Tuesday, July 15, 2025

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -ஆண்டு 3

இன்றைய வாசகங்கள்‌:-

தொடக்கநூல்‌ 18:1-10 
கொலோசையர்‌ 1:24-28
லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை:-

நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுத்து நலமுடன்‌ வாழ ஆண்டவர்‌ இயேசுவினால்‌ அன்புடன்‌ அழைக்கப்பட்டுள்ள அருமையான இறைமக்களே நல்வாழ்த்துகள்‌ ! பல சமயங்களில்‌ கடவுளின்‌ ஆசி நம்‌ இல்லத்தைத்‌ தேடி, நம்மைத்தேடி வந்து கொண்டிருக்கிறது. நாம்தான்‌ அதனைக்‌ கண்டு பிடிக்கும்‌ ஆற்றல்‌ இல்லாமல்‌ மயக்க நிலையில்‌, தயக்க நிலையில்‌ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்‌. பொதுக்‌ காலம்‌ 16ஆம்‌ ஞாயிறாகிய இன்றைய வழிபாடு நம்மைச்‌ சுற்றிப்‌ பல கூறுகள்‌ வலம்‌ வந்தாலும்‌ அவற்றுள்‌ நல்லவற்றைத்‌ ‌ தேர்வுசெய்து நமதாக்கிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.  

குலமுதல்வர்‌, நம்பிக்கையாளரின்‌ தந்தையெனப் போற்றப்படும்‌ ஆபிரகாமின்‌ இல்லத்துக்கு வந்த இறையன்பர்கள்‌ மூவரும்‌ நல்லாசியை ஈந்து ஆபிரகாம்‌ விரைவில்‌ தனது வழிமரபைக்‌ காணும்‌ பேற்றினைப்‌ பெறுவார்‌ என்று உறுதியளிக்கின்றனர்‌. அதுபோலவே திருத்தூதர்‌ பவுலும்‌ கொலோசைய மக்களுக்குத் திரு அவையின்‌ மறைஉடலாம்‌ கிறிஸ்துவின்‌ பாடுகளில்‌ தாம்‌ பங்கேற்ற அனுபவத்தைக்‌ கூறி, கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலையை அடையும்‌ நல்லறிவைக்‌ காட்டுகின்றார்‌.

பலவற்றைப்‌ பற்றிக் கவலைப்பட வேண்டாம்‌ நல்ல பங்காகிய இயேசுவைத்‌ தேர்வு கொள்வதே முன்மதியுள்ள செயல்‌ என்பதை நற்செய்தி சுட்டிக்‌ காட்டுகிறது. இத்திருப்பலியில்‌ இதயப்‌ பற்றுதலோடு இணைந்து பங்கேற்கும்‌ நாம்‌ எப்போதும்‌ நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுப்பவர்களாக வாழவும்‌, பகட்டும்‌, கவர்ச்சியும்‌ கலந்து வரும்‌ தீயனவற்றைத்‌ தூக்கியெறிபவர்களாக வாழவும்‌ அருள்வேண்டுவோம்‌…  

வாசக முன்னுரை

முதல்‌ வாசக முன்னுரை

கடவுள்‌ தமக்களித்த வழிமரபு வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படும்‌ காலத்தை எதிர்நோக்கி வாழ்ந்தார்‌ முதுபெரும்தந்தை ஆபிரகாம்‌. அவரது வீட்டுக்கு வந்த இறைமாந்தர்கள்‌ மூவர்‌ சிறப்பாகக்‌ கவனிக்கப்பட்ட விதத்தையும்‌ அவர்கள்‌ ஆசியளித்துக்‌ கூறிய வார்த்தைகளையும்‌ உள்ளடக்கிய இவ்வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌. 

பதிலுரைப் பாடல்

திபா 15: 2. 3-4. 5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
1 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர். - பல்லவி
2. தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி
3. தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை : 

கொலோசைய மக்கள்‌ தாங்கள்‌ பெற்றுக்கொண்டுள்ள கிறிஸ்துவைப்‌ பற்றிய திட்டங்களைத்‌ திருத்தூதர்‌ பவுல்‌ எடுத்துக்‌ கூறுகிறார்‌. இதற்காகவே தாம்‌ திருத்தூதராக அழைக்கப்பட்டதாகவும்‌ கூறுகிறார்‌. நாமும்‌ நம்மில்‌ இருக்கும்‌ கிறிஸ்து நம்மிடம்‌ எதிர்நோக்குவது என்ன? அதை நாம்‌ எப்படியெல்லாம்‌ செயலாக்கம்‌ செய்ய வேண்டும்‌ என்ற ஆர்வத்தோடு இந்த வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌. 

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா ! சீரிய நல்‌ உள்ளத்தோடு வார்த்தையைக்‌ கேட்டு, அதைக்‌ காத்து, மன உறுதியுடன்‌ பலன்‌ தருகிறவர்கள்‌ பேறுபெற்றோர்‌. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், தூய பவுலடியாரைப் போல “இறைவார்த்தையை முழுமையாக வழங்கும் பொறுப்பினை” கடவுள் தங்களுக்குக் கொடுத்துள்ளதை உணர்ந்து, தங்களது திருத்தொண்டுப் பணியினைச் செவ்வனே நிறைவேற்றவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்கள் காட்டுகிற நல்வழியில், எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்கவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தம் கூடார வாயிலில் அமர்ந்திருந்த ஆபிரகாம், இறைமனிதர்கள் தம்மை விட்டுக் கடந்து போகாதிருக்க இறைஞ்சியது போல, எமையாளும் அரசியல் தலைவர்களும், உலகமக்கள் அனைவரும், அமைதி மற்றும் சமாதானத்திற்கான வாய்ப்புகள் கடந்து போகாமல் பார்த்துக்கொள்வதோடு, ஒருவர் ஒருவரை மதித்து, பணிவிடை புரிந்து, நிறை அருளையும் ஆசீரையும். அனைவரும் பெற்று மகிழ, உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் நாங்கள் அனைவரும், “கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலை பெறுகிற விதத்தில்” எம்கிறித்தவ அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்றும், மாசற்றவராய் நடந்து, நேரியவற்றைச் செய்து, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்கள் ஆகும் பேற்றினைப் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பரபரப்பான எங்கள் வாழ்க்கைச் சூழலில், விறுவிறுப்பான எங்கள் பணிகளிலும் வேலைகளிலும், எங்களையே முழுமையாகத் தொலைத்துவிடாமல், மரியாவைப் போல, உம்பாதம் அமருகிற நல்ல பங்கைத் தெரிவு செய்து கொள்ளவும், எம்குடும்பத்தாரோடும் சமூகத்துடனும் நல்லுறவுடன் வாழ்கிற சிறந்த வழியை மேற்கொள்ளவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இனிய விருந்தோம்பல் இறைவனை மகிழ்விப்பதோடு, குடும்பத்தின் குறை தீரவும் வழி செய்திடும் என்பதனை இன்றைய முதல் வாசகம் விவரித்தது. எங்கள் அன்பு இறைவா, அன்பும், அறனும், விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளும், எம் இல்வாழ்க்கையை அணி செய்ய வேண்டுமென்றும், குறைகள் யாவும், அதிலும் சிறப்பாக, குழந்தையின்மை என்கிற குறை நீங்கப்பெற்ற நிறைவாழ்வு எமதாக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment