Friday, September 10, 2021

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் வாரம்

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் வாரம்


இன்றைய வாசகங்கள்:

ஏசாயா 50:5-9
யாக்கோபு 2:14-18
மாற்கு 8: 27-35

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு இயேசு கிறிஸ்துவின் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு ஆலயம் வந்துள்ள இறைமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!

இயேசு கேட்கும் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பது, வெறும் கேள்வி அல்ல. இஃது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்விப் பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். "இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீணாகிவிடும்.

இயேசுவை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு.
இந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கைத் தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.

செயலாற்றும் நம்பிக்கைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசக இறைவார்த்தைகள் கடவுளுடைய மீட்புத் திட்டம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறது. மெசியா துன்புறும் ஊழியனாக இருப்பார். அவர் நிந்தனை செய்யப்படுவார். காறி உழிழ்ப்படுவார். இப்படி அவர் பாடுகள் பலபடுவார் என்கிறார் இறைவாக்கினர் ஏசாயா. இதன் மூலம் பாடுகளே மீட்பின் வழி என்பதை வெளிப்படுத்தும் மீட்பின் திட்டத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 116: 1-2, 3-4, 5-6, 8-9

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். -பல்லவி

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். -பல்லவி

ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி

என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.  உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வதே பிறர்நலம். நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்றுகூறுகிறார். இன்றைய நற்செய்திக் கேள்விக்குப் பதிலாக அமைய இவ்வாசகத்தை நம் உள்ளத்தில் பதிவுப் செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

உண்மை உணர்வைத் தூண்டியெழுப்பும் ஒப்பற்ற இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் துன்பங்கள் வருவதைக் கொண்டு துவண்டு விடாமல் துணிந்து நிற்கவும், துன்பத்திற்குப் பின் இன்பமும், உயிர்ப்பும் உண்டு என்ற நம்பிக்கையில் செயல் பட வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இடர்பாடுகள் நீக்கும் இணையற்றத் தலைவா! சிலுவை வழியாக உலகை வென்ற இயேசுவின் சீடர்களாகிய நாம் நம் அன்றாட வாழ்க்கைச் சிலுவைகளை மனமுவந்து சுமக்கவும், தன்னலம் மறந்துப் பிறர் நலம் பேணவும், எல்லோருக்கும் நன்மைச் செய்த இன்புற்று வாழவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

ஆள் பார்த்துச் செயல்படாத அன்பிறைவா! எல்லாருக்கும் எல்லாம் பெற எம் நாட்டுத் தலைவர்கள் எந்த ஒருபாகுபாடு பார்க்காமல் மனித நேயம் கொண்டு அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்திடவும், நாட்டில் அமைதி நிலவிடவும், மக்களிடையே சமத்துவம் காணவும் வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

வளங்களை வாரி வழங்கி உள்ளங்களை நெறிப்படுத்தும் இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும், அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குணமளிக்கும் மருத்துவரே ! எம் அன்பு இறைவா! தொற்றுநோயிலிருந்து எங்களை காத்து வந்தவரே! நோயின் பாதிப்பிலிருந்து விடுதலை கொடுத்து, மூன்றாம் அலையிலிருந்து எங்கள் மாணக்கர் அனைவரையும், அவர்கள் கல்வியில் கவனமுடன் ஈடுபட தேவையான ஞானத்தையும், உறுதியான மனநிலையைம் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


www.anbinmadal.org
Print Friendly and PDF

No comments:

Post a Comment