பொதுக்காலம் ஆண்டின் 25 ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
ஆமோஸ் 8:4-7
1திமோத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13
திருப்பலி முன்னுரை
முன்மதியுடன் வாழ்ந்து, இறைவார்த்தைக்குச் சான்று பகரக் காத்திருக்கும் அன்புச் சகோதரிகளே, சகோதரர்களே நல்வாழ்த்துகள். விவிலிய மாதத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று நாம் இறைவார்த்தையில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது, அது விளக்கும் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது, அதன் வழியாக நாம் பெறும் நிலைவாழ்வை எப்படி முன்மதி அதாவது விவேகத்துடன் வாழ்வது என்பனவற்றைச் சிந்திக்கவும் அவற்றைச் சீரிய முறையில் செயல்படுத்தவும் அழைக்கப்படுகின்றோம். அதற்கு உதவியாக இறைவாக்கினர் ஆமோசும் திருத்தூதர் பவுலும் தங்கள் வழிகாட்டுதலை வழங்குகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நற்செய்தி, முன்மதியுடன் செயல்பட்ட ஒரு வீட்டுப் பொறுப்பாளரின் புத்திக் கூர்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 
நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும், நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை, ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது. இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம். நம்பதக்கவராய், பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்...
முதல் வாசக முன்னுரை: 
நீதியின் இறைவாக்கினர் எனப் போற்றப்படும் ஆமோஸ் தாம் கண்ட நீதியற்ற, முன்மதியற்ற செயல்கள் பலவற்றை இவ்வாசகத்தில் எடுத்துக்கூறி அவற்றை இறைவன் ஒருபோதும் மறக்கமாட்டாரென எச்சரிக்கிறார்.
வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு, கள்ளத் தராசினைப் பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார். எச்சரிக்கை விடுக்கின்றார். அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி, அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்: திபா 113:1-2, 4-6, 7-8
பல்லவி: ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி
 
மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி
ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை: 
இறைப்பற்று, கண்ணியம், அமைதியான வாழ்வு ஆகியவை சமூகத்தின் அடித்தளம். அதில் வாழும் எல்லாருக்காகவும் இறைவனிடம் மன்றாடிப் பரிந்துரைத்து நன்றி கூறுதல் அவசியமானதாகும். எல்லா மனிதரும் உண்மையை உணர்ந்து மீட்புப் பெற இறைவேண்டல் தேவையெனத் திமொத்தேயுவுக்கு திருத்தூதர் பவுல் எடுத்துரைப்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. எல்லா மனிதரும் மீட்புப் பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென விரும்புகிற, கடவுளின் கருவிகளாகத் திகழ்கிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகிய அனைவரோடும், பொதுநிலையினர் ஆகிய நாங்களும், இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழவும், அனைவரையும் இறையாட்சி நோக்கி அழைத்து வரவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசர்களுக்காகவும், உயர் நிலையில் உள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள் என்கிற இரண்டாம் வாசக அறிவுறுத்தலின்படி, உலகாளும் தலைவர்களுக்காகவும், எம்தேசத்தை ஆள்வோருக்காகவும் மன்றாடுகிறோம். நீதியின் பாதையில் நிலைத்திருந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லவும், அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போற்றிப் பேணவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. வறியோரை நசுக்கி, ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களுடைய செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என ஆணையிட்டுக் கூறும் இறைவா! இவ்வுலகின் அனைத்து நிலைகளிலும் தலைவிரித்தாடும் அநீதியை எதிர்த்துப் போராடவும், ஏழைகளைத் தூசியிலிருந்து தூக்கி நிறுத்துகின்றவரும்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி-விடுகின்றவருமான உம்மைப் போலவே, நாங்களும் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. வசதியாக வாழ்வதற்குத் தேவையான செல்வதைத் திரட்டுவதில் முனைப்பாய் இருக்கும் நாங்கள் எல்லோரும், நேரிய வழிகளில் பொருளீட்டவும், ஈட்டிய பொருளைக் கொண்டு, நிலையான உறைவிடங்களில் நண்பர்களைத் தேடிக்கொள்ளவும், ஒளியின் மக்களுக்குரிய முன்மதியோடு செயல்படவும் தேவையான அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்களும், நல்ல பணிகளில் அமர்த்தப்படவும், பணிபுரியும் இடங்களில், சிறியவற்றிலும், பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய், பொறுப்புடனும் திறமையுடனும் கடமையாற்றி, வாழ்வில் உயர்நிலையை அடையவும், எந்நாளும் நிறைமகிழ்வுடன் வாழவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
No comments:
Post a Comment