பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
சீராக் 15:15-20
1கொரிந்தியர் 2:6-10
மத்தேயு 5:17-37
திருப்பலி முன்னுரை
பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அழைக்கின்றது. நல்லது- தீயது, நெருப்பு- நீர், வாழ்வு- சாவு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான் நமது விருப்பத்தைப் பொறுத்தது.
இயேசு திருச்சட்டத்தின் வாக்குகளைப் பற்றி வெளிப்படுத்துகின்றார். திருச்சட்டத்திலிருந்து அனைத்தும் நிறைவேறாதவரை அச்சட்டத்தின் எழுத்தோ சிறுபுள்ளியோ ஒழியாது என்று பதிவு செய்கின்றார். இறைவாக்கு நமக்கு வழங்கும் அறநெறிகளின்படி நாம் வாழ அழைப்பு விடுக்கின்றார். இதனை மறந்து மனம்போன போக்கில் வாழ்ந்து அடுத்தவரின் வாழ்வாதரத்தை அழிக்கும் இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும் வன்மையாகக் கண்டிக்கின்றார்.
இயேசுவின் நெறியோ அகமனப் பக்குவத்தைச் சார்ந்தது. நற்சிந்தனைகளுக்கும் தூய எண்ணங்களுக்கும் முக்கிவத்துவம் கொடுப்பது. ஏனென்றால் அகமனப் பக்கவத்தைப் பொறுத்தே நம் வெளிச் செயல்பாடுகள் இருக்கும் என்பதை இங்கு நன்கு உணர்த்துகின்றார் இயேசு. சுயநலமற்ற, அன்புக் கலந்த அக்கறை உணர்வோடு உண்டாகும் கோபத்தைத் தான் ஆணடவர் இயேசு பரிசேயரிடமும், ஆலயத்திலும் வெளிப்படுத்தினர். ஆகவே கோபம், பகை, வெறுப்பு இவைகளை அடியோடு ஒழிக்க முயல்வோம். மற்றவர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை மட்டும் மனதில் கொண்டு இத்திருப்பலியில் கலந்து இறையருள் நாடிடுவோம் வாரீர்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
சீராக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும், வாழ்க்கை மரபு மற்றும் நெறிமுறைகளையும் தாங்கி வருகிறது. மாந்தர்கள் முன் வாழ்வும், சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். கடவுள் மனிதர்களின் அனைத்துச் செயல்களையும் காண்கின்றார். பழைய ஏற்பாடுகளில் ஞானத்தை வெளிப்படுதும் சிறந்த நூலாகிய சீராக் ஞானநூலின் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: 119: 1-2, 4-5, 17-18, 33-34
1. மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். . பல்லவி
2. ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!. பல்லவி
3. உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி
4. ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
நமது வாழ்வின் வழி எளிமையானதல்ல. அது மிகக் கடினமானது. இத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்க நமக்கு இறைஞானம் வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் வெளிப்படுத்துகின்றார். மாந்தருக்கு வேண்டியது உலக ஞானம் அல்ல. இறைஞானமே! நாம் மேன்மைப் பெற வேண்டும். வாழ்வுப் பெற வேண்டும் என்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதே இறைஞானம். இறைஞானம் இறைவனை அன்புச் செய்வோருக்குத் தூய ஆவியார் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இவற்றை விளக்கம் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன், உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்த இறை ஞானத்தைப் பின்பற்றுகிற தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், எதிர்வருகிற தவக்காலத்தில், இறைவேண்டல், தவமுயற்சிகள், பிறரன்பு செயல்கள் ஆகியவற்றில், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் ஈடுபட்டு, ஏற்புடைய காலமாக இந்தக் காலத்தை மாற்றிட, அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்” என்கிற முதல் வாசகம் இன்றைய உலகிற்கு முன் இருக்கும் சவாலை எம்மனதிற்குள் எழுப்புகின்றது. போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், வாழ்விற்கான வழிகளைத் தெரிவு செய்து பயணிக்க, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்” என்கிற சீராக்கின் ஞானம், எங்களையும், எங்கள் இளையோரையும் பிள்ளைகளையும் நிரப்பவும், இறைதிருவுளப்படியும், நல்மனித விழுமியங்களின்படியும், சமூக வழிகாட்டு நெறிமுறைகளையின்படியும் எங்கள் வாழ்க்கையை அமைத்து, ‘ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்’ என்கிற திருப்பாடல் ஆசியுரையை எமதாக்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அனைத்தையும் துருவி ஆய்கிற தூய ஆவியாரின் பார்வையில் நாங்கள் அனைவரும் மாசற்றவர்களாய் விளங்கவும், கொலை, விபசாரம் போன்ற மாபாதகங்களை தவிர்க்கும் மக்களாக மட்டுமல்லாமல், பொய் சொல்லாத தூய நாவுடையவர்களாகவும், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுகிற நேர்மையுடையவர்களாகவும் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றுபவர்களாகவும், பகைமை பாராட்டாத நல்மனத்தோராகவும், ஒப்புரவையும் ஒன்றிப்பையும் விரும்புகிற மக்களாகவும் எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், சமுதாயத்திலும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment