Thursday, June 1, 2023

மூவொரு இறைவன் பெருவிழா (4.06.2023)

மூவொரு இறைவன் பெருவிழா (4.06.2023)


 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 34: 4-6, 8-9
2 கொரிந்தியர் 13:11-1 3
யோவான்  3:16-18

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இவ்விழாக்களின் சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று அந்த இறைவனைப் பற்றி, புனித அகுஸ்தின் அவர்களின் கூற்றுக்கேற்ப இறைஅன்பில் இணைந்து இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்!
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப்பயணத்தின்போது “என் மக்களே” என்று தாம் அழைத்த இஸ்ரயேல் மக்களை இறைவன் மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து வாக்களிக்கப்பட்ட வளமான பூமியில் வழிநடத்துகையில் ஏற்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றிய செய்தியை நாம் இப்போது செவிமெடுக்க இருக்கிறோம். இறைவன் எத்தகைய மகத்துவம் மிக்கவர் என்பதையும் இறைவனால் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்ட மோசேயின் குணநலன்கள் எத்துணைச் சிறப்பானவை என்பதையும் கவனமுடன் வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பிரிவு மனப்பான்மை கொண்டு சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த கொரிந்து நகரமக்களை மூன்றாம் முறையாகச் சந்தித்து, நேரில் அவர்களுக்கு அறிவுரைக் கூறுமுன், திருத்தூதர் பவுல் எழுதும் இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து மக்களின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட அறிவுரைகளைத் தாங்கிய திருத்தூதரின் வார்த்தைகளையும், அன்பு மேலோங்கி அவர் வழங்கும் வாழ்த்துரையையும் இப்போது வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
திருப்பாடல்கள் தானி. 1: 29-33

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது ஒன்றிப்பிலும், அன்பிலும் உம்மை உய்த்துணர்ந்தவர்களாய் அன்பிலும், ஒற்றுமையிலும் நிறைவாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றான இறைவன்! எங்கள் குடும்பங்களின் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதானப் பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய, உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் எமக்குச் சொல்லித் தர வேண்டும்மென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! உலகெங்கும் எழுந்துள்ள உள்நாட்டுப் போரினால், வன்முறையாலும் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன. உறவின் ஊற்றான மூவொரு இறைவா! அங்கெல்லாம் அமைதியை விரைவில் கொணர வேண்டும் என்றும், சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் இழந்துபோன உறவுகளில் பலப்படவும், அன்பில் மேன்படவும் நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உறவுகளின் ஊற்றான இறைவன்! இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி, தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும், நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment