Monday, September 8, 2025

பொதுக்‌ காலம்‌ 24ஆம்‌ ஞாயிறு

 பொதுக்‌ காலம்‌ 24ஆம்‌ ஞாயிறு 
 (திருச்சிலுவை மாட்சி - விழா)

இன்றைய வாசகங்கள்

எண்ணிக்கை 21:4-9 
பிலிப்பியர்‌ 2:6-11 
யோவான்: 3:13-17

திருப்பலி முன்னுரை

நிலைவாழ்வின்‌ ஊற்றான திருச்சிலுவையில்‌ மாண்புக்குரிய சகோதரிகளை, சகோதரர்களே நல்வாழ்த்துகள்‌. விவிலிய மாதத்தின்‌ இரண்டாவது வாரத்தில்‌ “நான்‌ நிலைவாழ்வைப்‌ பெற வழிகாட்டும்‌ உம்‌ வார்த்தையில்‌ நம்பிக்கை கொள்கிறேன்‌” என்ற மையப்‌ பொருளில்‌ நடைபெறும்‌ இத்திருப்பலிக்‌ கொண்டாட்டத்தில்‌ பங்கேற்றுக்‌ கொண்டிருக்கிறோம்‌.

கடவுளின்‌ வார்த்தைகள்‌ ஒவ்வொன்றும்‌ நமக்கு நல்வாழ்வை வழங்கும்‌ ஆற்றல்‌ கொண்டவை. அதில்‌ ஒன்றுதான்‌ நிலைவாழ்வு. மனிதரின்‌ இறுதி இலக்கும்‌ நிலைவாழ்வு தான்‌. இந்த நிலைவாழ்வை ஆண்டவரும்‌ மீட்பரும்‌ நம்‌ அன்புச்‌ சகோதரருமான இயேசுவில்‌ நம்பிக்கை கொள்ளும்‌ எல்லாரும்‌ பெற்றுக்‌ கொள்வர்‌. இந்த நிலைவாழ்வை எல்லாரும்‌ பெற வேண்டும் என்பதற்காகவே தந்தையின்‌ திருவுளத்தின்‌ வெளிப்பாடாக இயேசு சிலுவையில்‌ தம்மையே கையளித்தார்‌. 

அதுவரை குற்றம்‌ செய்தோரின்‌ கொடிய தண்டனைக்‌ கருவியாக விளங்கிய சிலுவை, “திருச்சிலுவை' என்ற சிறப்புத்‌ தகுதியுடன்‌ மாட்சி பெற்றது. ஆம்‌. “சிலுவை எனது பெருமை' எனக்‌ கூறிய திருத்தூதர்‌ பவுலும்‌ தன்‌ வாழ்க்கையினால்‌ நிலைவாழ்வின்‌ சான்றாளராகத்‌ திகழ்ந்தார்‌. நாமும்‌ இறைவார்த்தை தரும்‌ உந்துதலால்‌ நிலைவாழ்வின்‌ கருவிகளாக வாழத் திருச்சிலுவையின் ஒளியில்‌ இறைவேண்டல்‌ செய்பவர்களாய்‌ இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை:

பாம்பு கடியினால்‌ பரிதவித்துக்‌ கொண்டிருந்தோர்‌, உயர்த்தப்பட்ட வெண்கலப்‌ பாம்பைப்‌ பார்த்து நலம்‌ பெற்றனர்‌. அதுபோலச் சிலுவையில் தொங்கும்‌ இயேசுவைப்‌ பார்ப்போர்‌ நிலைவாழ்வை அடைவர்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டும்‌ முதல்‌ வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)
பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். நீதிமொழிகள்மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

கடவுள்‌ வடிவில்‌ உயர்நிலையில்‌ இருந்தவர்‌ இயேசு. அவர்‌ தம்மைச்‌ சிலுவைச்‌ சாவு மட்டும்‌ தாழ்த்தி, கீழ்ப்படிந்ததால்‌ கடவுள்‌ அவரை மிகவே உயர்த்தி மேன்மையுறச்‌ செய்தார்‌. கீழ்ப்படிவோருக்கு மிகச்‌ சிறந்த எடுத்துக்காட்டாக வழங்கப்படும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா… அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருச்சிலுவையின் மகிமையை கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திரு அவையும், அதன் தலைவராம் திருத்தந்தை லியோ, ஏனைய ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும், இயேசுவின் திருச்சிலுவையை ஆராதிப்பதோடு நின்றுவிடாமல், சிலுவையின் பாதையில் உறுதியுடன் பயணிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கிட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இறைவன் அருளிய விடுதலை வாழ்வின் மேன்மையை உணராமல், அவருக்கு எதிராகப் பேசி, தம்மீது தண்டனையை வருவித்துக்கொண்ட இஸ்ராயேலரைப் போலவே, இறைவன் அருளும் அமைதியின் பாதையில் நடவாமல், சண்டை - சச்சரவுகள், போர் - போராட்டங்கள், வன்முறை - தீவீரவாதம் போன்ற அழிவின் பாதைகளைத் தேர்வுசெய்யும் உலகினை, நீர்தாமே நல்வழிக்கு அழைத்து வரவும், உலகத்தலைவர்களும், எம்நாட்டுத் தலைவர்களும், தம் பொறுப்புணர்ந்து செயல்படவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு, உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைத்தந்தையின் அன்பினை, உலக மக்கள் அனைவரும், சாதி, மத, இன பேதமின்றி உணரவும், கிறித்தவர்களாகிய நாங்கள் அந்த இறையன்பை பற்றுறுதியுடன் வெளிப்படுத்தும் மக்களாக விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே வெறுமையாக்கி, கீழ்ப்படிந்து, தாழ்த்திக்கொண்டதனால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடும் அளவிற்கு கடவுளால் உயர்த்தப்பட்டு, எப்பெயருக்கும் மேலான பெயர் அருளப்பட்ட இயேசுவைப் பின்பற்றி, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், தாழ்ச்சியை அணிந்தவர்களாகவும், துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்களாகவும் வாழ்ந்திட    வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என நாவாலே அறிக்கையிடுவதோடு நில்லாமல், வாழ்வாலும் சான்று பகரவும், வாழ்வின் எல்லாச் சூழல்களிலும், சிலுவையைப் புறந்தள்ளாமலும், சிலுவையைக் கண்டு பயந்தொளியாமலும் வாழ, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment