Monday, October 26, 2026

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 1.11.2026

 பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 1.11.2026

அனைத்துப் புனிதர்கள் பெருவிழா


திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் விண்ணகத்தில் கடவுளின் திருமுன் மகிழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.

திருச்சபையினால் அதிகாரப்பூர்வமாகப் புனிதர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது, மண்ணுலகில் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி, இன்று விண்ணகப் பேரின்பத்தில் இணைந்திருக்கும் எண்ணற்ற புனிதர்களை இன்று நாம் நினைவு கூர்கிறோம். அவர்கள் நமக்காகப் பரிந்து பேசுவதுடன், நாமும் புனித வாழ்வு வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறார்கள்.

இன்றைய நற்செய்தியில், இயேசு வழங்கிய 'மலைப்பொழிவு' அல்லது 'பேறுபெற்ற நிலைகள்' புனித வாழ்விற்கான வரைபடமாகும். ஏழ்மை, இரக்கம், தூய்மை, அமைதி மற்றும் நீதிக்காகத் துன்புறுத்தப்படுதல் ஆகியவையே விண்ணகத்திற்குச் செல்லும் வழிகள் என்பதைப் புனிதர்கள் நமக்குக் காட்டியுள்ளனர். நாமும் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையோடு புனிதத்தை நோக்கிப் பயணம் செய்ய வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

விண்ணகத்தில் அரியணையின் முன்பும், ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் முன்பும் நின்றுகொண்டிருக்கும் எண்ணற்ற புனிதர்களைப் பற்றிய காட்சியைத் திருத்தூதர் யோவான் விவரிக்கிறார். அவர்கள் பெரும் துன்பங்களிலிருந்து கடந்து வந்தவர்கள் என்றும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தங்கள் ஆடைகளை வெண்மையாக்கியவர்கள் என்றும் விவரிக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 .

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

2. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

3.இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

நாம் கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய அன்பு என்பதைப் புனித யோவான் வியப்புடன் கூறுகிறார். நாம் இப்போது கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம்; கிறிஸ்து வெளிப்படும்போது நாமும் அவரைப் போலவே இருப்போம் என்ற நம்பிக்கையோடு, நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. புனிதர் அனைவரின் திருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில், திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். புனிதத்தின் பாதையில் நாங்கள் எந்நாளும் பயணித்து, வாகை சூடியவர்களாய் வானக வீட்டை அடையும் பேற்றினை பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்களுக்கும் விண்ணக பேரின்பத்தில் பங்கு தரத் திருவுளம் கொண்ட இறைவா, இவ்வுலகில் அமைதி நிலவ வேண்டுமென்றும், தலைவர்களும் குடிமக்களாகிய நாங்களும், நீதியின் பாதையில் பயணித்து ஒன்றுபட்ட உலகை உருவாக்க       வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறந்த அடியார்களை நினைவு கூர்ந்து ஜெபிக்கிற இம்மாதத்தில், எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்குகளிலும் மரித்த ஆன்மாக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்கள் அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியையும், முடிவில்லா பேரின்பத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்” என்பதை எடுத்தியம்பும் யோவானின் திருமடலின் கூற்றை உணர்ந்தவர்களாக, நாங்களும், எங்கள் குடும்பமும், இளையோரும், குழந்தைகளும், இவ்வுலகில் வாழ்கிறபோதே உம்மைப்போலவே இருக்கவும், நீர் தூயவராய் இருப்பது போல் நாங்களும் தூயவராக வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஏழையரின் உள்ளத்தோராகவும், கனிவுடையோராகவும், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோராகவும், இரக்கமுடையோராகவும், தூய்மையான உள்ளத்தோராகவும், அமைதி ஏற்படுத்துவோராகவும் துலங்கி, இவ்வுலகிலும், மறுவுலகிலும்   பேறுபெற்றோராய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, October 22, 2026

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 25.10.2026

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 25.10.2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயண நூல் 22: 21-27
1 தெசலோனிக்கர் 1:  5–10
மத்தேயு 22: 34-40

திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 30-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

"திருச்சட்ட நூலில் மிக முக்கியமான கட்டளை எது?" என்ற பரிசேயரின் கேள்விக்கு இயேசு இன்று பதிலளிக்கிறார். இறைவனை முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு செய்வதும், நமக்கு அடுத்திருப்பவரை நம்மைப் போலவே அன்பு செய்வதுமே அந்த இரு பெரும் கட்டளைகள். இந்த இரண்டு கட்டளைகளுக்குள் தான் ஒட்டுமொத்தத் திருச்சட்டமும் இறைவாக்குகளும் அடங்கியுள்ளன.

முதல் வாசகத்தில், அன்னியர்கள், விதவைகள், ஏதிகள் மற்றும் ஏழைகளிடம் அன்பு காட்டாதபோது, அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் சினம் கொள்வார் என எச்சரிக்கப்படுகிறோம். இரண்டாம் வாசகத்தில், தெசலோனிக்க விசுவாசிகள் எவ்வாறு சிலைகளை விட்டு விலகி, உயிருள்ள கடவுளுக்கு அன்பு செலுத்திப் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள் என்பதைப் புனித பவுல் விளக்குகிறார். நாம் ஆண்டவரிடம் காட்டும் அன்பு, பிறருக்குச் செய்யும் சேவையில் வெளிப்பட வேண்டும். அந்த அன்பின் பாதையில் நடக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் எளியோர் மற்றும் நலிந்த பிரிவினர் மீது கொண்டுள்ள அக்கறையை இவ்வாசகம் வெளிப்படுத்துகிறது. அன்னியரைத் துன்புறுத்தக் கூடாது, விதவைகளையும் அனாதைகளையும் ஒடுக்கக் கூடாது, ஏழைகளிடம் வட்டி வாங்கக் கூடாது போன்ற சமூகக் கடமைகளை ஆண்டவர் வலியுறுத்துகிறார். எளியோரின் அழுகுரலுக்கு இறைவன் செவிசாய்ப்பார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: எனது ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்

பதிலுரைப்பாடல். திபா. 18: 1-2,2-3,46.50

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர். பல்லவி

என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன. என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப் பட்டேன். பல்லவி

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக! தாம் ஏற் படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர், தாம் திருப் பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

தெசலோனிக்க திருச்சபையினர் துன்பங்களுக்கு மத்தியிலும் தூய ஆவி தந்த மகிழ்ச்சியோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் சிலைகளை விடுத்து உயிருள்ள கடவுளைத் தேடியது, மாசிதோனியா மற்றும் அக்காயாவில் உள்ள விசுவாசிகள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது என்று பாராட்டும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. நல்லாயனாம் இறைவா, திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும், எங்களை நல்வழியில் நடத்தவும், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், இறையன்பு, பிறரன்பு ஆகிய  முதன்மையான கட்டளைகளை பின்பற்றும் நன்மக்களாக விளங்கவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அமைதியின் அரசரே இறைவா, பிளவுபட்ட உலகிற்கு ஒற்றுமையையும், போர்புரியும் நாடுகளுக்கு இடையே அமைதியையும், எம் தாய்த் திருநாட்டுக்கும், தமிழகத்துக்கும் நிறைவாழ்வையும் அருள வேண்டுமென்றும், தலைவர்களும், மக்களும் பொறுப்புடன் தங்கள் பணியை ஆற்றிட அருள்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இரக்கத்தின் ஆண்டவரே இறைவா, அன்னியருக்கும், அனாதைகளுக்கும், வறியவருக்கும் நாங்கள் காட்ட வேண்டிய கருணையை, இன்றைய முதல் வாசகம் மூலம் கற்றுக்கொண்ட நாங்கள், இரக்கத்தின் மக்களாக விளங்கி, ஈகையிலும் பகிர்தலிலும் சிறந்தோங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் கோட்டையும் கற்பாறையுமான இறைவா, இடர்கள், இடுக்கண், இன்னல்கள் ஆகியவற்றால்  மனம் சோர்ந்துபோகிற மக்கள் அனைவரும், இன்றைய தியானத் திருப்பாடல் வரிகளை தமதாக்கி, உம்மை அன்பு செய்து, உம்மையே ஆற்றலாகவும் அடைக்கலமாகவும் கொண்டு, மீட்பளிக்கும் வல்லமையை உம்மிடமிருந்து பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நிறைவாழ்வின் ஊற்றாகிய இறைவா, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்தவும், எம்மீது அன்பு கூர்வதுபோல எமக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்ந்து, திருச்சட்டம், இறைவாக்கு ஆகியவற்றின் அடித்தளத்தின் மீது எங்கள் வாழ்வை கட்டியெழுப்பவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, October 11, 2026

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 18.10.2026

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 18.10.20263

அகில உலக மறைபரப்புப் பணி (நற்செய்தி அறிவிப்புப் பணி) ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 எசாயா 45:1,4-6
தெசலோனிக்கர் 1: 1-5அ
மத்தேயு 22:15-21

திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 29-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் ஞானம் மிகுந்த ஒரு பதிலைக் கேட்கிறோம். "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்ற வார்த்தை வழியாக, குடிமக்களாக நமது கடமையையும், விசுவாசிகளாக இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் இயேசு சமப்படுத்துகிறார். ஒரு நாணயத்தில் ஆட்சியாளரின் உருவம் இருப்பது போல, மனிதர்களாகிய நமக்குள் இறைவனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் முழுமையாக இறைவனுக்கே சொந்தமானவர்கள்.

முதல் வாசகத்தில், பிற இனத்து மன்னரான சைரசைக் கடவுள் தமது கருவியாகப் பயன்படுத்துவதை வாசிக்கிறோம். இரண்டாம் வாசகத்தில், தெசலோனிக்க விசுவாசிகளின் விசுவாசத்தையும் உழைப்பையும் புனித பவுல் பாராட்டுகிறார். இன்று உலக மறைப்பணி ஞாயிறு கொண்டாடப்படும் வேளையில், நற்செய்தி அறிவிக்கும் பணி நம் ஒவ்வொருவருக்கும் உரியது என்பதை உணர்வோம். நாம் இறைவனுக்குப் படைக்க வேண்டிய நற்செயல் என்னும் காணிக்கையை அவருக்குத் தர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை 

ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலரை மீட்க, பாரசீக மன்னர் சைரசைத் தேர்ந்தெடுக்கிறார். சைரசு இறைவனை அறியாதவராக இருந்தாலும், கடவுள் அவரைத் தமது கருவியாகப் பயன்படுத்துகிறார். "நானே ஆண்டவர்; என்னைத் தவிர வேறு எவரும் இல்லை" என்று உலகெங்கும் பறைசாற்றப்படும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
பதிலுரைப்பாடல். திபா. 96: 1, 3-5, 7-10

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

ஏனெனில், ஆண்டவர் மாட்சி மிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை 

புனித பவுல் அடியார் தெசலோனிக்க திருச்சபையினருக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார். அவர்களின் விசுவாசத்தினால் விளைந்த செயல், அன்பினால் மிகுந்த உழைப்பு மற்றும் எதிர்பார்ப்பினால் வந்த உறுதி ஆகியவற்றை அவர் பாராட்டும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. ஆண்டவரால் திருப்பொழிவு செய்ய்யப்பட்டு, தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக விளங்குகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் தங்களது மேய்ப்புப்பணியை சிறப்பாகச் செய்திடவும், ஒரே மந்தையின் மக்களாகிய இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், ஆயனின் பின்செல்லுகிற நல்ல ஆடுகளாய் விளங்கிடவும் அருள்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசைவரை நீரே மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் என அறிக்கையிடும் நாங்கள் உலக அமைதிக்காகவும், நாட்டு நலனுக்காகவும், எம்மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் மன்றாடுகிறோம். தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும் பொறுப்புடன் செயல்பட்டு வளர்ச்சி காண வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தூய பவுலடியாரால் போற்றப்பட்ட தெசலோனிக்கரிடமிருந்த செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் பெறுகிற மனவுறுதி ஆகியவற்றின் மூலம் இறைவனின் உயிருள்ள சாட்சிகளாகக் கிறிஸ்தவர்கள் யாவரும் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை நற்செய்தியின் மூலம் அறிந்தவர்களாகிய  நாங்கள் அனைவரும், எங்கள் குழந்தைகளையும், இளையோரையும், நாட்டுக்கேற்ற நல்ல மனிதர்களாகவும், இறைவனுக்குகந்த நல்ல பிள்ளைகளாகவும் வளர்த்தெடுக்கும் அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அனைத்து நலன்களும் பெற்றிடவும், உடல் உள்ள ஆன்மீக நலத்துடன் வாழவும், வாழ்வின் எல்லாச் சூழலையும் எதிர்கொள்வதற்குத் தேவையான துணிவு பெறவும், குடும்பங்கள் அனைத்தும் அமைதியில் மகிழ வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, October 8, 2026

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 11.10.2026

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 11.10.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 25: 6-10
பிலிப்பியர் 4: 12-14, 19-20
மத்தேயு 22: 1-14

திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் "அரச திருமண விருந்து" உவமையின் வழியாக இறைவன் நமக்குத் தரும் மீட்பின் அழைப்பை இயேசு விளக்குகிறார். இறைவன் எல்லா மக்களுக்கும் ஒரு பெரும் விருந்தை ஆயத்தம் செய்துள்ளார். ஆனால், அழைப்புப் பெற்றவர்களோ உலகக் காரியங்களைக் காரணம்காட்டி வர மறுக்கிறார்கள். இதனால் அந்த அழைப்பு தகுதியற்றவர்களுக்கும், பாவிகளுக்கும் வழங்கப்படுகிறது.

முதல் வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர், ஆண்டவர் சாவையே அழித்து எல்லா மக்களின் கண்ணீரையும் துடைக்கும் ஒரு பெரும் விருந்தைப் பற்றி முன்னறிவிக்கிறார். இரண்டாம் வாசகத்தில், எத்தகைய சூழலிலும் மனநிறைவோடு வாழும் ஆற்றலை இறைவன் தருகிறார் எனப் புனித பவுல் கூறுகிறார். இறைவனின் அழைப்பை ஏற்று அவரது விருந்துச் சாலைக்குள் நுழைய நாம் 'திருமண ஆடை' என்னும் புனிதமான வாழ்வை அணிந்திருக்கிறோமா? எனச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இந்தத் திருப்பலி என்னும் விண்ணக விருந்தில் தகுதியுடன் பங்கேற்க வரம் வேண்டி, இறைவனிடம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை 

ஆண்டவர் சீயோன் மலையில் எல்லா மக்களினத்தாருக்கும் ஒரு பெரும் விருந்தை அளிப்பார். அவர் மக்களின் முகங்களிலிருந்து கண்ணீரைத் துடைத்து, சாவையே என்றென்றைக்கும் அழித்துவிடுவார். நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கடவுள் எமக்கு மீட்பு அளிப்பார் என்ற நம்பிக்கையைத் தரும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 23: 1-3. 3b-4. 5. 6

பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி

2. தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

3 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

4 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை 

வறுமையிலும் வாழ்விலும், நிறைவிலும் குறையிலும் எவ்வாறு மனநிறைவோடு இருக்க வேண்டும் என்பதைப் புனித பவுல் அடியார் விளக்குகிறார். "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணையால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" என்ற உறுதியோடு அவர் பேசும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! . அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. அழைப்புப் பெற்ற பலரிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிலராகிய எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து அதற்கேற்ப வாழ வேண்டுமென்றும், இறைமக்கள் ஆகிய நாங்களும் ஒருவிதத்தில் அழைக்கப்பட்டவர்களே என்றுணர்ந்து எங்கள் வாழ்க்கை நிலைக்கேற்ற தூய வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இவரே நம் கடவுள்; இவர் நம்மை விடுவிப்பார்” என்கிற ஏசாயாவின் இறைவாக்கில்   நம்பிக்கை கொண்டு, உலகத்தார் அனைவரின் உண்மையான விடுதலைக்காக மன்றாடுகிறோம்    போர்களாலும், வன்செயல்களாலும் அமைதியை இழந்து தவிக்கும் உலகிற்கு, ஆண்டவர் தாமே அமைதியை அருளவும், எம் நாட்டினையும் மாநிலத்தையும் ஆட்சி புரிவோர், தீமையை ஒழித்து நனமையை நிலைநாட்ட அருள்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, மாந்தர் அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் போன்ற இன்றியமையாத் தேவைகள் அனைத்தும் கிடைக்கப்பெறவும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கப்பதற்கு பாடுபடுகிறபோதிலும், தாங்களே இல்லாமையில் தவிக்கிற நிலையில் இருக்கும் விவாசயிகள், நெசவாளர்கள், தொழிலாளிகள் எல்லோரும் நிறைவுடன் வாழ வழிபிறக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பலதரப்பட்ட துன்பங்களாலும் துயரங்ககளாலும் அவதியுறும் மக்கள் அனைவருக்கும், “ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்” என்கிற அருள்வாக்கும் “கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்” என்கிற இறைவாக்கும் உறுதி தந்து உற்சாகப்படுத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், தூய பவுலடியாரைப்போல, வறுமையிலும்  வளமையிலும், நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றோராய் விளங்க வேண்டுமென்றும், அதே வேளையில் “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்கிற நெஞ்சுரத்தோடு, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றோராய் விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF