Wednesday, June 7, 2023

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (11.06.2023)

  கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (11.06.2023)



 இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

இணைச் சட்டம் 8:2-3, 14ஆ-16அ
1 கொரிந்தியர் 10:16-17
யோவான்  6:51-58

 திருப்பலி முன்னுரை 

அன்புடையீர்,

இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.  நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும், இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.

அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக,  நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.

உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும், இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை, ஒன்றிப்பின் உணவை உண்டு  கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை 

முதல் வாசக முன்னுரை 

இன்றைய முதல் வாசகத்தில், தந்தையாம் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கடினமான காலங்களில், பாலைவனத்தில், அவர் தண்ணீரும்,  உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனைக் காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்குச் செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னம் மூலம், நமக்குத் தேவையானவற்றைத் தந்தை கடவுள் கொடுக்கிறார் என்பதை வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை 

நற்கருணையில் நாம் இயேசுவோடு இணைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு, இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்குத் தேவையானதை இறைவன் கொடுக்கிறார். மேலும், இந்த இணைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாகக் கிடைக்கவிருக்கிறது. இக்கருத்துக்களைக் கவனமுடன் கேட்டு நம் உள்ளத்தில் பதிவுசெய்வோம்.

பதிலுரைப்பாடல் 

பதிலுரை: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!.

திருப்பாடல்கள்  147: 12-13, 14-15, 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!  அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.  அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.  அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

1.அன்பின் ஊற்றான இறைவா!திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருக்கும் உமது மகனின் திருவுடல், திருஇரத்தமும் எம்வாழ்வின் நிறைஉணவாகவும், உடலுக்குத் திருமருந்தாகவும், ஒன்றிப்பில் அனைவருக்கும் ஊக்கமருந்தாகவும் செயல்பட்டு இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றான இறைவா! தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, எங்கள் குடும்பங்களின் உள்ள அனைவரும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் தம்மையே வழங்கும் வழிகளையும் தன்னலமற்ற தொண்டுள்ளமும் எமக்குத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின்  ஊற்றான இறைவா! மனித தவறுகளாலும், இயற்கைச் சீற்றங்களாலும் துயரத்தில் உள்ள உம் மக்களைக் கண்நோக்கும். அவர்களின் துயரங்களைத் துடைத்து வெள்ளங்களினாலும், விபத்துக்ளினாலும், சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் தழைத்தோங்கவும், இழப்புகளினால் வாடிவருந்துவோர்கள் அனைத்தையும் மீண்டும் நிறைவாய் பெற்றிட வேண்டிய வரங்களைத் தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிநறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நம்பிக்கையின் ஊற்றான இறைவா! உமது நம்பிக்கையாளரின் மீதும், அவர்களின் உடமைகளின் மீதும் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களிலிருந்து காத்து, மீண்டும் அங்கு அமைதி ஏற்பட்டு புதுவாழ்வு தொடங்க தேவையான புரிதலையும், சமுகநல்லுறவையும் ஏற்படுத்த வேண்டிய வரங்களைத் தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org


Print Friendly and PDF

5 comments:

  1. Festival manratu, munnurai send please

    ReplyDelete
  2. sunday mass munnurai sent please

    ReplyDelete
  3. 18.06.2023 sunday Mass Munnurai sent please

    ReplyDelete
  4. Coming Sunday mass munnurai plz

    ReplyDelete
  5. 18 6 2023 munnurai pls

    ReplyDelete