Monday, June 19, 2023

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 25.06.2023

  பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 25.06.2023



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு. சிட்டுக் குருவிகளைவிட மேலான விலையேறப்பெற்றவர்களாகிய இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
இன்றைய நற்செய்திகளில் ஆழமாக நம் இதயங்களில் பதிவு செய்யப்படும் செய்தி எதுவென்றால் அஞ்சாதீர்கள். இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அவர் நமக்கு அடைக்கலமும், ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கண் வரும் நேரங்களில் அவர் நமக்கு உற்றத் துணையாக இருப்பார் என்பதே!. திருப்பாடல் 23யில் கூறியது போல அவர் நல்லாயன். பசும்புல் தரையில் சேர்ப்பார். காரிருல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் எனக்குப் பயதே இல்லை என்பதை உணர்ந்தோம் என்றால் நாம் தைரியம் பெறவோம். ஏனெனில் நம் ஆண்டவர் கண்ணுக்கு நாம் விலையேறப்பட்டவர்கள் மதிப்புக்குரியவர்கள். எனவே இறைவனின் மாறா அன்பில் சந்தேகமின்றி நம்பிக்கைக் கொள்வோம். அச்சம் மனிதனைக் கோழையாக்குகின்றது. அன்பு மனிதனை மனிதனாக்குகிறது. எனவே அச்சத்திலிருந்து விடுபட்டு இறைவனின் அன்புக் கலந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

 

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில், இறைவனின் செய்தியை எரேமியா, அரசனிடம் எடுத்துரைத்தபோது அரசனோ அச்செய்திக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக எரேமியாவை தேசத்துரோகியென முத்திரைக் குத்தி, துன்புறுத்த ஆரம்பித்தான். ஆனால் இந்தக் கொடூரமான பிரச்சனைகள் மத்தியில் எரேமியா ஓடி ஒளிந்தாரா? இல்லை. உறுதியான மனநிலையோடு எதிர்க்கொண்டார். இதே நம்பிக்கையில் நாமும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34

ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு வலியுறுத்துவதாவது ஒரு மனிதன் வழியாகப் பாவம் இவ்வுலகிற்கு வந்தது. ஒருவர் செய்தக் குற்றத்தால் பலரும் இறந்தனர். கடவுளின் அருளாலும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாகக் கிடைத்தது என்பதே! இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்…

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா…

 நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்


1. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்புதன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் நல்ல உடல்நலமும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்துநின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைவனைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

1 comment:

  1. Next Sunday mass munnurai send pannunga 2/7/2023

    ReplyDelete