Tuesday, September 14, 2021

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானநூல் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

இன்றைய நாளில் இறைமகன் இயேசு தனது பாடுகளைப்பற்றி இரண்டாம் முறையாக வெளிப்படையாகவே அறிவிக்கிறார். ஆனால் சீடர்களோ அவர் எண்ணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் தங்களில் யார் பெரியவர் என்று வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். முதன்மையான மேன்மையான இடத்தில் இருக்க விரும்புபவர் கடைசி இடத்தில் இருக்கவேண்டும் என்று அவர்களைக் கடிந்துக்கொண்டார். சிறுகுழந்தையின் உள்ளத்தைக் கொண்டிருக்கவும், அவர்களை ஏற்றுக் கொண்டால் என்னையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று அறிவுறுத்துகின்றார்.

என் கைகளோ சிறியது. ஆனால் அவர் கரங்களோ பெரியது. எனவே நாம் எடுத்தால் குறைவாக வரும். அவராகக் கொடுத்தால் நம் கைகளில் நிறைய விழும்! என்று எதிர்நோக்கோடு காத்திருப்பதில் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, நன்மைத் தேடும் உள்ளமும், சிற்றின்ப நாட்டங்களைத் தள்ளிப்போடும் உள்ளமும் இருக்கின்றது. இந்த உள்ளம் நம்மிலும் இருக்கிறது! இதை நாம் உணர்ந்து கொள்ள இறைவன் நம் அகக்கண்களுக்கு ஒளிதருவாராக! என்ற எதிர்பார்ப்புடன் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் திறந்த உள்ளத்துடன் பங்கேற்போம்..அன்பு மற்றும் மனத்தாழ்மையுடன் அவரைப் பின்தொடரும் வலிமையை இறைமகன் இயேசு நமக்கு தந்திடுவார்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல்வாசகத்தில் பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிக வெற்றி அடைந்தாலும், இறுதியில் தோல்வியைத் தழுவுவார். மாறாகப் பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வியடைந்தாலும் இறுதியில் வெற்றி அடைவர். நல்லவர்களின் பொறுமையை நீதிமான்களின் பணியை உலகம் ஏளனம் செய்தாலும் கடவுள் நிச்சயம் அவர்களை உயர்த்துவார் என்று எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.

கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;  என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி

ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;  அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;  தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை, வெறுப்பு ஆகியவை கொண்ட மண்ணக ஞானம். விண்ணக ஞானமோ அமைதி, பொறுமை, விட்டுகொடுத்தல் இணக்கம் ஆகிய தெய்வீக பண்புகளில் மிளிர்கிறது எடுத்துரைக்கிறார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
                               

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடைப் பெறுவதைவிடப் பணிப் புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அல்லனவற்றை அழித்து நல்லனச் செய்யும் இறைவா! நேர்மையானவாழ்வு வாழவும், ஆணவபோக்கை விட்டு விட்டுக் குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும், அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா! பேராசையும் பொறாமையுமே சண்டைச் சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ, அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

4. வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! தொற்றுநோயின் தாக்கம் குறைந்து, கல்விமனைகள் திறக்கப்படவும், எங்கள் பிள்ளைகள் மீண்டும் தங்கள் பள்ளி பருவத்தை முழுமையாக அனுபவித்து, கல்வியிலும் பிறர் அன்பிலும், இறை நம்பிக்கையிலும் சிறந்து விளங்கத் தேவையான ஞானத்தையும், மன உறுதியையும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா! உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும் அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

www.anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment