Tuesday, September 30, 2025

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

அபாக்கூக்கு 1:2-3, 2:2-4
2திமோத்தேயு 1:6-8,13-14
லூக்கா 17:5-10

திருப்பலி முன்னுரை:

நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்திருக்கும் இறைஇயேசுவின் தரிசனம் நாடி  பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
திருப்பலி முன்னுரை.
இறை இயேசுவின்‌ அன்பு சீடர்களே, சீடத்திகளே ! இறைநம்பிக்கையும்‌ தன்னலமற்றச்‌ செயல்பாடுகளும்‌ சீடத்துவத்தின்‌ இரு கண்கள்‌ எனக்‌ கூறி ஆண்டின்‌ பொதுக்காலம்‌ 27 ஆம்‌ ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைநம்பிக்கையும்‌ செயல்பாடும்‌ ஒரு நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போலாகும்‌. இவை ஒன்றையொன்று நிறைவாக்குகின்றன. இறைநம்பிக்கை நிறைந்தவர்‌, வெறும்‌ நம்பிக்கையோடு நின்றுவிடாமல்‌, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தன்‌ கடமையைச்‌ செய்கிறார்‌. துன்பத்திலும்‌ சோதனையிலும்‌ இறைப்பிரசன்னத்தை உணர முடியாத நாம்‌ சில வேளைகளில்‌ எங்கே இறைவா இருக்கின்றாய்‌ ? என்று இறைவனை நோக்கி எழுப்பும்‌ கூக்குரல்‌ வாழ்வின்‌ எதார்த்தம்‌. ஆனால்‌ நேர்மையுடையவரோ, தம்‌ நம்பிக்கையால்‌ வாழ்வடைவர்‌ என மொழியும்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌, நிகழ்காலத்‌ துன்பத்தைத்‌ தாண்டி நம்மை எதிர்நோக்கின்‌ திருப்பயணிகளாக வாழ அழைக்கிறது. இறைநம்பிக்கை நிறைந்த சாட்சிய வாழ்வு எத்துன்பத்தையும்‌ துணிவோடு சந்திக்கும்‌ ஆற்றல்‌ தருகிறது என ஓங்கி ஒலிக்கிறது இரண்டாம்‌ வாசகம்‌. கடுகளவு இறைநம்பிக்கையும்‌ மலையளவு காரியங்களைச் சாதிக்கும் சக்திமிக்கது என நற்செய்தி எடுத்துரைக்கிறது.

இறைநம்பிக்கை இறைவனின்‌ மாபெரும்‌ கொடை. அது தாழ்ச்சியோடு, பெயரும்‌ புகழும்‌ நாடாமல்‌, கடமையைச்‌ செய்யும்‌ செயல்பாட்டில்‌ வெளிப்படும்‌. அக்கொடை துன்பத்தில்‌ தளரா மனத்துடன்‌ வாழவும்‌, சோதனைகளில்‌ நேர்மையானவர்களாகவும்‌, தன்னடக்கத்துடன்‌ கடமையைச்‌ செய்யும்‌ சீடர்களாகளாகவும்‌ நம்மை மாற்றும்‌. அதற்கான அருளுக்காக இத்திருப்பலியில்‌ வேண்டுவோம்‌.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

யூதாவின்‌ இனத்தாரைப்‌ பிறவினத்தாராகிய கல்தேயர்‌ வழி இறைவன்‌ அடக்கியதைக்‌ கண்டு அபக்கூக்கு பொருமுகிறார்‌. இறைவன்‌ தரும்‌ பதிலோ, “ஆண்டவர்‌ மேல்‌ நம்பிக்கை வைப்பவன்‌ வாழ்வான்‌” (2: 4) என்பதாகும்‌. இன்றைய வாசகம்‌ அபக்கூக்குவின்‌ வினாவையும்‌ ஆண்டவரின்‌ விடையையும்‌ வெளிப்ப‌டுத்துகிறது. எனவே வாழ்க்கையில்‌ வெற்றிக்கு வழி கோல்வது எந்த ஒரு காரியத்திலும்‌ விசுவாசத்தோடு, நம்பிக்கைத்‌ திடனோடு ஈடுபடுவதாகும்‌. ஆண்டவரிடம்‌ விசுவாசம்‌ வைப்பது என்பது அவரிடம்‌ நம்மையே சரணடையச்‌ செய்வதாகும்‌ என்றுரைக்கும் இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
1. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;  நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.   நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;  புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி
2. வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.  அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;  நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி
3. அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

தன்‌ “அன்பு மகன்‌ திமொத்தேயுவுக்கு", புனித பவுல்‌ கூறும்‌ அறிவுரைகள்‌ இன்றைய வாசகம். இன்று‌ சிறப்பாகத் திமொத்தேயு பெற்ற அருட்கொடைகளுக்கு அவர்‌ பிரமாணிக்கமாய்‌ இருக்கும்படி பவுல்‌ வேண்டுதல்‌ விடுக்கிறார்‌. சிறப்பாக நம்‌ எல்லோருக்கும்‌ அளிக்கப்பட்ட வரம்‌ அன்பு. இவ்‌அன்பு வரம்பற்றிக் கூறும்‌ பவுல்‌, “ஒருவருக்கொருவர்‌ அன்பின்‌ அடிமைகளாயிருங்கள்‌ ”என்பார்‌. இவ்‌அன்பு நம்‌ கிறிஸ்துவ வாழ்வின்‌ அடித்தளமாகவும்‌, அவ்வடித்தளத்தின்‌ மேல்‌ கட்டிய கட்டடமாகவும்‌, நம்‌ நினைவு, சொல்‌, செயல்களில்‌ வெளிப்படுகிறதா? என்பதை சோதித்துப் பார்க்க அழைக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. பணிக்குருத்துவத்துக்கான அழைப்பினைப் பெற்று, திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், பொதுகுருத்துவதில் பங்குபெறும் இறைமக்கள் யாவருமே, தங்களுக்குரிய கடமைகளைச் செய்யவும், எந்த நிலையில் இருந்தாலும், பெருமை பாராட்டாமல், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ என்கிற தாழ்ச்சிநிறை மனநிலையோடு வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கொடுமையை ஏன் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினை ஏன் காணச் செய்கின்றீர்?” என அபக்கூக்கு நூலில் விவரிக்கப்படும் சூழலில் தான் இன்றைய உலகும் சிக்கித் தவிக்கின்றது. போர் சூழல்கள் முற்றிலும் நீங்கவும், வன்முறை கலாச்சாரம் முடிவுக்கு வரவும், பேதமைகள், பிளவுகள் அறவே ஒழியவும் அமைதியின் அரசு உலகெங்கும் உதிக்கவும், ஆட்சி செய்வோரும், தலைமை பொறுப்புகளில் இருப்போரும், குடிமக்கள் நாங்களும், நாளுமே உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. யூபிலி ஆண்டினை கொண்டாடிவருகிற நாங்கள் அனைவரும், “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, இறை நம்பிக்கையில் வேரூன்றியவர்களாய், அன்புச் செயல்களில் திளைத்தவர்களாய், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகத் திகழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “கடவுள் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” என்பதை உணர்ந்தவர்களாக, ஆண்டவருக்கு சான்றுபகர்வதிலும், நற்செய்தியின் பொருட்டுத் துன்புறுதலிலும் திடமாய் இருந்து, மறைப்பணியாற்றும் அனைவரையும், குறிப்பாக வேதபோதக நாடுகளிலும், வேதகலாபனைகள் நிறைந்த பகுதிகளிலும், நற்செய்தி பணியாற்றுவோரையும், நீர் தாமே, உமது உறுதி தரும் ஆவியால் நிரப்ப வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அற்புதங்களைக் காண இயலும் என்கிற நற்செய்தியை முழுமையாய் நம்பிடவும், துன்பச்சூழலிலும் உறுதியாய் இருந்திடவும், எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment