Thursday, October 8, 2026

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 11.10.2026

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 11.10.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 25: 6-10
பிலிப்பியர் 4: 12-14, 19-20
மத்தேயு 22: 1-14

திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் "அரச திருமண விருந்து" உவமையின் வழியாக இறைவன் நமக்குத் தரும் மீட்பின் அழைப்பை இயேசு விளக்குகிறார். இறைவன் எல்லா மக்களுக்கும் ஒரு பெரும் விருந்தை ஆயத்தம் செய்துள்ளார். ஆனால், அழைப்புப் பெற்றவர்களோ உலகக் காரியங்களைக் காரணம்காட்டி வர மறுக்கிறார்கள். இதனால் அந்த அழைப்பு தகுதியற்றவர்களுக்கும், பாவிகளுக்கும் வழங்கப்படுகிறது.

முதல் வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர், ஆண்டவர் சாவையே அழித்து எல்லா மக்களின் கண்ணீரையும் துடைக்கும் ஒரு பெரும் விருந்தைப் பற்றி முன்னறிவிக்கிறார். இரண்டாம் வாசகத்தில், எத்தகைய சூழலிலும் மனநிறைவோடு வாழும் ஆற்றலை இறைவன் தருகிறார் எனப் புனித பவுல் கூறுகிறார். இறைவனின் அழைப்பை ஏற்று அவரது விருந்துச் சாலைக்குள் நுழைய நாம் 'திருமண ஆடை' என்னும் புனிதமான வாழ்வை அணிந்திருக்கிறோமா? எனச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இந்தத் திருப்பலி என்னும் விண்ணக விருந்தில் தகுதியுடன் பங்கேற்க வரம் வேண்டி, இறைவனிடம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை 

ஆண்டவர் சீயோன் மலையில் எல்லா மக்களினத்தாருக்கும் ஒரு பெரும் விருந்தை அளிப்பார். அவர் மக்களின் முகங்களிலிருந்து கண்ணீரைத் துடைத்து, சாவையே என்றென்றைக்கும் அழித்துவிடுவார். நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கடவுள் எமக்கு மீட்பு அளிப்பார் என்ற நம்பிக்கையைத் தரும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 23: 1-3. 3b-4. 5. 6

பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி

2. தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

3 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

4 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை 

வறுமையிலும் வாழ்விலும், நிறைவிலும் குறையிலும் எவ்வாறு மனநிறைவோடு இருக்க வேண்டும் என்பதைப் புனித பவுல் அடியார் விளக்குகிறார். "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணையால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" என்ற உறுதியோடு அவர் பேசும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! . அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. அழைப்புப் பெற்ற பலரிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிலராகிய எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து அதற்கேற்ப வாழ வேண்டுமென்றும், இறைமக்கள் ஆகிய நாங்களும் ஒருவிதத்தில் அழைக்கப்பட்டவர்களே என்றுணர்ந்து எங்கள் வாழ்க்கை நிலைக்கேற்ற தூய வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இவரே நம் கடவுள்; இவர் நம்மை விடுவிப்பார்” என்கிற ஏசாயாவின் இறைவாக்கில்   நம்பிக்கை கொண்டு, உலகத்தார் அனைவரின் உண்மையான விடுதலைக்காக மன்றாடுகிறோம்    போர்களாலும், வன்செயல்களாலும் அமைதியை இழந்து தவிக்கும் உலகிற்கு, ஆண்டவர் தாமே அமைதியை அருளவும், எம் நாட்டினையும் மாநிலத்தையும் ஆட்சி புரிவோர், தீமையை ஒழித்து நனமையை நிலைநாட்ட அருள்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, மாந்தர் அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் போன்ற இன்றியமையாத் தேவைகள் அனைத்தும் கிடைக்கப்பெறவும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கப்பதற்கு பாடுபடுகிறபோதிலும், தாங்களே இல்லாமையில் தவிக்கிற நிலையில் இருக்கும் விவாசயிகள், நெசவாளர்கள், தொழிலாளிகள் எல்லோரும் நிறைவுடன் வாழ வழிபிறக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பலதரப்பட்ட துன்பங்களாலும் துயரங்ககளாலும் அவதியுறும் மக்கள் அனைவருக்கும், “ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்” என்கிற அருள்வாக்கும் “கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்” என்கிற இறைவாக்கும் உறுதி தந்து உற்சாகப்படுத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், தூய பவுலடியாரைப்போல, வறுமையிலும்  வளமையிலும், நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றோராய் விளங்க வேண்டுமென்றும், அதே வேளையில் “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்கிற நெஞ்சுரத்தோடு, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றோராய் விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment