Monday, September 1, 2025

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17

லூக்கா 14:25-33

திருப்பலி முன்னுரை:

இறைஞானத்தைத் தேடி இன்று ஆலயம் நுழைந்துள்ள இறைஇயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் நன்றியோடும், மகிழ்ச்சியோடும் பங்குக்கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம்.
சாலமோன் கடவுளிடம் முதன்மையாகக் கேட்ட ஞானமே! யூதர்களை ஆண்டுவழி நடத்த அவர் விரும்பியதுவும் அதுவே. இறைத்திட்டத்தை அறிந்து கொள்ளக் கடவுளிடம் ஞானத்தையும், தூயஆவியாரையும் பெற வேண்டும் என்கிறது முதல் வாசகம். அன்பு, மன்னிப்பு, அடுத்தவரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உயரிய கிறிஸ்தவப் பண்புகளை இரண்டாம் வாசகம் எடுத்துக்கூறுகிறது.
இயேசுவின் சீடராய் மாறிட எல்லாவற்றையும் ஏன் தன் உயிரையும் விடத் தயாராக இருப்பவரே தன் சீடனாக இருக்க முடியும், தன் சிலுவையைச் சுமப்பவர்கள் மட்டுமே என் சீடராக இருக்க முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார் இயேசு. ஞானத்தைத் தேடுபவர்களாய், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஏற்றவர்களாய், தன் துன்பங்களை முழுமனதுடன் ஏற்று இயேசுவின் சீடராய் வாழக்கூடிய நல்ல சூழலைத் தர வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஞானம், இறைவனால் அருளப்படும் அறிவு, அதன் செயலாற்றல் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது சாலமோனின் ஞானம். ஞானம் ஒரு ஒழுக்க நெறியாக, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பாக எண்ணப்பட்டது. ஞானம் இஸ்ரயேல் மக்களிடையே தங்கி அவர்களை வழி நடத்தும் கருவியாகக் கருதப்பட்டது. "இறைவா இத்தகைய ஞானத்தை எனக்குத் தருவாயாக" என்று மன்றாடும் பாணியில் அமைந்துள்ளதே இன்றைய வாசகம்.சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

1. மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

2. வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

3. எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

4. காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.  எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தி வருகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும், இறைமக்களாகிய நாங்களும், உம்மைவிட மேலாக எதைக் கருதினாலும், உம சீடராய் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாய், உம்மையே பற்றிக்கொண்டு, விண்ணரசு நோக்கி முன்னேறுகிற எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் விளங்கிட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இவ்வுலகின் தலைவர்களும், எம்நாட்டின் தலைவர்களும், இவ்வுலகின் மக்கள் அனைவருமே “நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை” என்பதை உணர்ந்தவராகளாய், நிலையான மகிழ்வைத் தருகிற சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், சமாதானம் ஆகிய விழுமியங்களின்படி வாழுகிற, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அடிமையாக அல்ல, அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்தின் பொருளுணர்ந்து, சாதியின் பெயராலோ, சமயத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் அடிப்படையிலோ, பொருளாதாரம் மற்றும் பின்னணி அடிப்படையிலோ, எவரையும் புறந்தள்ளாமல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற உயர்நெறியின்படி, எங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை கட்டியெழுப்புகிற நல்லுள்ளத்தை, எமக்குத் தந்தருள     வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கட்டுமானப் பணிகளுக்கும், போர் தொடுத்தலுக்கும் மட்டுமின்றி, உம்மைப் பின்தொடர்வதற்கும், திண்ணமான தீர்மானமும், திடமான முடிவும், தியாகம் நிறை வாழ்வும் தேவை என்பதை, நற்செய்தி வாசகம்மூலம் அறிந்த நாங்கள், உம்மைப் பின்தொடர்வதில் உறுதியாய் இருக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறிப்பாக இளையோரும், உம் திருவுள்ளதை அறிந்துகொள்ளவும்,  அதன்படி தங்கள் வாழ்வை நடத்திச்சென்று, உமக்கும் பிறருக்கும் உகந்தவர்களாய்  வாழ்ந்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்

https://anbinmadal.org

Print Friendly and PDF