Thursday, September 2, 2021

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

 


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

 
எசாயா 35:4-72.    
யாக்கோபு 2:1-53.   
மாற்கு 7:31-37

திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை அன்புநேசர் இயேசுநாதரின் பெயரால் வாழ்த்துகிறோம். “முழு மனித வாழ்வே இறைவனின் மகிமை” என்பதை இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. கடவுளின் கட்டளைகளை மீறி அருள்வாழ்வை இழந்தபோது அறிவுரையோடு இரக்கம் காட்டிய யாவே கடவுள், தன் மக்களாகிய இஸ்ரயேலரை “அஞ்சாதே. நான் உன்னோடு” என்று திடப்படுத்துகின்றார் எசாயா இறைவாக்கினர் மூலமாக.

ஊனங்களே நம் வாழ்வுக்குத் தடையாக இருப்பதையும், அவற்றைத் தனிக் கவனத்துடன் குணப்படுத்து இறைமகன் இயேசுவை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஊனமுற்றோரை ஒன்றுமில்லாதவராக, ஒன்றுக்கும் உதவாதவராக இந்தச் சமுதாயத்தால் ஒதிக்கி வைக்கப்பட்ட அவருக்கு இயேசு முக்கியத்துவம் தருகிறார். அவரைத் தொட்டுக் குணமளிக்கின்றார். .
.
மாற்றுத்திறனாளிகள் மட்டில் நாம் கொண்டிருக்க வேண்டிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவின் செயல்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. எனவே நம் இதயங்களை ஆண்டவருக்குத் திறந்து வைப்போம். இரக்கத்தோடு உண்மையைப் பேசி நன்மையைச் செய்யும் பண்பை நமதாக்கிட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் “அஞ்சாதே! நான் உன்னோடு” என்று ஆறுதல் கூறித் திடப்படுத்துகிறார். பாலைநிலத்தில் நீரூற்றுகள் பெருகச் செய்தும், வாய்பேசாதோர் பேசுதையும், காதுகேளாதோரின் காதுகள் திறக்கப்படுவதும், ஊனமுற்றோர் குணமடைவதையும் குறிப்பிட்டு மெசியாவின் வருகையை அம்மக்களுக்கு எடுத்துரைப்பதை விளங்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;  சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். –பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.  ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.  சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

முழு மனித வாழ்வுக்குத் தடையாக விளங்கும் பண்பு என்னவென்றால் பிறரின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவது, அவர்களிடமிருக்கும் பணத்தை வைத்துப் பிறரை நடத்துவது. இந்த அவலத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடிந்துக்கொள்வதை இவ்வாசகத்தின் மூலம் மனதில் பதிவு செய்வோம். மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் எப்படிச் செயல்படவேண்டுமென்று கற்றுக்கொள்வோம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத்தந்தையே இறைவா, உம் இறைபணியில் தம்மையே இறைவாழ்வில் இணைத்துக் கொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் உம் விண்ணகக் கொடைகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காத்து, ஒளியின் மக்களாக வாழத் தேவையான அருளை நிறைவாகப் பெற வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மண்ணுலகில் மனித நேயத்தை வளர்த்த எம் அன்புத் தந்தையே இறைவா, உம்மிடம் நல்லவற்றைப் பெற்றுக் கொண்டு வாழ விரும்பும் நாங்கள் மண்ணில் மனித நேயம் மலரவும், மனித மாண்புத் தழைத்தோங்க உமது தூய ஆவியின் கனிகளைப் பெற்ற மக்களாக வாழ வரம் அருள வேண்டுமென்ற இறைவா உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்..

3. காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்துணர வைக்கும் எம் இறைவா! எம் நாட்டில் அமைதி நிலவ, நிலையான நல்லாட்சித் தேசத்தில் மலர, தகுதியுள்ள நல்உள்ளம் படைத்த புதிய தலைவர்கள் உருவாகி, ஏழைகளின் வாழ்வு மலரவும், ஏழை விவசாயிகளின் நலனில் முழு அக்கறை செலுத்தும் நல் உள்ளம் படைத்த தலைவர்கள் தந்திட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

4. எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக உள்ள எம் ஆசிரியர் பெருமக்களை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் அருள் வாழ்வில் சிறந்து விளங்கிடவும், சிறந்த நல்சான்றோர்களை இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வழங்கிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையான சமயநெறி என்பது ஏழை எளியவர், அனாதைகள், புறக்கணிக்கப்பட்டோர், கைம்பெண்களை ஆதரிப்பது என்று உணர்த்திய இறைவா, இத்தகைய சின்னஞ்சிறிய மக்களுக்கு எங்களால் இயன்ற உதவி செய்யவும், உலகம் முழுவதும் புலம் பெயந்த மக்கள் காக்கப்படவும், நிம்மதியாக வாழ்க்கப் பெறவும் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Print Friendly and PDF 

No comments:

Post a Comment