Tuesday, May 26, 2026

மூவொரு இறைவன் பெருவிழா 31-05-2026

மூவொரு இறைவன் பெருவிழா 31-05-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 34: 4-6, 8-9
2 கொரிந்தியர் 13:11-1 3
யோவான்  3:16-18

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தை நிறைவு செய்து, இன்று நாம் திருச்சபையின் மிக முக்கியமான மறைபொருளாகிய மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தந்தை, மகன், தூய ஆவியானவர் என மூன்று ஆள்களாய் இருந்தாலும், அன்பினால் ஒன்றிணைந்த ஒரே கடவுளை இன்று நாம் போற்றிப் புகழ்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், "தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" என்று வாசிக்கிறோம். மூவொரு இறைவன் என்பது ஒரு கணக்கு அல்ல, அது ஒரு உறவு. தந்தை - படைப்பவர், மகன் - மீட்பவர், தூய ஆவி - வழிநடத்துபவர். இந்த மூவரும் எவ்வாறு அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளார்களோ, அவ்வாறே நாமும் நமது குடும்பங்களிலும், சமூகத்திலும் அன்பினால் ஒன்றிணைய அழைக்கப்படுகிறோம். "தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே" என்று நாம் சிலுவை அடையாளம் வரையும் ஒவ்வொரு முறையும் இந்த உறவுக்குள் நுழைகிறோம். அந்த அன்பின் உறவில் வளர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9)

சீனாய் மலையில் மோசேக்கு ஆண்டவர் காட்சி தந்தபோது, தம்மை "இரக்கமும் அருளும் கொண்ட கடவுள்" என்று வெளிப்படுத்துகிறார். மக்கள் பாவம் செய்தபோது, மோசே அவர்களை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடுகிறார். இறைவன் கோபப்படுவதில் மெதுவானவர், பேரன்பு காட்டுவதில் வல்லவர் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

1. எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. - பல்லவி

2. உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

3. உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (2 கொரிந்தியர் 13: 11-13)

"ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" என்ற ஆசீர்வாதத்தோடு புனித பவுல் இந்த வாசகத்தை முடிக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் அமைதியோடும் அன்போடும் வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும், எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாகிய மூவொரு கடவுளின் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில் தாயாம் திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். மூவொரு இறைவனிடம் காணப்படும் ஒருமித்த சிந்தனையும் செயல்பாடும் எங்களிலும் இருந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “வணங்காக் கழுத்துள்ள மக்களாகிய எங்கள் கொடுமையையும், எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்ற மோசேயின் வேண்டுதலின்படி, போர்களாலும், வன்முறைகளாலும், தவறான முடிவுகளாலும் பாழ்பட்டுப்போயிருக்கிற எம் உலகையும், நாட்டையும், மாநிலத்தையும், நீர் தாமே கனிவோடு கண்ணோக்கி, அமைதியையும், நிம்மதியையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.” என்கிற பவுலடியாரின் அறிவுரைகளைச் சிரமேற்கொண்டவர்களாக எங்கள் பங்கு த்தளமும், அன்பியங்களும், குடும்பங்களும், எப்பொழுதும் அன்பு நிறைந்த, ஒற்றுமை நிலவும் சமூகங்களாக விளங்கிட   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்” என்கிற இன்றைய இரண்டாம் வாசக அறிவரையை புரிந்து கொண்டு, இன்றைய இளைஞர்களும் இளம்பெண்களும், சிற்றின்பம், உண்மையான மகிழ்ச்சி ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களாக, பொறுப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும், நன்னடத்தையுடனும், தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமும் பரிவும் உள்ளவரும், சினம் கொள்ளத் தயங்குபவரும், பேரன்புமிக்கவவரும்; நம்பிக்கைக்குரியவருமான கடவுள் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே விரும்புகிறவர் என்பதை உணர்ந்து, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைவனுக்கு உகந்த, மனமாற்றம் மிகுந்த ஒரு வாழ்க்கையை நடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment