பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு ஆண்டு 3
இன்றைய வாசகங்கள்:
தொடக்கநூல் 18:20-32
கொலோசையர் 2:12-14
லூக்கா 11:1-13
திருப்பலி முன்னுரை:
இறைவேண்டலால் இறைவனின் கொடைகளைப் பெறும் நம்பிக்கையுடன் இறை இல்லம் தேடி வந்துள்ள இறையன்பர்களே பொதுக் காலம் 17ஆம் ஞாயிறின் நல்வாழ்த்துகள்.
இறைவனிடம் வேண்டல் செய்வது ஒரு கலை. அதனால் நாம் பெறுவது மாபெரும் பொடை. அனைத்துக் கொடைகளையும் தம்மிடம் குவித்து வைத்து, தக்க காலத்தில் நாம் மேற்கொள்ளும் இறைவேண்டலின் தன்மைக்கேற்ப நம் தேவைகளை உணர்ந்து, கடவுள் நமக்கு வாரி வழங்கி வருகிறார். இதனை இன்றைய வழிபாடு முழுவதும் நாம் கண்டுணரலாம். எப்படியும் அடைந்தே தீருவது என்ற நோக்கத்தில் தங்களது வேண்டல்களை எழுப்புவது மனித இயல்பு. இந்த நடைமுறையைப் புனித அகுஸ்தினாரின் அன்னை மோனிக்கா பின்பற்றித் தொடர்ந்து வேண்டல் செய்து தம் மகன் அகுஸ்தினாரை மனந்திரும்பச் செய்ததை வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது.
இறைவேண்டலில் இடைவிடாத் தன்மையும் வேண்டல் செய்யும் முறையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. இது போன்ற அனுபவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.
இறைவேண்டலில் 1. இறை திருவுளத்தை நாடுதல், 2. பெற்ற பயனைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தல், 3. பொது நலன்களுக்காக மன்றாடுதல், 4. நம்பிக்கை நலனைத் தரவல்லது என்பதை உணர்ந்து செயல்படுதல், 5. கவனச் சிதறலின்றி வேண்டல் செய்தல், 6. கொடைகளைப் பெற்றபின் கடவுளின் மேன்மை மிகுந்த செயல்களை எடுத்துரைத்தல் எனப் பல சிறப்பு அணுகுமுறைகள் உள்ளன. குறிப்பாக நற்செய்தி சுட்டிக் காட்டும் இயேசு நமக்குக் கற்பிக்கும் இறைவேண்டல் முறையை உணர்ந்தவர்களாய் இன்றைய திருப்பலியில் இறைவேண்டல் மனப் பான்மையோடு பங்கெடுத்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை :
“அயராது செய்யும் இறைவேண்டல் இறைவனையும் அசைத்துப் பார்த்து அவரது அருளை அள்ளித்தரும் என்பது பலரது நம்பிக்கை அதன்படியே இறைவன் சோதோம் கொமோரா குறித்து செய்யக் தருதிய கொடிய தண்டனைச் செயலை, நம்பிக்கையின் தந்த என நாம் போற்றும் குலமுதல்வர் ஆபிரகாம் தனது சாதுர்யம் நிறைந்த இறைவேண்டலால் தடுத்து நிறுத்திச் சாதனை புரிந்ததை விவரிக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப் பாடல் :
திபா 138:1-2அ, 2ஆஇ-8, 6-7அஆ, 7இ-8
பல்லவி : ஆண்டவரே நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள்
முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி
உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி
செலுத்துவேன்;ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும்
மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக்
கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து
கொள்கின்றீர். நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக்
காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை
நீட்டுகின்றீர்; -பல்லவி
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும்
எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம்
கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை :
திருமுழுக்கின்போது நாம் கிறிஸ்துவோடு இறந்து அடக்கம் செய்யப் படுகிறோம். அதே கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த கடவுளது வல்லமையை நம்புகிறோம். கிறிஸ்துவோடு நம்மையும் கடவுள் உயிர்த்தெழச் செய்வார். இதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் கிறிஸ்து சிலுவையில் ஆணியடித்து ஒழித்துவிட்டார் என்பதை உணர்த்தும் இந்த வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :
அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்குரிய மனப் பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. “விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி” என்கிற உமது நற்செய்தி தருகிற நம்பிக்கையுடன், தாயாம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைமக்களாகிய எங்களை நிறைவழியில் வழிநடத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சோதோம் கொமோராவுக்கு நேரப்போகிற அழிவை உணர்ந்தவராய், ஆபிரகாம் உம்மிடம் கெஞ்சியது போல, அழிவின் பாதையில் விரைந்துப் பயணித்துக்கொண்டிருக்கிற எங்கள் உலகுக்காக, நாங்களும் உம்மிடம் பரிந்து பேசுகிறோம். உலகத்தலைவர்கள் அனைவரும், அமைதியின் பாதைக்குத் திரும்பவும், எம்நாட்டுத் தலைவர்களும் குடிமக்களும், சமத்துவம், சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களைப் பின்பற்றி வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எமக்கு எதிரான அனைத்தையும், சிலுவையில் வைத்து, ஆணியடித்து அறவே ஒழித்துவிட்ட இயேசுவின் இனிய நாமத்தில் உம்மை இறைஞ்சுகிறோம். எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும், நாங்கள் சந்திக்கிற அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து, உயிர்த்த இயேசுவைப் போல, நாங்களும் வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “கேளுங்கள், கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற உமது வாக்குறுதியை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, எம்தேவைகளை உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். வறுமையில் வாடுவோருக்கு வளமையையும், நோயில் தவிப்போருக்கு உடல் நலத்தையும், இளையோருக்கு நல்ல எதிர்காலத்தையும், தனிமையிலும் முதுமையிலும் வாடுவோருக்கு ஆதரவையும், குடும்பங்களுக்குச் சமாதானத்தையும் நிறைமகிழ்வையும், நீர் தாமே தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், திருமுழுக்குப் பெற்றபோது, கிறிஸ்துவோடு பாவத்திற்கு மரித்து, தூயதோர் வாழ்க்கைக்கு உயிர்ப்பிக்கபப்பட்டோம் என்பதை உணர்ந்தவர்களாய், தீய பழக்கங்கள், பாவ நாட்டங்கள் அனைத்தையும் விட்டொழித்து, புனிதத்தின் பாதையில் பயணிக்க, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment