Sunday, November 8, 2026

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 15/11/2026

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 15/11/2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

நிதிமொழிகள் 31: 10-13,41-43,.45,54-571
தெசலோனிக்கர் 5: 1-6
மத்தேயு 25: 14-30

திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 33-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் "தாலந்து உவமை" வழியாக இறைவன் நமக்குத் தந்துள்ள கொடைகளைப் பற்றியும், அவற்றுக்கு நாம் சொல்ல வேண்டிய கணக்கைப் பற்றியும் இயேசு போதிக்கிறார். இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு திறமைகளையும், ஆற்றல்களையும் தந்துள்ளார். அவற்றை மண்ணில் புதைத்து வைப்பவர் அல்ல, மாறாக துணிச்சலோடு செயல்பட்டு அவற்றைப் பெருக்குபவரையே ஆண்டவர் பாராட்டுகிறார்.

முதல் வாசகத்தில், கடின உழைப்பும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஒரு பெண்மணி எவ்வாறு தன் இல்லத்திற்கு ஆசீர்வாதமாகத் திகழ்கிறார் என்பதை வாசிக்கிறோம். இரண்டாம் வாசகத்தில், ஆண்டவரின் நாள் திருடனைப் போல வரும் என்றும், நாம் இருளின் பிள்ளைகளாக அல்ல, ஒளியின் பிள்ளைகளாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பவுல் அடியார் எச்சரிக்கிறார். நம்மிடம் உள்ள தாலந்துகளை இறைமாட்சிக்காகவும், பிறர் நலனுக்காகவும் பயன்படுத்துகிறோமா? எனச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அந்தப் பொறுப்புணர்வுடன் இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:-

நற்பண்புகள் கொண்ட ஒரு பெண்மணி முத்தை விட விலையுயர்ந்தவர். அவர் தன் கைகளின் உழைப்பினால் குடும்பத்தை உயர்த்துவதுடன், ஏழைகளுக்கும் எளியோருக்கும் உதவி செய்கிறார். வெளித்தோற்றமான அழகை விட, ஆண்டவரிடம் பக்தி கொண்டிருப்பதே மேலானது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்:-

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

திபா 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :-

ஆண்டவருடைய நாள் எப்போது வரும் என்று எவருக்கும் தெரியாது. ஆனால் விசுவாசிகளாகிய நாம் இருளுக்குச் சொந்தமானவர்கள் அல்ல; ஒளியின் பிள்ளைகள். எனவே, மற்றவர்களைப் போலத் தூங்கிவிடாமல் விழிப்புடனும் அறிவுத் தெளிவுடனும் இருக்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. நல்லாயனாம் இறைவா, தாயாம் திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், ஆகிய அனைவரும் தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட மேய்ப்புப் பொறுப்பினை தக்கவிதத்தில் நிறைவேற்றவும், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் எங்கள் கடமைகளை தட்டிக்கழிக்காமல் வாழவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரசருக்கெல்லாம் அரசரே, உலகாளும் தலைவர்களும் எம் நாட்டினையும், மாநிலத்தையும் ஆட்சி செய்வோரும், தங்களிடம் தரப்பட்டுள்ள ஆட்சிப் பொறுப்பினை திறம்பட கையாண்டு, மக்கள் அனைவரையும் அமைதி, சமத்துவம், நிம்மதியான நிறைவாழ்வு நோக்கி வழிநடத்த, வரம் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புருவாகிய இறைவா, உம்மால் உருவாக்கப்பட்ட எங்கள் குடும்பங்களில், குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும், தமக்குரிய பொறுப்பினை உணர்ந்து, ஆண் – பெண் பாகுபாடு மறந்து, தத்தம் கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி, மூத்தோரை மதித்து, பெண்களை மாண்புடன் நடத்தி, சிறியோரை அரவணைத்து, அனைவரையும் அன்பு செய்து, எங்கள் குடும்பங்களை கட்டியெழுப்ப அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நிலைவாழ்வைத் தருகிற இறைவா, இவ்வுலகில் வாழ்ந்து மரித்த அனைவரையும் நீர் கனிவுடன் கண்ணோக்கி, தங்கள் கடமைகளை கருத்தாய் செய்தவர்களுக்கு உமது மாட்சியில் பங்களிக்கவும், அதில் சற்றே தவறியவர்களுக்கு, உமது பேரிரக்கத்தின் பொருட்டு மன்னிப்பைத் தந்து, உமது பேரின்ப வீட்டிற்க்கு அழைத்துக்கொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும் ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் வந்து பங்கு கொள்ளும்’ என்கிற உமது ஆசிமொழியினை கேட்கின்ற வகையில், எங்களுக்கு நீர் தந்துள்ள வாழ்வு, அறிவு, ஆற்றல், திறமைகள் ஆகியவற்றை நன்முறையில் பயன்படுத்தி வாழ்வில் சிறந்தோங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:

Post a Comment