Tuesday, July 29, 2025

பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு ஆண்டு 3

 பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சபை உரையாளர் 2:1-2
கொலோசையர். 3:1-5, -9-11
லூக்கா 12:13-21

முன்னுரை:

இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறான இன்று இறையருள் வேண்டி இறைவனின் திருப்பாதம் தேடி வந்துள்ள இறைமக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இன்றைய சூழலில் மக்கள் ஓய்வின்றி உழைத்துத் தேடிவைக்கும் செல்வங்களின் நிலையையும், அவர்களின் மனநிலையையும் அழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றது இன்று தரப்பட்டுள்ள வாசகங்கள். கடினமாய் உழைத்துச் சேர்த்த சொத்துகள் அதற்காக உழைக்காதவரிடம் செல்வது பெரிய அநீதி. எல்லாம் வீண் என்கின்றது முதல் வாசகம். நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். நீங்கள் புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். எனவே உங்களிடையே வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார் என்கின்றார் திருத்தூதர் பவுல்.

இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? " என்று கேட்கின்றார் இறைமகன் இயேசு. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் பயன் என்ன? என்ற இறைவார்த்தையின் மகத்துவத்தை உணர்ந்த நாம், இன்றையத் திருப்பலியில் இறைவனின் இல்லத்தில் நாம்,  செல்வங்களைச் சேர்த்து வைக்க, வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்… வாரீர்.

 வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் பதிவு செய்கின்றது இந்த வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்குத் துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் தான் மிஞ்சுகிறது என்று எடுத்துரைக்கும் சபை உரையாளரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

<

பதிலுரைப் பாடல்

பல்லவி: என் தலைவரேதலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்!

திபா. 90: 3-4,5-6,12-13,14,17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புளுதியாகுங்கள்' என்கின்றீர்.  ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும். - பல்லவி

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.  ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!  ஆம் நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகுச் சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகுச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கின்றார். இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.  அவரின் நினைவூட்டலைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கின்றது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், மேலுலகு சார்ந்தவற்றையே நாடுகிற தலைவர்களாய் விளங்கவும், இறைமக்களாகிய எங்களையும், மேலுலகு பற்றிய சிந்தனையோடே பயணிக்கும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வழிநடத்தவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம் உலகையும் நாட்டையும் ஆளும் தலைவர்கள், “வீண், முற்றிலும் வீண்” என்கிற சபையுரையாளரின் கூற்றை உணராமல், போர்களிலும் அழிவுப் பாதைகளிலும் தங்கள் கவனத்தைச் செலுத்துவதைத் தவிர்த்து, அமைதிக்கு ஏதுவானதும், ஆக்கப்பூர்வமானதுமான செயல்களில், தங்களை ஈடுபடுத்தி, மானுடம் செழித்திட வகைச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய முதல் வாசகம், திருப்பாடல், நற்செய்தி உவமை ஆகியவை, மனித வாழ்வின் நிலையாமையையும், செல்வம் திரட்டுவதின் பயனில்லாமையையும் உணர்த்தினாலும், வாழ்க்கையை வெறுக்கவோ, சோம்பிக்கிடக்கவோ அவை சொல்லிக்கொடுக்கவில்லை; மாறாக, இறைவனை நம்பியவர்களாய், இறைவழியில் உழைப்பவர்களாய், இறையரசின் மீது நாட்டம் உடையவர்களாய் பயணிப்பதின் அவசியத்தை உணர்த்துகின்றன என்பதனை, நாங்கள் புரிந்து செயல்பட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இவ்வுலகில் வாழ்வோராகிய நாங்கள், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்பதை உணர்ந்து, எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருக்கவும், தங்கள் வாழ்வை முடித்து இறைபதம் சேர்ந்திருக்கும் அனைவருக்கும், வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்து தோன்றும்பொழுது, அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுகின்ற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களாகிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், பேராசை ஆகியவற்றைக் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்தவர்களாய், எம்மை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 21, 2025

பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு ஆண்டு 3

 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு ஆண்டு 3


இன்றைய வாசகங்கள்: 

தொடக்கநூல்‌ 18:20-32 
கொலோசையர்‌ 2:12-14 
லூக்கா 11:1-13

திருப்பலி முன்னுரை: 

இறைவேண்டலால்‌ இறைவனின்‌ கொடைகளைப்‌ பெறும்‌ நம்பிக்கையுடன்‌ இறை இல்லம்‌ தேடி வந்துள்ள இறையன்பர்களே பொதுக்‌ காலம்‌ 17ஆம்‌ ஞாயிறின்‌ நல்வாழ்த்துகள்‌. 

இறைவனிடம்‌ வேண்டல்‌ செய்வது ஒரு கலை. அதனால்‌ நாம்‌ பெறுவது மாபெரும்‌ பொடை. அனைத்துக்‌ கொடைகளையும்‌ தம்மிடம்‌ குவித்து வைத்து, தக்க காலத்தில்‌ நாம்‌ மேற்கொள்ளும்‌ இறைவேண்டலின்‌ தன்மைக்கேற்ப நம்‌ தேவைகளை உணர்ந்து, கடவுள்‌ நமக்கு வாரி வழங்கி வருகிறார்‌. இதனை இன்றைய வழிபாடு முழுவதும்‌ நாம்‌ கண்டுணரலாம்‌. எப்படியும்‌ அடைந்தே தீருவது என்ற நோக்கத்தில்‌ தங்களது வேண்டல்களை எழுப்புவது மனித இயல்பு. இந்த நடைமுறையைப் புனித அகுஸ்தினாரின்‌ அன்னை மோனிக்கா பின்பற்றித் தொடர்ந்து வேண்டல்‌ செய்து தம்‌ மகன்‌ அகுஸ்தினாரை மனந்திரும்பச்‌ செய்ததை வரலாறு நமக்கு எடுத்துக்‌ கூறுகிறது. 

இறைவேண்டலில்‌ இடைவிடாத்‌ தன்மையும்‌ வேண்டல்‌ செய்யும்‌ முறையும்‌ கூர்ந்து கவனிக்கத்தக்கது. இது போன்ற அனுபவங்கள்‌ நமக்கும்‌ ஏற்பட்டிருக்கக்கூடும்‌. 

இறைவேண்டலில்‌ 1. இறை திருவுளத்தை நாடுதல்‌, 2. பெற்ற பயனைப்‌ பிறருக்குப்‌ பகிர்ந்தளித்தல்‌, 3. பொது நலன்களுக்காக மன்றாடுதல்‌, 4. நம்பிக்கை நலனைத்‌ தரவல்லது என்பதை உணர்ந்து செயல்படுதல்‌, 5. கவனச்‌ சிதறலின்றி வேண்டல்‌ செய்தல்‌, 6. கொடைகளைப்‌ பெற்றபின்‌ கடவுளின்‌ மேன்மை மிகுந்த செயல்களை எடுத்துரைத்தல்‌ எனப் பல சிறப்பு அணுகுமுறைகள்‌ உள்ளன. குறிப்பாக நற்செய்தி சுட்டிக்‌ காட்டும்‌ இயேசு நமக்குக்‌ கற்பிக்கும்‌ இறைவேண்டல்‌ முறையை உணர்ந்தவர்களாய்‌ இன்றைய திருப்பலியில்‌ இறைவேண்டல்‌ மனப்‌ பான்மையோடு பங்கெடுத்து இறையருளை நிறைவாகப்‌ பெறுவோம்‌. 

முதல்‌ வாசக முன்னுரை : 

“அயராது செய்யும்‌ இறைவேண்டல்‌ இறைவனையும்‌ அசைத்துப்‌ பார்த்து அவரது அருளை அள்ளித்தரும்‌ என்பது பலரது நம்பிக்கை அதன்படியே இறைவன்‌ சோதோம்‌ கொமோரா குறித்து செய்யக்‌ தருதிய கொடிய தண்டனைச்‌ செயலை, நம்பிக்கையின்‌ தந்த என நாம்‌ போற்றும்‌ குலமுதல்வர்‌ ஆபிரகாம்‌ தனது சாதுர்யம்‌ நிறைந்த இறைவேண்டலால்‌ தடுத்து நிறுத்திச் சாதனை புரிந்ததை விவரிக்கும்‌ முதல்‌ வாசகத்தைக்‌ கேட்போம்‌. 

பதிலுரைப்‌ பாடல்‌ : 

திபா 138:1-2அ, 2ஆஇ-8, 6-7அஆ, 7இ-8 

பல்லவி : ஆண்டவரே நான்‌ மன்றாடிய நாளில்‌ எனக்குச்‌ செவிசாய்த்தீர்‌. 

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி

உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.  நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை : 

திருமுழுக்கின்போது நாம்‌ கிறிஸ்துவோடு இறந்து அடக்கம்‌ செய்யப்‌ படுகிறோம்‌. அதே கிறிஸ்துவை உயிர்த்தெழச்‌ செய்த கடவுளது வல்லமையை நம்புகிறோம்‌. கிறிஸ்துவோடு நம்மையும்‌ கடவுள்‌ உயிர்த்தெழச்‌ செய்வார்‌. இதற்குத்‌ தடையாக இருக்கும்‌ அனைத்தையும்‌ கிறிஸ்து சிலுவையில்‌ ஆணியடித்து ஒழித்துவிட்டார்‌ என்பதை உணர்த்தும்‌ இந்த வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி : 

அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்குரிய மனப்‌ பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்‌. அதனால்‌ நாம்‌, “அப்பா தந்தையே” என அழைக்கிறோம்‌. அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌:

1. “விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி” என்கிற உமது நற்செய்தி தருகிற நம்பிக்கையுடன், தாயாம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைமக்களாகிய எங்களை நிறைவழியில் வழிநடத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சோதோம் கொமோராவுக்கு நேரப்போகிற அழிவை உணர்ந்தவராய், ஆபிரகாம் உம்மிடம் கெஞ்சியது போல, அழிவின் பாதையில் விரைந்துப் பயணித்துக்கொண்டிருக்கிற எங்கள் உலகுக்காக, நாங்களும் உம்மிடம் பரிந்து பேசுகிறோம். உலகத்தலைவர்கள் அனைவரும், அமைதியின் பாதைக்குத் திரும்பவும், எம்நாட்டுத் தலைவர்களும் குடிமக்களும், சமத்துவம், சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களைப் பின்பற்றி வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எமக்கு எதிரான அனைத்தையும், சிலுவையில் வைத்து, ஆணியடித்து அறவே ஒழித்துவிட்ட இயேசுவின் இனிய நாமத்தில் உம்மை இறைஞ்சுகிறோம். எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும், நாங்கள் சந்திக்கிற அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து, உயிர்த்த இயேசுவைப் போல, நாங்களும் வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “கேளுங்கள், கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற உமது வாக்குறுதியை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, எம்தேவைகளை உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். வறுமையில் வாடுவோருக்கு வளமையையும், நோயில் தவிப்போருக்கு உடல் நலத்தையும், இளையோருக்கு நல்ல எதிர்காலத்தையும், தனிமையிலும் முதுமையிலும் வாடுவோருக்கு ஆதரவையும், குடும்பங்களுக்குச் சமாதானத்தையும் நிறைமகிழ்வையும், நீர் தாமே தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், திருமுழுக்குப் பெற்றபோது, கிறிஸ்துவோடு பாவத்திற்கு மரித்து, தூயதோர் வாழ்க்கைக்கு உயிர்ப்பிக்கபப்பட்டோம் என்பதை உணர்ந்தவர்களாய், தீய பழக்கங்கள், பாவ நாட்டங்கள் அனைத்தையும் விட்டொழித்து, புனிதத்தின் பாதையில் பயணிக்க, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, July 15, 2025

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

இன்றைய வாசகங்கள்‌:-

தொடக்கநூல்‌ 18:1-10 
கொலோசையர்‌ 1:24-28
லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை:-

நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுத்து நலமுடன்‌ வாழ ஆண்டவர்‌ இயேசுவினால்‌ அன்புடன்‌ அழைக்கப்பட்டுள்ள அருமையான இறைமக்களே நல்வாழ்த்துகள்‌ ! பல சமயங்களில்‌ கடவுளின்‌ ஆசி நம்‌ இல்லத்தைத்‌ தேடி, நம்மைத்தேடி வந்து கொண்டிருக்கிறது. நாம்தான்‌ அதனைக்‌ கண்டு பிடிக்கும்‌ ஆற்றல்‌ இல்லாமல்‌ மயக்க நிலையில்‌, தயக்க நிலையில்‌ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்‌. பொதுக்‌ காலம்‌ 16ஆம்‌ ஞாயிறாகிய இன்றைய வழிபாடு நம்மைச்‌ சுற்றிப்‌ பல கூறுகள்‌ வலம்‌ வந்தாலும்‌ அவற்றுள்‌ நல்லவற்றைத்‌ ‌ தேர்வுசெய்து நமதாக்கிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.  

குலமுதல்வர்‌, நம்பிக்கையாளரின்‌ தந்தையெனப் போற்றப்படும்‌ ஆபிரகாமின்‌ இல்லத்துக்கு வந்த இறையன்பர்கள்‌ மூவரும்‌ நல்லாசியை ஈந்து ஆபிரகாம்‌ விரைவில்‌ தனது வழிமரபைக்‌ காணும்‌ பேற்றினைப்‌ பெறுவார்‌ என்று உறுதியளிக்கின்றனர்‌. அதுபோலவே திருத்தூதர்‌ பவுலும்‌ கொலோசைய மக்களுக்குத் திரு அவையின்‌ மறைஉடலாம்‌ கிறிஸ்துவின்‌ பாடுகளில்‌ தாம்‌ பங்கேற்ற அனுபவத்தைக்‌ கூறி, கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலையை அடையும்‌ நல்லறிவைக்‌ காட்டுகின்றார்‌.

பலவற்றைப்‌ பற்றிக் கவலைப்பட வேண்டாம்‌ நல்ல பங்காகிய இயேசுவைத்‌ தேர்வு கொள்வதே முன்மதியுள்ள செயல்‌ என்பதை நற்செய்தி சுட்டிக்‌ காட்டுகிறது. இத்திருப்பலியில்‌ இதயப்‌ பற்றுதலோடு இணைந்து பங்கேற்கும்‌ நாம்‌ எப்போதும்‌ நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுப்பவர்களாக வாழவும்‌, பகட்டும்‌, கவர்ச்சியும்‌ கலந்து வரும்‌ தீயனவற்றைத்‌ தூக்கியெறிபவர்களாக வாழவும்‌ அருள்வேண்டுவோம்‌…  

வாசக முன்னுரை

முதல்‌ வாசக முன்னுரை

கடவுள்‌ தமக்களித்த வழிமரபு வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படும்‌ காலத்தை எதிர்நோக்கி வாழ்ந்தார்‌ முதுபெரும்தந்தை ஆபிரகாம்‌. அவரது வீட்டுக்கு வந்த இறைமாந்தர்கள்‌ மூவர்‌ சிறப்பாகக்‌ கவனிக்கப்பட்ட விதத்தையும்‌ அவர்கள்‌ ஆசியளித்துக்‌ கூறிய வார்த்தைகளையும்‌ உள்ளடக்கிய இவ்வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

திபா 15: 2. 3-4. 5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
1 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர். - பல்லவி
2. தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி
3. தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை : 

கொலோசைய மக்கள்‌ தாங்கள்‌ பெற்றுக்கொண்டுள்ள கிறிஸ்துவைப்‌ பற்றிய திட்டங்களைத்‌ திருத்தூதர்‌ பவுல்‌ எடுத்துக்‌ கூறுகிறார்‌. இதற்காகவே தாம்‌ திருத்தூதராக அழைக்கப்பட்டதாகவும்‌ கூறுகிறார்‌. நாமும்‌ நம்மில்‌ இருக்கும்‌ கிறிஸ்து நம்மிடம்‌ எதிர்நோக்குவது என்ன? அதை நாம்‌ எப்படியெல்லாம்‌ செயலாக்கம்‌ செய்ய வேண்டும்‌ என்ற ஆர்வத்தோடு இந்த வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா ! சீரிய நல்‌ உள்ளத்தோடு வார்த்தையைக்‌ கேட்டு, அதைக்‌ காத்து, மன உறுதியுடன்‌ பலன்‌ தருகிறவர்கள்‌ பேறுபெற்றோர்‌. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், தூய பவுலடியாரைப் போல “இறைவார்த்தையை முழுமையாக வழங்கும் பொறுப்பினை” கடவுள் தங்களுக்குக் கொடுத்துள்ளதை உணர்ந்து, தங்களது திருத்தொண்டுப் பணியினைச் செவ்வனே நிறைவேற்றவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்கள் காட்டுகிற நல்வழியில், எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்கவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தம் கூடார வாயிலில் அமர்ந்திருந்த ஆபிரகாம், இறைமனிதர்கள் தம்மை விட்டுக் கடந்து போகாதிருக்க இறைஞ்சியது போல, எமையாளும் அரசியல் தலைவர்களும், உலகமக்கள் அனைவரும், அமைதி மற்றும் சமாதானத்திற்கான வாய்ப்புகள் கடந்து போகாமல் பார்த்துக்கொள்வதோடு, ஒருவர் ஒருவரை மதித்து, பணிவிடை புரிந்து, நிறை அருளையும் ஆசீரையும். அனைவரும் பெற்று மகிழ, உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் நாங்கள் அனைவரும், “கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலை பெறுகிற விதத்தில்” எம்கிறித்தவ அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்றும், மாசற்றவராய் நடந்து, நேரியவற்றைச் செய்து, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்கள் ஆகும் பேற்றினைப் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பரபரப்பான எங்கள் வாழ்க்கைச் சூழலில், விறுவிறுப்பான எங்கள் பணிகளிலும் வேலைகளிலும், எங்களையே முழுமையாகத் தொலைத்துவிடாமல், மரியாவைப் போல, உம்பாதம் அமருகிற நல்ல பங்கைத் தெரிவு செய்து கொள்ளவும், எம்குடும்பத்தாரோடும் சமூகத்துடனும் நல்லுறவுடன் வாழ்கிற சிறந்த வழியை மேற்கொள்ளவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இனிய விருந்தோம்பல் இறைவனை மகிழ்விப்பதோடு, குடும்பத்தின் குறை தீரவும் வழி செய்திடும் என்பதனை இன்றைய முதல் வாசகம் விவரித்தது. எங்கள் அன்பு இறைவா, அன்பும், அறனும், விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளும், எம் இல்வாழ்க்கையை அணி செய்ய வேண்டுமென்றும், குறைகள் யாவும், அதிலும் சிறப்பாக, குழந்தையின்மை என்கிற குறை நீங்கப்பெற்ற நிறைவாழ்வு எமதாக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 7, 2025

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

திருப்பலி முன்னுரை:-

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக்கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.
இஸ்ரயேல் மக்களுக்கு 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். புனித பவுலடியார் கூறுகிறார். ”விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள கடவுள்தன்மையைத் தொட்டுணர்ந்து நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.”
திருச்சட்ட அறிஞர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையில் உள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார். இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

வாசக முன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

சட்டம்‌ சுட்டிக்காட்டுபவை இரண்டே இரண்டுதான்‌. ஒன்று இதைச்‌ செய்‌; மற்றொன்று இதைச்‌ செய்யாதே. சட்டத்தை இறைப்பார்வையில்‌ திருப்புவது மனச்சான்று. மனச்சான்று எப்போதும்‌ மனிதத்தை உயர்த்திப்‌ பிடிக்கக்‌ குரல்‌ கொடுக்கும்‌. சட்டம்‌ அதன்‌ குரலைக்‌ கேட்கும்‌ தூரத்தில்தான்‌ உள்ளது; 
தொலைவில்‌ இல்லையெனத் துள்ளியமாகக்‌ கூறும்‌ இணைச்சட்ட வாசகத்தைக்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!

திபா. 69: 13,16,29-30,35,36
1. ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.  பல்லவி

2. ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

3. எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

4. கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

கிறிஸ்துவைப்‌ பற்றி அனைவரும்‌ தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து  உண்மைகளை உள்ளடக்கிக் கிறிஸ்து இயலாகத் திருத்தூதுப் பவுல்‌ சுருக்கமாக
கொலோசையருக்கு வழங்கும்‌ பகுதியை இன்றைய வழிபாடு நமக்கு இரண்டாம்‌ வாசகமாகத்‌ தந்துள்ளது. இதனைக்‌ கூர்ந்து கவனித்துக்கேட்டு நாமும்‌
கிறிஸ்துவைப்‌ பறைசாற்றுபவர்களாக வாழ்வோம

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரையும் படைத்தவரும், அனைத்துக்கும் முந்தியவருமான ஆண்டவரே, திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், இறைமக்களாகிய எங்களையும், நீர் தாமே நிறைவாக ஆசீர்வதித்து, தூயதோர் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கவும், இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் திருவுளம் கொண்ட ஆண்டவரே, அமைதியை இழந்து தவிக்கும் இந்த அவனிக்கு, உண்மையான சமாதானத்தை தந்தருள வேண்டுமென்றும், தலைவர்களும், குடிமக்களும், பகைமைகள், பேதமைகளை மறந்து, ஒன்றுபட்டு வாழவும், உயரவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” என்று பவுலடியார் கூறுவதன் பொருளை உணர்ந்தவர்களாய், நாங்கள் எங்கள் குடும்பங்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், உமக்கு உரியவர்களாகவே வளர்த்தெடுக்க வேண்டுமென்றும், எங்கள் பங்குகளும், பங்கு குருக்களும், பங்குப்பேரவை உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அன்பியங்களும், உமக்காகவே இயங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்து, அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்து, முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வந்து, இறை மனித உறவுகளில் புனிதம் பெறத் தக்க வகையில், வாழ்வதற்கான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வதும், தம்மைப்போலவே அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வதும்தான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கான வழி என்பதை உறுதிப்படுத்திய ஆண்டவரே, அனைத்திற்கும் மேலாக உமக்கும், அதன் நீட்சியாக எம்மை அடுத்திருப்போருக்கும், முதன்முதலில் எம்குடும்பத்தாருக்கும், சிறப்பாக வயது முதிர்ந்தோருக்கும், எங்களது முழுமையான அன்பை காட்டுகிற வண்ணம், எங்கள் செயல்களும் வாழ்க்கையும் அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.          
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, July 2, 2025

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள். 

எசாயா 66:10-14
கலாத்தியர். 6:14-18
லூக்கா 10:1-12,17-20

திருப்பலி முன்னுரை:

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!
கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும்‌ திருத்தூதர்களை அடிக்‌கல்லாகவும்‌ விசுவாசிகளைக்‌ கட்டிடக்‌ கல்லாகவும்‌ கொண்டு அமைந்தது தான்‌ நமது தாய்த்‌ திருச்சபை. இயேசுவைப்‌ பிடிக்க வந்தபோது சீடர்கள்‌ அனைவரும்‌ புறமுதுகுக்‌காட்டி ஓடினார்கள்‌. ஆனால்‌ அதே சீடர்கள்‌ தூய ஆவியால்‌ நிரப்பப்பட்டபோது தங்கள்‌ அழைத்தலின்‌ அர்த்தத்தை உணர்ந்தனர்‌. தங்களின்‌ கடமைகளை உணர்ந்தார்கள்‌. கிறிஸ்துவுக்காகச்‌ சாகவும்‌ துணிந்தார்கள்‌. மறைசாட்சிகளாய்‌ மரித்தார்கள்‌. இத்தகைய மாற்றம்‌ நம்‌ ஒவ்வொருவரின்‌ உள்ளத்திலும்‌ உதிக்க வேண்டும்‌, என்ற எண்ணத்தோடு இன்றைய திருப்பலியிலிணைந்திடுவோம்‌.
நாம்‌ அனைவரும்‌ தவறாகப்‌ புரிந்திருப்பது, ஊழியர்கள்‌ என்றால்‌ குருக்களும்‌, சகோதரிகளும்‌, துறவறத்தாரும்‌ மட்டுமே. ஆனால்‌ திருமுழுக்கு வாங்கிய கிறிஸ்தவனும்‌ ஒவ்வொருவனும்‌ ஊழியனே. கிறிஸ்தவர்களாகிய நாம்‌ அனைவரும்‌ அனுப்பப்பட்டவர்‌களே. உயிர்த்த ஆண்டவர்‌ தான்‌ சந்தித்த ஒவ்வொருவரையும்‌ அனுப்புகிறார்‌.
கிறிஸ்து இம்மண்ணுலகிற்கு வந்தபோது கொண்டுவந்த முதல்‌ கொடை அமைதி கிறிஸ்து விண்ணகம்‌ சென்றபோது வழங்கிய இறுதிக்‌ கொடையும்‌ அமைதியே!
கிறிஸ்துவின் அமைதியின் தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.

வாசக முன்னுரை:

முதல் வாசகம்‌ முன்னுரை:

நாடுகடத்தப்பட்ட மக்கள்‌ மீண்டும்‌ எருசலேமுக்குத்‌ திரும்பி வருவார்கள்‌ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. கடவுள்‌ இஸ்ரயேல்‌ மீது தனிப்பட்ட அன்பையும்‌, அக்கறையையும்‌ கொண்டுள்ளார்‌ என்பதை எசாயா வாயிலாக ஆண்டவர்‌ வெளிப்படுத்துவதை இன்றைய முதல் வாசகம்‌ விவரிக்கின்றது. “கடவுளின்‌ அன்பு தாய் அன்பைப்‌ போன்றது, அந்த அன்பில்‌ நிலைத்து இன்புறுங்கள்‌' என்றும்‌ வலியுறுத்தும் எசாயாவின் வார்த்தைகளை நம் மனங்களில் இருத்தி சிந்திப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா. 66: 1-3,4-5,6-7,16,20.
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி

2. அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி

இரண்டாம்‌ வாசகம்‌ முன்னுரை:

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ தூய பவுல்‌, பணம்‌ பதவி பகட்டு போன்ற உலக ஆடம்பர வலைகளில்‌ சிக்கிக்‌ கிறிஸ்தவ அடிப்படையை மறந்திருந்தக்‌ கலாத்திய மக்களுக்குக்‌ கிறிஸ்துவின்‌ சிலுவை மீது கொள்ளும்‌ நம்பிக்கையே அடிப்படை, மற்ற வெளி ஆடம்பரங்கள்‌ அவசியமில்லை என்பதை நினைவூட்டுகிறார்‌. கிறிஸ்துவின்‌ சிலுவையே உண்மையான சீடரின்‌ பெருமை.
தூய ஆவியில்‌ புதுப்படைப்பாக, புதிய மனிதர்களாகத்‌ தன்னைப்‌ போல இயேசுவின்‌ அடிமையாக மாறி, நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ள அழைப்பு விடுக்கிறார்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! “ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்” என்றுரைத்து, சீடர்களைத் திருத்தூது பணிக்கு அனுப்பினீரே! தீமை தலைவிரித்தாடும் இவ்வுலகில், உமது தூய திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், நீர் தாமே பாதுகாத்து வழிநடத்த   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்” என்கிற வாக்குறுதியை, இன்றைய முதல் வாசகம்மூலம் தருபவரே, மூண்டு வரும் போர்களாலும், யுத்தங்களாலும், நீடித்து வரும் சண்டை சச்சரவுகளாலும், சர்வாதிகார போக்குகளாலும், பயங்கரவாத-தீவிரவாத வன்முறைகளாலும், நிலைகுலைந்து போயுள்ள இவ்வுலகில், அமைதி ஆறெனப் பெருக்கெடுத்து ஓடவும், தலைவர்கள் யாவரும், சமாதானத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒழுகவும் வரமருள          வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;” என வாஞ்சையோடு வாக்களிப்பவரே! வறுமை, வேலையின்மை, நோய், முதுமை, இயலாமை,  தொடர்  தோல்விகள், ஏமாற்றங்கள், குடும்பத்தில் சமாதானமின்மை போன்ற பல்வேறு இன்னல்களால் அவதியுறும் மக்கள் அனைவரையும், குறிப்பாகச் சமீப கால விபத்துகளாலும், போர்களாலும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிப்போரையும், தாயின் பரிவோடு கண்ணோக்கி, கரம்பிடித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “புதிய படைப்பாவதே இன்றியமையாதது.” என்கிற பவுலடியாரின் அறிவுரையை ஆழ்மனதில் பதியவைத்து, சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டிலும் உண்மையான நம்பிக்கையும், நம்பிக்கைக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையும் தான் முக்கியம் என்கிற உணர்வோடு, சாட்சிய வாழ்வு வாழ்வதற்கான, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்கிற நற்செய்திக்குறிப்பு    இன்றளவும் உண்மையாக இருப்பதனால், உம்முடைய இறையாட்சிப்  பணிக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி, தேவ அழைத்தல் பெருகும்படி, அறுவடையின் உரிமையாளராம் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF