பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எசாயா 66:10-14
கலாத்தியர். 6:14-18
லூக்கா 10:1-12,17-20
திருப்பலி முன்னுரை:
பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!
கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும் திருத்தூதர்களை அடிக்கல்லாகவும் விசுவாசிகளைக் கட்டிடக் கல்லாகவும் கொண்டு அமைந்தது தான் நமது தாய்த் திருச்சபை. இயேசுவைப் பிடிக்க வந்தபோது சீடர்கள் அனைவரும் புறமுதுகுக்காட்டி ஓடினார்கள். ஆனால் அதே சீடர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டபோது தங்கள் அழைத்தலின் அர்த்தத்தை உணர்ந்தனர். தங்களின் கடமைகளை உணர்ந்தார்கள். கிறிஸ்துவுக்காகச் சாகவும் துணிந்தார்கள். மறைசாட்சிகளாய் மரித்தார்கள். இத்தகைய மாற்றம் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உதிக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு இன்றைய திருப்பலியிலிணைந்திடுவோம்.
நாம் அனைவரும் தவறாகப் புரிந்திருப்பது, ஊழியர்கள் என்றால் குருக்களும், சகோதரிகளும், துறவறத்தாரும் மட்டுமே. ஆனால் திருமுழுக்கு வாங்கிய கிறிஸ்தவனும் ஒவ்வொருவனும் ஊழியனே. கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் அனுப்பப்பட்டவர்களே. உயிர்த்த ஆண்டவர் தான் சந்தித்த ஒவ்வொருவரையும் அனுப்புகிறார்.
கிறிஸ்து இம்மண்ணுலகிற்கு வந்தபோது கொண்டுவந்த முதல் கொடை அமைதி கிறிஸ்து விண்ணகம் சென்றபோது வழங்கிய இறுதிக் கொடையும் அமைதியே!
கிறிஸ்துவின் அமைதியின் தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.
வாசக முன்னுரை:
முதல் வாசகம் முன்னுரை:
நாடுகடத்தப்பட்ட மக்கள் மீண்டும் எருசலேமுக்குத் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. கடவுள் இஸ்ரயேல் மீது தனிப்பட்ட அன்பையும், அக்கறையையும் கொண்டுள்ளார் என்பதை எசாயா வாயிலாக ஆண்டவர் வெளிப்படுத்துவதை இன்றைய முதல் வாசகம் விவரிக்கின்றது. “கடவுளின் அன்பு தாய் அன்பைப் போன்றது, அந்த அன்பில் நிலைத்து இன்புறுங்கள்' என்றும் வலியுறுத்தும் எசாயாவின் வார்த்தைகளை நம் மனங்களில் இருத்தி சிந்திப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா. 66: 1-3,4-5,6-7,16,20.
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1. அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி
2. அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி
இரண்டாம் வாசகம் முன்னுரை:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், பணம் பதவி பகட்டு போன்ற உலக ஆடம்பர வலைகளில் சிக்கிக் கிறிஸ்தவ அடிப்படையை மறந்திருந்தக் கலாத்திய மக்களுக்குக் கிறிஸ்துவின் சிலுவை மீது கொள்ளும் நம்பிக்கையே அடிப்படை, மற்ற வெளி ஆடம்பரங்கள் அவசியமில்லை என்பதை நினைவூட்டுகிறார். கிறிஸ்துவின் சிலுவையே உண்மையான சீடரின் பெருமை.
தூய ஆவியில் புதுப்படைப்பாக, புதிய மனிதர்களாகத் தன்னைப் போல இயேசுவின் அடிமையாக மாறி, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கிறார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. இரக்கத்தின் ஆண்டவரே! “ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்” என்றுரைத்து, சீடர்களைத் திருத்தூது பணிக்கு அனுப்பினீரே! தீமை தலைவிரித்தாடும் இவ்வுலகில், உமது தூய திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், நீர் தாமே பாதுகாத்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்” என்கிற வாக்குறுதியை, இன்றைய முதல் வாசகம்மூலம் தருபவரே, மூண்டு வரும் போர்களாலும், யுத்தங்களாலும், நீடித்து வரும் சண்டை சச்சரவுகளாலும், சர்வாதிகார போக்குகளாலும், பயங்கரவாத-தீவிரவாத வன்முறைகளாலும், நிலைகுலைந்து போயுள்ள இவ்வுலகில், அமைதி ஆறெனப் பெருக்கெடுத்து ஓடவும், தலைவர்கள் யாவரும், சமாதானத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒழுகவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;” என வாஞ்சையோடு வாக்களிப்பவரே! வறுமை, வேலையின்மை, நோய், முதுமை, இயலாமை, தொடர் தோல்விகள், ஏமாற்றங்கள், குடும்பத்தில் சமாதானமின்மை போன்ற பல்வேறு இன்னல்களால் அவதியுறும் மக்கள் அனைவரையும், குறிப்பாகச் சமீப கால விபத்துகளாலும், போர்களாலும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிப்போரையும், தாயின் பரிவோடு கண்ணோக்கி, கரம்பிடித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “புதிய படைப்பாவதே இன்றியமையாதது.” என்கிற பவுலடியாரின் அறிவுரையை ஆழ்மனதில் பதியவைத்து, சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டிலும் உண்மையான நம்பிக்கையும், நம்பிக்கைக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையும் தான் முக்கியம் என்கிற உணர்வோடு, சாட்சிய வாழ்வு வாழ்வதற்கான, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்கிற நற்செய்திக்குறிப்பு இன்றளவும் உண்மையாக இருப்பதனால், உம்முடைய இறையாட்சிப் பணிக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி, தேவ அழைத்தல் பெருகும்படி, அறுவடையின் உரிமையாளராம் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment