ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எண்ணிக்கை 11:25-29
யாக்கோபு 5:1-6
மாற்கு 9:38-48
திருப்பலி முன்னுரை:
இன்று ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்தி மனிதனின் பொறமையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசேயின் கூட்டத்தில் இல்லாமல் கூடாரத்தில் இருந்த இருவர் இறைவாக்கு உரைக்கின்றார்கள். மோசே தடுக்கவில்லை. அஃது அவரின் தாராளக் குணத்தைக் காட்டுகிறது. திருத்தூதர் யாக்கோபு செல்வத்தின் நிலையாமையைப் பற்றித் தன் மடலில் விவரிக்கிறார். நாம் நலிந்தவர்களுக்கு எதிராகச் செயல்படும்போது இறைவனுக்கு எதிராய் நாம் செயல்படுகிறோம். அநீதியாகச் செல்வம் சேர்க்கும் முயற்சியை எதிர்க்கிறார்.
இன்று இயேசு மூன்று செய்திகளை முன்வைக்கிறார். பொறமையால் எழுந்த குற்றச்சாட்டு, மக்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு, இடறலாயிருந்தால் கிடைக்கும் தண்டனை. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால்கூட அதற்குக் கைம்மாறு உண்டு. தீமை செய்யத் தூண்டுவதும் மாபெரும் தண்டனைக்குரியது. இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளின் பொருள் உணர்ந்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பரந்த மனப்பான்மையுடன் பங்கேற்போம்..
வாசகமுன்னுரை:
முதல்வாசக முன்னுரை
முதல் வாசகத்தில் எண்ணிக்கை நூலில் ஆண்டவரின் ஆவி எழுபது மூப்பர்கள் மேல் இறங்கி வந்த நேரத்தில், இவர்களின் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப்பற்றிப் புகார் தருகின்றார். ஆனால், மோசே பொறாமையினால் யோசுவா கூறியதற்கு அவரைக் கடிந்து கொள்கின்றார். அனைவரும் இறைவாக்கினராகும்படி ஆண்டவர் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு என்னும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 19: 7,9. 11-12. 13
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி
அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி
ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். –பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
யாக்கோபின் திருச்சபையில் எளியோர்-பணக்காரர் பிளவு அல்லது ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் திருமடல் இந்தப் பிரச்சினையை அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. கூடிவரும் சபைகளில் பணக்காரார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனவும், எளியோர் ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர் என்றும் சொல்லும் யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வத்தின் நிலையாமை பற்றிப் பேசுகின்றார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
அருட்கொடைகளை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையை உணர்ந்து நல்லதைச் சொல்லவும், செய்யவும் வேண்டிய பரந்தமனப்பான்மை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமக்கு நீர் அளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அன்புடன் நினைவு கூர்கிறோம். அவர் நல்ல உடல் நலம் பெற்று உம் பணிகளைச் சிறப்பாக செய்ய உமது வல்லக்கரத்தால் தாங்கி அவருக்கு வரும் இன்னல்களை் அனைத்திலிருந்த பாதுகாப்பைப் பெற்றிடவும் அவரின் திருப்பயணங்கள் உலகமக்கள் அனைவருக்கு இறைஆசீரை நிறைவாய் அளித்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
ஆள் பார்த்துச் செயல்படாத அன்பு இறைவா! இயேசுவைச் சார்ந்த சீடர்கள் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்து நிற்க அழைக்கப்படுகின்றனர். தங்களின் பசி மற்றும் தாகம் தீர்க்க மற்றவர்களின் உடனிருப்பு அவர்களுக்கு அதிகம் தேவை. இன்று நான் என்னை மட்டுமே சார்ந்து நிற்கும் முயற்சியில் இருக்கின்ற எம் தலைவர்கள் அடுத்திருப்பவரின்நலன்களில் கவனம் செலுத்த, அவர்கள் மனம் மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நன்மைக்கு நாயகனே இறைவா! எம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி எம்மையே நாங்கள் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர, விட்டுக்கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உம் மூலம் அறிந்து வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment