சியின்‌ பிறப்பிடமாக, நன்மைகளின்‌ ஊற்றாகத் திகழும்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக விசுவாசத்தின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை நமது இறுதி நியத்தீர்ப்பின்போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும் நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன். அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கைப்படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி : 

அல்லேலூயா, இருந்தவரும்‌ இருக்கின்றரும்‌ வரஇருக்கின்றவரும்‌ எல்லாம்‌ வல்லவருமான கடவுள்‌, தந்‌ைத, மகன்‌, தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிற இந்நாளில், மனித அறிவினால் புரிந்துகொள்ள முடியாத, இந்த நம்பிக்கையின் மறைபொருளை, உணர்ந்து, உள்வாங்கி, கூட்டொருங்கியக்க திருஅவையாய் விளங்குவதன்மூலம், பறைசாற்றிடத் தேவையான அருளினை, எம்திருத்தந்தை லியோ அவர்களுக்கும், ஏனைய திருஅவை தலைவர்களுக்கும், இறைமக்களாகிய எங்களுக்கும் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பூவுலகு உண்டாகுமுன்னே இருந்து செயலாற்றிய இறைவனின் ஞானம், மனித உள்ளங்களிலும், குறிப்பாக உலகத்தலைவர்கள், மற்றும் எங்கள் நாட்டுத்தலைவர்கள் மனங்களிலும் செயலாற்றி, திரித்துவக் கடவுளிடம் நாங்கள் கற்றுக்கொள்ளுகிற ஒற்றுமை, இணைந்த செயல்பாடு, போட்டிகள் துறந்து அமைதியில் நிலைத்தல், ஆகிய நற்குணங்களின்படி வாழவும், ஆளவும் வேண்டிய அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், குடும்பம் என்கிற குட்டித்திருஅவையைக் கட்டியெழுப்பிட வேண்டுமென்றும், தாய், தந்தை, கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், சுற்றம் சூழல் ஆகிய அனைவரும், மேட்டுமை எண்ணங்களை விட்டொழித்து, திரியேக இறைவனில் இருக்கிற ஒரே சிந்தனை, ஒத்துணர்வு, ஒன்றித்த செயல்பாடு ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டு, அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம்' என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்து, அந்த உன்னத நிலையில் என்றும் நிலைத்திருக்க வேண்டிய அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் துணையுடன், “துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும்” என்றும் “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” என்றும் நம்புகிற திருக்கூட்டமாய், நாங்கள் விளங்கிட வேண்டுமென்றும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, என்றைக்குமே எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, June 2, 2025

தூய ஆவியாரின் பெருவிழா 2025

 தூய ஆவியாரின் பெருவிழா

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg/500px-Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26

திருப்பலி முன்னுரை :

இணைந்து பயணிக்கும்‌ அன்பியமாகத் திரு அவையை வழிநடத்தக்கூடிய பெந்தகோஸ்து பெருவிழா எனச் சிறப்பிக்கத் திருச்‌சமூகமாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ பாசத்தோடு வாழ்த்தி வரவேற்கின்றோம்‌. தூய ஆவியாரின்‌ திருவிழாவை அன்னையாம்‌ திரு அவை தனது திரு அவையின்‌ பிறப்பு பெருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது. உடைந்து சிதைந்து கிடந்த திருத்தூதர்களை ஒன்றிணைத்து உலகெங்கும்‌ சென்று படைப்பிற்கெல்லாம்‌ நற்செய்தியை பறைசாற்றக்கூடிய கருவிகளாக உருவாக்கியவர்‌ தூய ஆவியாரே.
அடுத்து என்ன செய்யலாம்‌ என்று கலங்கி நின்ற திருத்தூதர்களுக்கு ஆண்டவரைப்‌ பற்றிய நற்செய்தி அகிலமெங்கும்‌ எடுத்துரையுங்கள்‌ என உள்ளொளி தந்து உடனிருந்து வழிநடத்தியவர்‌ தூய ஆவியார்‌.
தூய ஆவியாரின்‌ துணையோடு இயங்குபவர்கள்‌ கடவுளின்‌ மக்கள்‌ என்பதை உணர்ந்து உண்மை, அன்பு, நீதி, நேர்மை, கனிவு, தாழ்ச்சி என்னும்‌ தூய ஆவியாரின்‌ கனிகளாலும்‌ வரங்களாலும்‌ நிரப்பப்படவும்‌ புதிய கல்வி ஆண்டுத் தொடங்கவிருக்கும்‌ இந்நாள்களில்‌ நமது குழந்தைகள்‌ அறிவிலும்‌ ஞானத்திலும்‌ சிறந்து விளங்கித் தூய ஆவியாரின்‌ துணையோடு சிந்திக்கவும்‌ படிக்கவும்‌ கல்வி ஆண்டின்‌ தொடக்கமுதலே ஞானத்தோடு பாடங்களை உள்வாங்கிக்‌ கொள்ளவும்‌
இறையருள்‌ வேண்டிக் கல்வாரி பலியில்‌ பக்தியோடு பங்கெடுப்போம்‌…

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:
1. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது.  
2. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 
இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல் மொழிகளில் பேசினர். இந்தத் துணிச்சலை  நாமும் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல் 

திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் கடவுளின் பிள்ளையென அழைக்கப்பட முடியும். எனவே, அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
 

*********  தொடர் பாடல்  பாடல் இசையுடன்  *********   

தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.  

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.

1. அன்பு இறைவா ! எல்லோரோடும்‌ அமைதியுடன்‌ வாழுங்கள்‌ என்ற மகிழ்வின்‌ செய்தியை நற்செய்தியாக எங்களுக்கு வழங்கக்கூடிய திருத்தந்தை, ஆயாகள்‌, அருள்பணியாளர்கள்‌, இருபால்‌ துறவறத்தார்‌
செல்லும்‌ இடமெல்லாம்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு பயணிக்க வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

2. நாட்டை வழிநடத்தக்கூடிய நாட்டுத்‌ தலைவர்கள்‌ தூய ஆவியாரால்‌ வழங்கக்கூடிய ஞானத்தையும்‌ விவேகத்தையும்‌ கொடையாகக்‌ கொண்டு தூய ஆவியாரின்‌ கனிகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி,
பரிவு என்ற பண்புகளால்‌ தொடர்ந்து வழிநடத்த வரம்‌ தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்‌.

3. தூய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்ற மொழிந்த அன்பு இறைவா ! திருமுழுக்கின்‌ வழியாக நற்செய்தி பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும்‌ திரு அவையின்‌
கடமைகளையும்‌ தேவைகளையும்‌ உணர்ந்து இறையன்பிலும்‌ பிறர்‌ அன்பிலும்‌ வளர வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

4. உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பு இறைவா! புதிய கல்வி ஆண்டில்‌ காலடி எடுத்து வைக்க இருக்கும்‌ எம்‌பங்கு மாணவ செல்வங்களுக்காகவும்‌ அவர்களை அறிவிலும்‌ ஞானத்திலும்‌ பக்தியிலும்‌ ஒழுக்கத்திலும்‌ வளர்த்‌தெடுக்கக்கூடிய கடமையை ஏற்றுள்ள எல்லா ஆசிரியர்களுக்காகவும்‌ வேண்டுகின்றோம்‌. இவர்கள்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு மனிதநேய மாண்புகளில்‌ சிறந்து விளங்கிட வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.



https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, May 28, 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபேசியர் 9:24-28;10:19-23
லூக்கா 24 :46-53

திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லைவரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள்மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

1. மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

2.  ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

3. ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:

1. ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்நாளில் “இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று சீடர்களுக்குப் பணிக்கப்பட்ட கடமையை நினைவு கூர்கிறோம். இறைமக்களாகிய நாங்கள் யாவரும், உலகின் எல்லாத் திசைகளிலும், உம்முடைய உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும், எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ, மற்றும் திருஅவைத் தலைவர்கள் அனைவரும், சாட்சிய வாழ்வில் நாங்கள் நிலைத்திருக்க, எங்களைத் துடிப்புடன் வழிநடத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அவர்கள் கண்கள் முன்பாக மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டவரை, அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சீடர்களைப் போன்று, நாங்களும் எங்கள் கண்களை உம்மை நோக்கி உயர்த்துகிறோம். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்து ஆட்சி செய்கிற நீர், உலகிற்கு அமைதி அருளவும், போர், கலவரம், வன்முறை, தீவிரவாதம் ஆகிய கொடுமைகளிலிருந்து மானுடத்தை மீட்கவும், அமைதிக்காக உழைக்கும் நல்மனதினை, நாடாளும் தலைவர்களுக்கு நல்கிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குருவாக விண்ணகம் நுழைந்து, விண்ணக வாயிலைத் திறந்து வைத்துள்ள இறைமகனே, இறைமக்கள் அனைவரும், மண்ணுலகத் தேவைகளில் புதையுண்டு போகாமல், விண்ணுலகுச் சார்ந்தவற்றை நாடுகின்ற ஊக்கம் நிறைந்த எதிர்நோக்கின் பயணிகளாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். உறுதியான நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்வோமாக” என்கிற திருமுக வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் உம்மை அணுகி வருகிறோம். இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறைகள் யாவும் நீங்கப்பெற்ற நிறை வாழ்வைப் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்ற உம்மொழிக்கேற்ப, தூய ஆவியாரின் துணையோடு செம்மையான வாழ்வை நாங்கள் மேற்கொள்ளவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்குகிற இவ்வேளையில், மாணவ மாணவியர் அனைவரும், ஆசிரிய பெருமைக்களும், ஆவியின் வரங்களாலும் கொடைகளாலும் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, May 18, 2025

பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு 21: 10-14,22,23
யோவான் 14 :23-29

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் அருளும் அமைதியைப் பெற்றுக் கொள்ள, பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராகிய துணையாளர் பற்றியும், அவர் நம்மோடு இருந்தால் நம்மை அவர் எவ்வாறெல்லாம் வழிநடத்துவார் என்பது பற்றியும் இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, என் பெயரால் வரும் தூய ஆவியார் உங்களுக்குத் துணையாளராக இருந்து அனைத்தையும் கற்றுத்தருவார், நினைவூட்டுவார், நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம் என்று தூய ஆவியார் துணை கொண்டு துணிவுடன் நடக்க நம்மை அழைக்கிறார்.
இதே தூய ஆவியானவர் கிடைக்கப் பெற்ற துணிவுடன், எருசலேம் சங்கத்தில் விருத்தசேதனம் பற்றிய கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, தைரியமாகவும், துணிவுடனும், நாங்களும் தூய ஆவியாரும் சேர்ந்து தீர்மானித்தோம் என்று பவுலும் பர்னபாவும் கூறுகின்றனர்.
புனித யோவானும் தூய ஆவி என்னை ஆட்கொண்டதால்தான் திருக்காட்சிகள் தமக்குக் கிடைத்ததாகக் கூறுகின்றார்.
ஆவியானவர் நம்மோடு இருக்கும்போது ஆண்டவர் அருளும் அமைதி நம்மிடையே என்றென்றும் நிலைத்து நிற்கும். இறைப் பிரசன்னம் நம்மை, அன்பால், அமைதியாய், மகிழ்ச்சியால் நிரப்ப வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை : 

இன்றைய முதல் வாசகம் திரு அவையின் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்பற்றிய திருத்தூதர்களின் போதனைகளை எடுத்துரைக்கின்றது. விருத்தசேதனம் தேவையா என்ற சந்தேகம் எழுந்தபோது, அது தேவையில்லை என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம் என்று புனித பவுலும் பர்னபாவும் கூறும் வார்த்தைகளுக்கு
செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை : 

இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக எருசலேம் குறித்த புனித யோவானின் காட்சியை எமக்கு எடுத்துரைக்கின்றது. கடவுளின் மாட்சியால் நிறைந்து ஒளிவீசிய அந்த நகருக்கு பன்னிரு வாயில்கள் மற்றும் அவற்றில் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன என்பதை விவரிக்கும் வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : யோவா 14:23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு இதனை நான் ஒரு நல்ல அறிவுடன்  அறிந்து கொள்ளவும், எனக்குத் தெரியும்.  அதற்கு  என்னால் முடியும்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1. “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்” என உறுதியளிக்கும் ஆண்டவரே, எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தூய ஆவியாரின் துணையோடு எமை வழிநடத்தவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், ஒன்றுபட்ட திருச்சமூகமாய்ப் பின்தொடர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றுரைத்த இறைவா, உலகெங்கிலும், குறிப்பாக, எங்கள் இந்திய பாக்கிஸ்தான் எல்லையிலும், நிலையான அமைதி நிலவவும், “மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!” என்கிற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, நாடாளும் தலைவர்களும், குடிமக்களும், உமக்குப் புகழ் சேர்க்கும் வழிதனில் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.” எனப் புதிய எருசலேமைச் சித்தரிக்கும் திருவெளிப்பாடு நூல் கூறுவதுபோல, பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள எம்மாணவச் செல்வங்களும், அவர்களது பெற்றோர்களும், இறைவன் அருளுகிற ஒளியிலும், கடவுள் தருகிற வழியிலும் பயணித்து, சிறந்ததோர் எதிர்காலத்தைப் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்” எனக்கூறி சீடர்களைத் திடப்படுத்திய இறைவா, தோல்வி, உடல்நலக்குறைவு, பணப்பற்றாக்குறை, ஏமாற்றம் போன்ற பல்வேறு இன்னல்களால் சோர்ந்துபோயிருக்கும் அனைவரும், மீண்டும் திடம் பெற்று, எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்” என்ற உம்மொழிக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம் சொற்படி நடக்கவும், தந்தையாகிய கடவுளும், திருமகனாகிய நீரும், தூய ஆவியாராகிய துணையாளரும் என்றென்றும் எம்மோடு குடிகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


                                                                      Print Friendly and PDF

Tuesday, May 13, 2025

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

  பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

Gospel of John 13:31-33A, 34-35 - Fifth Sunday of Easter Year C - Articles,  Commentaries, Homilies

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

அன்பு இறைமக்களே, பாஸ்கா காலத்தின் 5ஆம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். முழு விவிலியமும் நமக்குக் கூறும் ஒரே கருத்து அன்பு ஒன்று தான். கடவுள் அன்பாயிருக்கிறார். நாமும் அன்பாய் இருப்போம் இக்கருத்தினையே இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆண்டவராகிய இயேசு, "ஒருவர் மற்றவரிடம் அன்புச் செலுத்துக்கள்” என்ற புதிய கட்டளையைக் கொடுக்கிறார். ஏனெனில், இன்னும் சிறிது காலம்தான் அவர் சீடர்களோடு இருப்பார். தான் இல்லாமல் சீடர்கள் இவ்வுலகத்தினை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையானது அன்பு. ஏனெனில் ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்குத் தேவை அன்பே என்பதை உணர்ந்திருந்தார். இதனையே இன்னும் ஆழமாக1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் எடுத்துக்கூறுகிறார் புனித பவுல்.
இந்த அன்பினால் உந்தப்பட்டவர்களாய் புனித பவுலும் பர்னபாவும், ஊர் ஊராக, நகர் நகராகச் சென்று மக்களை இறையாட்சியின்பால் நிலைத்திருக்க ஊக்குவிக்க முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகமும், அன்பு நிறை இறைச் சமூகமாக நாம் வாழ்ந்தால் மட்டுமே. புதிய மண்ணகத்தையும, புதிய விண்ணகத்தையும் நம்மால் காண முடியும் என்பதை இரண்டாம் வாசகமும் எடுத்துக் கூறுகின்றன. இயேசுவின் அன்புதான் நம்மை ஒன்று சேர்க்கிறது. அவரின் அன்பு நம்மிடையே இருக்குமானால் நாமும் அவரின் சீடர்களாக இருப்போம். அவரின் அன்புச் சீடர்களாய் அவரின் அன்பை விதைப்போம், அன்பு நிறை இறைச் சமூகத்தினைக் காண்போம் என்ற எதிர்நோக்கோடு இத்திருப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை :

பவுலும் பர்னபாவும்  மனம் தளர்ந்தவர்களுக்கு  'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்திய நிகழ்வை எடுத்துக்கூறுகிறது. பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு நாம் உட்பட முடியும் என்று அறிவுரை வழங்கும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் பற்றிக் கூறுகிறார். நம் கண்ணீர் அனைத்தையும் துடைக்கும் கடவுளின் மக்களாக வாழ நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம். சாவு, துயரம், அழுகை இல்லாத புது வாழ்வை வழங்கக் கடவுள் வல்லவராய் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கைக் கொண்டு வாழ அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா! “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தாங்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்துவதிலும், நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவிப்பவதிலும் சிறந்தோங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், பிற இனத்தவர்க்கு நம்பிக்கைக் கொள்ளும் வாய்ப்பினைக் கொடுத்ததையும், பவுலடியாரும் பர்னபாவும் அறிவித்தது போல, "கிறிஸ்து என்னும் ஒருவரில் நாம் அனைவரும் ஒன்றே" என்கிற விருதுவாக்கோடு, தம் திருப்பணியைத் தொடங்கியுள்ள எம்புதிய திருத்தந்தையுடன், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றித்துப் பயணிக்கவும், ஒளியாம் கிறிஸ்துவை உலகிற்கு அறிவிக்கவும் அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறி அரியணையில் வீற்றிருக்கும் ஆண்டவரே, தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் சூழல்களால் அவைதியுறும் எம்தேசத்தையும் பிற நாடுகளையும், நீர் தாமே அமைதியின் பாதைக்கு மீண்டும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார்; அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார்” என்கிற இரண்டாம் வாசக இறைவாக்கு, இன்னலுறும் இவ்வுலகிற்கும், எங்கள் அனைவருக்கும், ஆறுதலாக இருப்பதோடு, எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்கவும் உதவிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையின் பொருளை உணர்ந்தவர்களாய், முதன்முதலில் எங்கள் குடும்பத்திலும், அதன் பின்னர் நாங்கள் வாழ்கிற பங்கிலும், சமூகத்திலும், ஒருவர் ஒருவருக்கு அன்புச் செலுத்தவும், அதன் மூலம், நாங்கள் உம் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Print Friendly and PDF

Thursday, May 8, 2025

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:

ஆண்டவரின்‌ குரலுக்குச்‌ செவிசாய்க்க அழைக்கும்‌ பாஸ்கா காலத்தின்‌ 4ஆம்‌ ஞாயிறு திருப்பலிக்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்‌.  
இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌, நல்ல ஆயனாக இருந்து தன்‌ ஆடுகளை வழிநடத்தும்‌ இயேசுவை நாம்‌ பார்க்கிறோம்‌. ஆயனின்‌ வார்த்தைகளை ஏற்று அவர்பின் தொடர்ந்தால்‌ நிலைவாழ்வை அளிப்பதாக வாக்கு கொடுக்கிறார்‌ நம்‌ ஆண்டவர்‌.  
இதையே யூத மக்களைப்‌ பார்த்து எடுத்துக்‌ கூறுகிறார்கள்‌. புனித பவுலும்‌ பர்னபாவும்‌. கடவுளின்‌ வார்த்தைகளை உதறித்‌ தள்ளினால்‌, நீங்கள்‌ நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ளமாட்டீர்கள்‌. அவ்வார்த்தைகளை யார்‌ ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள்‌ நிலைவாழ்வுக்குத்‌ தகுதியுடையவர்கள்‌ என்று. முதல்‌ வாசகத்தில்‌ கூறுகிறார்‌. இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித யோவானோ, ஆயனாம்‌ இருப்பவரே ஆட்டுக்குட்டியாய்‌ மாறி நமக்கு நிலைவாழ்வுப்‌ பெற்றுக்கொடுப்பவர்‌ என்றும்‌ கூறுகிறார்‌.  
நூறு ஆடுகளில்‌ ஓர்‌ ஆடு செவிகொடுக்காமல்‌ தப்பிப்‌ போனாலும்‌ அந்த ஆட்டையும்‌ கண்டுபிடித்துத் தன் மந்தையில்‌ சேர்க்கும்‌ நல்ல ஆயனாம்‌ இயேசு இன்று நம்மையும்‌ அவர்‌ வார்த்தைகளுக்குச்‌ செவிகொடுக்க அழைக்கிறார்‌. நிலைவாழ்வைப்‌ பெற்றுக்கொள்ள நாமும்‌ நல்ல ஆடுகளாய்‌ அவரைப்‌ பின்‌ தொடரும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ இணைந்து வேண்டுவோம்‌.    

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதைக் கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் மீட்பிற்காகத்‌ தன்னையே கையளித்த அந்த ஆட்டுக்குட்டியின்‌ இரத்தத்தில்‌ துவைத்தெடுத்த வெண்ணிற ஆடையை அணிந்தவர்கள்‌ மட்டுமே இறைவனின்‌ அரியணைக்கு முன்பாக நிற்கத்‌ தகுதி பெற்றவர்கள்‌ என்று நமக்குத் தெளிவுப்படுத்தும் இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன” என்றுரைத்த நல்லாயனே இறைவா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை  14 -ஆம் லியோ அவர்களை நீர் தாமே தாங்கி வழிநடத்த வேண்டுமென்றும், திருஅவையானது, அவரது தலைமையின் கீழ் உமது வழியில் நடக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்” என்கிற இரண்டாம் வாசக கூற்றின்படி, எங்கள் இந்திய எல்லையில் நடைபெறுகிற தீவிரவாதத் தாக்குதல்கள் முற்றிலும் ஒழித்தழிக்கப்படவும், இந்திய-பாக்கிஸ்தான் எல்லையில் நிலவுகிற போர் பதட்டங்கள் நீங்கி, அமைதி திரும்பவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள மாணவச்செல்வங்கள், விரும்புகிற கல்லூரிகளில், விரும்புகிற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கிற வாய்ப்பினை நீர் உருவாக்கித்தர வேண்டுமென்றும், அவர்களும் அவர்களது பெற்றோர்களும் சரியான பாதையைத் தெரிவு செய்ய நீர் தாமே உதவ வேண்டுமென்றும், தோல்வியுற்ற மாணவர்கள் துவண்டு போகாமல் மீண்டும் மும்மரமாய் உழைத்து வெற்றிபெற  வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர்” என்கிற முதல்வாசக உண்மைக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நம்பிக்கையில் நிலைத்திருந்து, எதிர்நோக்கில் பயணித்து, பிறரன்பில் வளர்ந்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.     தேவையான உம் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF