Sunday, September 21, 2025

பொதுக் காலம் 26ஆம் ஞாயிறு

 பொதுக் காலம் 26ஆம் ஞாயிறு 

(தமிழக விவிலிய ஞாயிறு)


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

ஆமோஸ் 6:1,3-7
1திமோத்தேயு 6:11-16
லூக்கா 16:19-31

திருப்பலி முன்னுரை

இறைவார்த்தையில் நம்பிக்கை கொள்ளவும், அதனை வாழ்வாக்கவும் பெயர் சொல்லி அழைக்கப்பட்டுள்ள பேரன்புமிகு சகோதரிகளே, சகோதரர்களே ! தமிழக விவிலிய ஞாயிறு நல்வாழ்த்துகள். உலகத் திரு அவை இந்த ஆண்டினை கிறிஸ்து பிறப்பின் 2025ஆம் ஆண்டு யூபிலியாக உவகை பொங்கக் கொண்டாடும் வேளையில் தமிழகத் திரு அவை இன்று விவிலிய ஞாயிறை எழுச்சியுடன் கொண்டாடுகின்றது. 'நான் உமது வார்த்தையில் நம்பிக்கை கொள்கிறேன்' என்று நாம் ஒவ்வொருவரும் அறிக்கையிடும் விதத்தில் மையக்கருத்து அமைந்துள்ளது. இது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆண்டாண்டு தோறும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இறைவாக்கு வாசிப்பு, பல சவால்களுக்கு மத்தியில் இறைவார்த்தையை வாழ்வாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே வியப்புக்குரிய விதத்தில் வளர்ந்துள்ளன என்றால் அது மிகையாகாது. 


இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும், இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனம் இல்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு.ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள விசுவாச வாழ்வில் போராட்டம் நடத்திடத் திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார்.

இச்சூழ்நிலையில் இந்த ஆண்டு இறைவார்த்தையை ஏற்று, நம்பி, வாழ்வாக்கி, பிறருக்கு உகந்த முறையில் வழங்கத் தமிழகத் திரு அவையின் திருவிவிலிய அருள்பணிக் குழுவும் நமது பங்குத் திரு அவையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம். இம்முயற்சிகள் நிறைபலனைத் தந்து நம் வாழ்வு எல்லா நிலைகளிலும் பெரு வெற்றி காண இறையருள் துணைநிற்க வேண்டுமென்று இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.

முதல் வாசக முன்னுரை: 

தீயன செய்து பேரின்பம் கொள்வோர் அச்செயலினின்று விடுவிக்கப்படுவர். ஒருவர் தாம் செய்யும் அருவருப்புச்செயல் எதையும் நியாயப்படுத்த முடியாது. ஒருநாள் வரும்; அப்போது நேரியனவற்றைச் செய்பவரே நிறைமகிழ்வு கொள்வர் என்பதைச் சுட்டிக்காட்டும் இறைவாக்கினர் ஆமோசின் கருத்துகளை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
1. ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

2. ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

3. அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

திருத்தூதர் பவுலின் மனங்கவர்ந்த பணியாளராக விளங்கியவர் திமொத்தேயு. இவர் எபேசுத் திரு அவையின் ஆயரும் ஆவார். அவருக்கு ஆண்டவர் இயேசுவின் அரும்பண்புகளை பவுல் விளக்கிக் கூறுகிறார். அத்துடன் திமொத்தேயு கடைப்பிடிக்க வேண்டிய நம்பிக்கைச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் பவுல், திமொத்தேயுவின் சான்று வாழ்வு எவ்வளவு முதன்மையானது என்பதையும் இவ்வாசகத்தில் விளக்கிக் கூறுகிறார். உளம் திறந்து உவகையுடன் இவ்வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்” எனத் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பவுலடியார் அறிவுறுத்துகிறார்.  திரு அவைக்கான அழைப்பும், திருஅவையின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்குமான அழைப்பும் அதுவேயென உணர்ந்து, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகிய அனைவரோடும், பொதுநிலையினர் ஆகிய நாங்களும், நிலை வாழ்வு நோக்கிப் பயணிக்கும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர்” என்கிற இரண்டாம் வாசக கூற்றின் அடிப்படையில், உலகாளும் தலைவர்களுக்காகவும், எம்தேசத்தை ஆள்வோருக்காகவும் மன்றாடுகிறோம். அநீதியின் செயல்களை அறவே ஒழித்து, அமைதியின் பாதையைத் தேர்வு செய்து, மாந்தர் அனைவருக்கும், குறிப்பாக எளியோருக்கும், வறியோருக்கும், நலிவுற்றோருக்கும் நலம் தருகிற நல்லாட்சி நல்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வறியோரை நசுக்கி, எளியோரை ஒடுக்கி, அநீதி புரிபவர்களின் அழிவு நிச்சயம் என்றுரைக்கும் முதல் வாசகம் உணர்த்துகிற உண்மையை உணர்ந்து, மக்கள் அனைவரும், சிறப்பாக அதிகாரத்தில் இருப்போரும், சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருப்போரும், பணம், அந்தஸ்து, சாதி, மதம், பாலினம், பிறப்புப் பின்புலம் ஆகிய காரணங்களைக் காட்டி எவரையும் கீழ்மைப் படுத்தாமல், அனைவரையும் மாண்புடன் நடத்தும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கிறித்தவ அழைப்புப் பெற்றுள்ள நாங்கள் அனைவரும், பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடவும், நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடவும், குறைச் சொல்லுக்கு இடந்தராமல், விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடவும், உரிய காலத்தில் நிலை வாழ்வைப் பற்றிக்-கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      
 
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இன்றைய நற்செய்தி உவமையில் வருகிற செல்வரிடம் இருந்த 'கண்டுகொள்ளாமை' 'பிறர் மீது அக்கறையின்மை' 'நான் உண்டு என் நலன் உண்டு' என்கிற மனநிலையோடு வாழாமல், இயன்றவரை பிறருக்கு உதவும் அக்கறையுடனும், அன்புடனும் வாழத் தேவையான, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment