Tuesday, November 15, 2022

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 20/11/2022

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு

 கிறிஸ்து அரசர் பெருவிழா


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2 சாமுவேல் 5:1-3
கொலேசையர் 1:12-20
லூக்கா 23: 35-43

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து அரசரின் அன்பில் வளர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் அன்புடன் வரவேற்கின்றோம்…

இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவை தாய் திருச்சபைக் கொண்டாடி மகிழ்கின்றது. கிறிஸ்துவின் திருப்பாடுகளின் நினைவுக் கூறப்படுகின்ற வேளையில் அன்று “”நீ யூதரின் அரசனானால் உன்னையே நீ விடுவித்துக்கொள்“ என்று எள்ளி நகையாடியக் காட்சியை நாம் நினைவுகூறுகின்றோம். “இவர் யூதர்களின் அரசன்”“ என்று கிறிஸ்து அரசருக்கு அன்றே முடி சூட்டி அவரது சிலுவையில் எழுதி வைத்தார்கள். அதனை நினைவுகூறும் வகையில் பொதுக் காலம் இறுதிநாளில் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். என்றும் அரசர் கிறிஸ்துவின் பெயரைச் சொன்னால் மூவுலகமும் ஆர்ப்பரிக்கும். கிறிஸ்து அரசர் பெருவிழா பொருளுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் அமைந்திருக்கின்றது என்பதை நமது மனதில் பதிவு செய்து திருவருகைக் காலத்தை வரவேற்க ஆயத்தமாவோம்.

கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடும் நாம் இயேசுவை நம் தலைவராக ஏற்று ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெற இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து கிறிஸ்து அரசரின் நல்லாசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

தாவீதை இஸ்ரயேலின் அரசராக இஸ்ரயேலின் பெரியவர்கள் திருப்பொழிவுச் செய்கின்றனர். அரசர் என்பவர் ஆள்பவர், தலைவர், வழிகாட்டி, வழிநடத்துபவர் என்ற பொருள் கொள்ள வேண்டும். ஆள்பவர்கள் சுயநலம் இல்லாமல் ஆண்டவரின் உதவியோடு தலைமைத் தாங்கி வழிநடத்தும் நல்ல ஆயனாகச் செயல்பட முன்வர வேண்டும். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வாசகத்தைக் கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல் 122: 1-2, 4-5

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன் எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்த செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரிணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை
பிளவுகளும், பரிவுகளும் ஏற்படுவதைத் தவிர்த்து இயேசுவை முன் மாதிரியாக் கொண்டு தன்னையே அர்ப்பணித்த உடைந்துபோன உறவுகளப் புதுப்பித்து ஒப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும். இந்தக் கருத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. புனித பவுலடியாரின் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நாமும் இறையரசில் நுழைவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உலகைப் படைத்தாளும் இறைவா! உம் திருஅவையில் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை தம் இதய அரசராக ஏற்று அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! உங்கள் பங்கில் உள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் உமது மகத்துவத்தை அறிந்து உம்மைத் தங்கள் இல்லங்ளின் அரசராக ஏற்றுத் தங்களின் வாழ்க்கை முறையால் தமக்கு அருகில் இருப்போருக்கு உம் இறையரசின் சாட்கிகளாய் வாழ்ந்துக் காட்டிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புக்கும் ஒற்றுமைக்கும் ஊற்றான இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, November 7, 2022

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 13/11/2022

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19

திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…

இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனௌறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெற முடியும் என்பதே…

இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் "ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும்" என்று உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.
 
எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது எனபதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில்  மலாக்கி நூலில் ஆண்டவரின் நாள் வருவதைப் பற்றி முன்னுரைக்கின்றார். இரு கருத்துகளை நம் கண் முன்னே வரைகின்றார். ஒன்று ஆணவக்கார்ர்களுக்கும், கொடுமை செய்வோருக்கும் நிகழபோவதையும், இரண்டு கடவுளை மனவுறுதியுடன் பற்றிக்கொள்பவர்களின் வெற்றியைப் பற்றியும் ஆகும். இந்தச் சிறிய வாசகம் “சரியானப் பாதையில் உறுதியுடன் நடந்தால் வெற்றி நமதே” என்பதை விளக்கிக்கூறுவதை கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.

பதிலுரைப்பாடல்

 மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
திருப்பாடல் 98: 5-6, 7-8, 9

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.  ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கிக் கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,  பல்லவி

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!  ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்;   பல்லவி

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் உழைக்காதவன் உண்ணலாகாது. நாங்கள் உழைப்பது போல் நீங்களும் உழைக்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். பிறர் உழைப்பில் வாழ்வதைக் கண்டிக்கும் அவர் கிறிஸ்துவின் பெயரால் உழைக்க மனமில்லாத அனைவரையும் உழைத்து உண்ணவேண்டுமென்று கட்டளையிடும் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நம் வாழ்வை வளமாக்குவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. நீதியின் கதிரவனை எம்மேல் எழச் செய்யும் இறைவா! உம் திருஅவை இயேசு கிறிஸ்துவின் பெயரின் நிமித்தம் எதிர்க்கொள்ளும் எல்லாவிதமான நிந்தனைகளையும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் கடந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், திருப்பணியாளர்கள் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய மன உறுதியையும், ஞானத்தையும் அருள்மாரிப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நாவன்மையையும் ஞானத்தையும் எம்மேல் பொழியும் இறைவா! உங்கள் பங்கில் உள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் தம் சொந்த உழைப்பில் வாழவும், அதில் உண்மையுடனும் நேர்மையுடனும் இருந்து உமது விழுமியங்களை வாழ்வாக்கவும், உழைக்கமுடியாத நிலையிலுள்ளவர்களைப் பேணிக்காக்கவும், மனித மாண்பை நிலைநாட்டவும் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அருட்கொடைவள்ளலே இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் புனிதர்களின் வாழ்விலிருந்து நல்லவற்றை நாங்கள் எங்கள் வாழ்வில் கடைபிடிக்கவும், உத்திரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் விரைவில் ஈடேற்றம் பெற்று உமது புனிதர்களின் கூட்டத்தில் இணைந்து உம்மைப் போற்றிட வேண்டிய அருள் வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்களின் பேரின்பமாகிய எம் இறைவா! எங்கள் அருகில் உள்ள ஏழைகள், துயருறுவோர், தனிமையில் விடப்பட்டோர், நோயாளிகள், அனைவருக்கும் இறைவனின் அன்பையும் பரிவையும் அளிக்கும் அன்புக் கருவியாக எம் இளைய சமுதாயம் மாறிவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, November 2, 2022

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 06/11/2022


பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2மக்கபேயர் 7:1-2,9-14
2தெசலோனிக்கர் 2:16-3:5
லூக்கா 20:27-38

திருப்பலி முன்னுரை

திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க மறுவாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் அன்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு, மறுவாழ்வு பற்றிய சீரிய கருத்துகளை நம் முன் வைக்கின்றது. கடந்த இரு வார வாசகங்களில் பரிசேயர்களைப் பற்றியும், வரிதண்டுபவர் பற்றியும் அறிந்த நமக்கு, இன்று சதுசேயர்களின் கேள்விகள்மூலம் உயிர்தெழுதலைப் பற்றியும், மறுஉலக வாழ்வைப் பற்றியும் இயேசு நல்ஆசானாகப் போதிக்கின்றார். இவ்வுலக வாழ்வில் திருமணம் - பிள்ளைபேறு இவை உண்டு. ஆனால் மறுமையில் அங்கே உறவுகள் இல்லை. அனைவரும் இறைவனில் ஒன்றே. அங்கே கொடுப்பதுமில்லை. வாங்குவதுமில்லை. அங்கு அனைவரும் சமம் என்பதைப் பதிவு செய்கின்றார். இவ்வுலக வாழ்வின் அடிதளமே நமது மறுமையின் அளவுகோல். எனவே இவ்வுலகில் வாழும்போதே அறச்செயல்களினால் மறுமைவாழ்வின் மேன்மைக்கு அடிதளமிடுபோம். நாம் வாழ்வோரின் கடவுளைக் கொண்டுள்ளோம் நம் நிலைவாழ்வில் என்பதை உள்ளத்தில் பதிவு செய்துகொள்வோம்.
உயிர்த்தெழுதலும், வாழ்வு நானே என்ற இயேசுவிடம் மறுஉலகில் நிலைவாழ்வை பெற்றிட உருக்கமுடன் வேண்டி  இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் அடிப்படையில் தான் அன்று யூத வீரதாயும், அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்துச் சாகத் தயங்கவில்லை. இரண்டாவது மகன் பலியாகுமுன் இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் என்று விர முழக்கமிட்டு மடிந்ததைப் பதிவு செய்யும் மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
திருப்பாடல்17: 1, 5-6, 8, 15

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.  பல்லவி
என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். பல்லவி
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரின் மீது நம்பிக்கை கொண்ட நாம் நல்லதையே சொல்லவும், செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பவுலடியார் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆகையால் ஆணடவர் நம்பிக்கைக்குரியவர். கடவுளின் அன்பும், கிறிஸ்துவின் மனஉறுதியும் நம்மிடையே இருக்க வேண்டும் என்று ஆவலாய் வேண்டும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆதியும் அந்தமும் ஆன எம் இறைவா! இன்றைய காலக்கட்டத்தில் திருச்சபையில் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்நிலைச் சார்ந்த அனைவரும் எதிர்கொள்ளும், பிரச்சினைகளால் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வேதனையுறும் எம் அருள்நிலை தலைவர்கள் அனைவருக்கும் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வேதனைப்பட்டபோது நீர் அவர்களுடன் இருந்து பாதுகாத்து வழிநடத்தியது போல இன்றும் நீர் உம் உடனிருப்பைத் தொடர்ந்து வாரி வழங்கிப் பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒளியான எம் இறைவா! எங்கள் நாட்டிலும் உலகளவிலும் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களால் பல்வேறுபாதிப்புக்குள்ளாகி உறவுகளை இழந்து உடமைகளை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள எம் உடன்பிறவாச் சகோதரசகோதரிகளுக்கு ஆவியின் அருளைப் பொழிந்துத் தேவையான நலன்களையும் வளங்களையும் தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் இந்தியத் திருநாட்டில் விபத்துகளாலும், மழையினாலும் மக்களும் படும் வேதனைகளைப் பாரும். தங்கள் வாழ்வை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவிக்கும் எம்மக்களின் கவலைகளைப் போக்கி நலமும், வளமும் பெற்று அவர்களின் வாழ்வை மேம்படச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4ஏழைகளின் பெலனே எம் இறைவா! உம்மை மட்டும் நம்பி வாழும் இவர்களுக்கு, தேவையில் உழல்வோருக்குச் செல்வம் படைத்தவர்கள் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து இவர்களின் வாழ்வுச் சிறக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நிறைவாழ்வை வழங்கிய எம் இறைவா எம்குடும்பங்களில் உள்ள முதியேவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, சுதந்திர இழந்து அகதிகளாக அவர்கள் படும் வேதனைகளை, உம் பார்வையினால் அவர்களின் வாழ்வுத் துலங்கவும், ஊதியம் இல்லாத வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் அவலநிலை மாறி, அவர்கள் அமைதியோடும், நிம்மதியோடும் உம் திருஇல்லம் வந்து சேரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, October 25, 2022

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 30/10/2022

  பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாலமோனின் ஞானம் 11: 22 - 12: 2
2திமோத்தேயு 1:11 – 2:2
லூக்கா 19:1-14

திருப்பலி முன்னுரை

திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு, இரு கண்களாக நம் மனமாற்றம், இறைவனின் மீட்பு இவ்விரண்டையும் நம் சிந்தனைக்கு விருந்தாகத் தருகின்றது! ஒன்று சக்கேயுவின் கண்கள் மற்றென்று இயேசுவின் கண்கள். கண்கள் சந்தித்தன. மனமாற்றம் விரைவாக ஏற்பட்டது. இயேசுவின் வரவால் அவர் இல்லத்திற்கு மீட்பு உண்டானது. குள்ளமான சக்கேயு இன்று உயர்த்தப் பட்டார். எழுந்து நின்று தவறுகளை ஏற்றுக்கொண்டு அதற்குக் கைம்மாறுச் செய்யவும் தயாரானார். சக்கேயு காட்டு மரத்தில் ஏறினார் எரிக்கோவில். இயேசு கல்வாரி மரத்தில் ஏறினார் எருசலேமில். சக்கேயு ஏறியதால் அவருக்கு மீட்பு கிடைத்தது. இயேசு ஏறியதால் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்பு கிடைத்தது.

இறைவழிப்பாட்டு ஆண்டின் இறுதி கட்டத்திருக்கும் நமக்கு இந்நிகழ்வுகள் எத்துணை அற்புதமாக உணர்வுகளைத் தருகின்றது.  இந்த நிலை வர வேண்டுமென்றால் முதலில் இயேசுவின் கண்களும், நம் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அதற்காக இத்திருப்பலியில் நற்கருணை நாதரை உற்று நோக்குவோம். நிலைவாழ்வுக்கான மீட்பை அவரிடம் பெற்றிடுவோம்.


வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவனின் கண்பார்வை மனுக்குலத்தின் மேல் உள்ளது. தீமை, பாவம், குற்றம் என விரிசல் விழும் நேரங்களில் அங்கே அவரின் பரிவிரக்கம் நிறைவையும், முழுமையையும் கொண்டுவருகிறது. உயிர்கள் மீது அன்பு கூர்கின்றவர் எல்லாவற்றையும் வாழ விடுகின்றார். தவறு செய்பவர்களை மெல்ல மெல்ல திருந்த அவகாசம் தருகிறார் என்று சாலமோன் கடவுளின் பரிவிரக்கத்தை எடுத்துரைக்கும் சாலமோன் ஞானநூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.
திருப்பாடல்145: 1-2. 8-9. 10-11. 13

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.  பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.   பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

உன் ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்குடன் காத்திருந்த தெசலோனிக்கிய திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலும் இன்று உங்கள் அழைப்புக்கு ஏற்ப உங்களைத் தகுதியாக்குங்கள் என்றும் நல்லெண்ணத்தால் தூண்டப்பெறும் நற்செயல்களில் நிலைத்திருங்கள். ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்ற கூறினால் உள்ளம் கலங்கவேண்டாம் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில்  எழுதுகின்றார். தூய பவுலடியாரின் இவ்வேண்டுகோளைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.

நம்பிக்கையின் மன்றாட்டுகள்

1. அன்பு இறைவா! எம் திருஅவை தனது சொல்லாலும் செயலாலும் தன் கடமையிலும், நெறிதவராது, இவ்வுலகில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்த வாழ்ந்த வாழ்வை இவ்வலகிற்குப் பிரதிபலிக்கக் கூடியவர்களாகத் தங்களைப் புதுபித்துக் கொள்ளத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நேர்மையின் நாயகனான எம் இறைவா! எங்கள் நாட்டில் நிலவும் மதம், மொழி, இனவேறுபாடுகள் இவைகளைக் களைந்து நாட்டு நலனில் அக்கறை கொண்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான, வேலைவாய்ப்புகள், கல்வியறிவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்துச் சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகில் நிலவும் பொருளாதார வேறுபாடுகள், பஞ்சம் கொலை, கொள்ளை, தீவிரவாதம், மதச்சண்டைகள் இவை அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்காக. இப்படிபட்ட தீமையான செயல்களில் தங்களை ஈடுபடுத்தாமல் அமைதியோடும், சமாதானத்தோடும் வாழத் தேவையான நல்ல மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியான எம் இறைவா! இளைஞர், இளம்பெண்கள்தங்கள் வாழவில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கி மவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, October 17, 2022

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 23/10/2022

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு

                Icon of the Publican and the Pharisee. This is the second of five Sundays  in preparation for the Great Fast. | Ícones, Ícone, Quaresma      

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் : 35: 12-14, 16-18
2திமோத்தேயு 4: 6-8, 16-18
லூக்கா 18:9-14

திருப்பலி முன்னுரை

திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது.  திருத்தூதர் பவுலடியார் தனது பணியை முடித்து விட்ட மகிழ்ச்சியில் ஆண்டவரின் ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் – வரிதண்டுபவர் உவமை மூலம் இறைவன் முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவனாக அமைப்பது என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம் அடித்து பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன் தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவி செல்லும். இக்கருத்துகளை மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

பணிவைப் பற்றி சிந்திக்கும் இந்த ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை மறைபரப்பு ஞாயிறு அல்லது, அனுப்பப்படும் ஞாயிறைக் கொண்டாடுவது, பொருத்தமாக உள்ளது. உண்மை இறைவனை அறிவிக்க பல கோடி உன்னத உள்ளங்கள் உலகெங்கும் சென்றனர் என்பதை, பல நூற்றாண்டுகளாக, மறைபரப்பு ஞாயிறன்று பெருமையுடன் கொண்டாடி வந்துள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியை பணிவான உள்ளத்துடன் சுமந்து சென்று, அனைவரோடும் பகிர்ந்துகொள்ள உலகெங்கும் செல்வதற்கு, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்கத் தள்ளப்பட்டுள்ளவர்களிடம் செல்வதற்கு, இறைவன் வரம் தரவேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

முதல் ஏற்பாட்டில் முதல் சகோதரர்கள் காயினும், ஆபேலும் கடவுள்முன் காணிக்கைகள் கொண்டு வருகின்றனர். ஆபேல் ஏற்புடையவராகிறார். காயின் ஆகவில்லை. ஒருவரை ஏற்புடையவராக்குவது கடவுளே அன்றி, தனிநபரின் செயல்கள் அல்ல.  இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கும், 'ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களின் மன்றாட்டு முகில்களை எட்டும்' என்று சொல்கின்றார்.  ஆண்டவரின் விருப்பத்தை புரிந்தவர்களாய் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22


ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

தூய பவுலடியார் தன் நண்பர் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.  'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார். விண்ணரசில் சேர்வதற்கான மீட்பைப் பெற்றுவிட்டதை நம்பிக்கையுடன் இங்குப் பதிவுச் செய்கிறார். இந்த வெற்றி வாகையைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. செம்மையான வழியை எமக்குக் காட்டும் எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் திருதூதர் பவுலடியார் தம் பணியைச் சிறப்பாக முடித்து வெற்றிவாகைப் பெற்றவும், அவரைபோல் இறைபணியில் தாங்களையே பலியாக அர்ப்பணிக்கவும் தேவையான ஞானத்தை, ஆற்றலையையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா! ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! தாழ்ச்சியுள்ள இதயத்தோடு செபிக்கும் எங்கள் அனைவரின் செபத்தை ஏற்று எங்கள் வாழ்வு நலமும் வளமும் அடையவும், எம் தலைவர்கள்  தம் மக்களின் மீது தொண்டுள்ளம் கொண்டு தன்னலமற்றுப் பணியாற்றிட தேவையான ஆற்றலையும், உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

Monday, October 10, 2022

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 16/10/2022

 பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 17:8-13
2திமோத்தேயு 3:14-4:2
லூக்கா 18:1-8

திருப்பலி முன்னுரை

திருவழிபாட்டின் பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைமக்களே! உங்கள் அனைவரையும் இறைஇயேசுவின் அன்பில் வாழ்த்துகிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு ‘இடைவிடாத செபம் இறையருளைப் பெற்றுத் தரும்’ என்ற சீரியக் கருத்தை நமக்கு வழங்குகின்றது.
விடுதலைப் பயணநூலில் மோசேயின் கரங்கள் உயர்ந்திருந்தபோது இஸ்ரயேல் மக்கள் வெற்றியைக் கண்டனர். இறைஇயேசு உவமைகளின் மூலம் நம்மைத் தொடர்ந்து செபிக்க அழைக்கின்றார்.

கைம்பெண் தன்னுடைய விடாமுயற்சியினால் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நல்ல தீர்ப்பைப் பெறுகிறார். இவ்வாறு நீதியுள்ள இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாக் கேட்பார் என்பது உறுதி.

இயேசு தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையோடு செப உறவில் நிலைத்திருந்தார். காலையிலும் மாலையிலும், ஒவ்வொரு நிகழ்வைத் தொடங்கும் முன்பும் செபித்தார். எனவே தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று! நமது கிறஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடையமுடியும் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இடைவிடாது செபிக்க, கடவுளிடம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையுடன் அவரை நாடவும் வேண்டிய வரங்களைப் பெற்றிட நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போர் தொடுக்கிறார்கள். அப்படிப் போர்தொடுக்கும்போது மோசேயின் கை உயர்ந்திருக்கும் போதேல்லாம் இஸ்ரயேல் மக்கள் வெற்றி பெற்றார்கள். மோசேயின் கைத்தளர்ந்தபோது ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமும் அவருடைய கையைத் தாங்கிப்பிடித்து, இஸ்ரேயல் மக்கள் எதிரிகளிடமிருந்து வெற்றிபெற உதவிபுரிகிறார்கள்.இங்கே அவர்களின் விடாமுயற்சி அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த விடாமுயற்சி எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்

திருப்பாடல்: 121: 1-2, 3-4, 5-6, 7-8.
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி.
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், “அன்புக்குரியவரே! நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்” என்று வாசிக்கின்றோம். எதில் நிலைத்திருப்பது? என்று சிந்தித்துப் பார்க்கும்போது, நமது விடாமுயற்சியில் நிலைத்திருப்பது என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கின்றது. என்றைக்கு நாம் நமது விடாமுயற்சியில் நிலைத்து நிற்கின்றோமோ, அன்றைக்கு நாம் நினைத்த காரியத்தில் வெற்றியைப் பெறுவோம் என்பது உண்மையாக இருக்கின்றது. சில நேரங்களில் நமது முதல் முயற்சியிலேயே நாம் வெற்றியைப் பெற்று விடுவதில்லை. தொடர் உழைப்பினால், விடாமுயற்சியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற முடியும் என்ற உண்மையை உணர்த்தும் வாசகத்தைக் கருத்துடன் கவனித்து உள்ளத்தில் பதிவு செய்வோம்.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூடியவரே!எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் தொடர்ந்து பயணிக்க, இடைவிடாத நம்பிக்கையில் உறுதியும் உம் பணிச் செய்திட ஆற்றல் தருவது செபமே என்பதை உணர்ந்து இடைவிடாது செபிக்க வேண்டிய அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா! ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மை உமது உரிமைச் சொத்தாய் ஏற்றுக் கொண்ட எம் இறைவா! உலகமெங்கும் எங்கும் அமைதி நிலவும் சூழலைத் தந்து, எல்லா இனத்தரும் உமது படைப்பின் நன்மைகளை உய்த்துணர்ந்து வாழ, உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இடைவிடாது செபிக்க அழைத்த எம் தந்தையே இறைவா! செபமே ஜெயம் என்பதை நாளும் உணர்ந்தவர்களாய் தொடர்ந்து சோர்வில்லாமல் செபிக்கவும், பரிந்துரைச் செபத்தால் எமக்கு அடுத்திருப்பவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்காகச் செபித்து அவர்களை ஆற்றுப்படுத்தும் உள்ளத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, October 4, 2022

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 09/10/2022

 பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு

                                   Reflection on Luke 17:11-19 | New Life Narrabri

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


2அரசர்கள் 6:14-17
2திமோத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாடத்தில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் எல்லாப் பெயர்களுக்கும் மேலான இறைமகன் இயேசுவின் பெயரால் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
சிரியாஅரசனின் படைத்தலைவனான நாமானின் நம்பிக்கை அவரது நோயிலிருந்து விடுதலைக் கொடுத்தது. இஸ்ரயேலரின் கடவுள் யாவே தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை என்று அறிக்கையிடுகிறார். இயேசுவோடு நாம் இறந்தால் அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்திருந்தால் அவரோடு ஆட்சி செய்வோம் என்று தன் ஆழமாக நம்பிக்கையை உறுதியாகப் பதிவுசெய்கிறார் பவுலடியார்.
இயேசுவின் மீது வைத்த விசுவாசம் தொழுநோயுற்ற சமாரியரின் உடலையும், ஆன்மாவையும் காப்பாற்றியது. அவரது குறைகள் குணப்படுத்தப்பட்டது. சமாரியரான அவர் தன்னை யார் குணப்படுத்தினாரோ அவரைப் பாராட்டினார், நன்றி கூறினார். கடவுளுக்கு அவராலே அவருக்குக் கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும், நன்றியும் நம்மிடமிருந்து வர வேண்டும். இயேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு, நாம் இயேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறோமா? நன்றி மட்டுமே விரும்பும் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறுத் தான் என்ன? சிந்திப்போம்.
இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நன்றியோடு இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, மகிழ்வுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எலிசாவின் வாக்கிற்கு இணங்கி, தனது வேலைக்காரனின் வேண்டுதலின் பேரில் சிரியா நாட்டு அரசனின் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ழுழ்கித் தன் தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்றான். வேற்றினத்தவரான நாமான் யாவே ஒருவரே கடவுள். உண்மையின் கடவுள் என்று நம்பினான். எது உண்மை? பலி அல்ல. கீழ்படிதலே சிறந்தது எனக் கூறும் இரண்டு அரசர்கள் நூலிலிருந்து எடுக்கப்பட இம்முதல் வாசகத்திற்கு உள்ளம் திறந்துச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார் பல்லவி
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாவது வாசகத்தில்," இயேசுகிறிஸ்து தாவீதின் வழி வித்து எனவும், இறந்த இயேசுகிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்” என்பது தனது நற்செய்தியென அறிவிக்கிறார். எனவே தன் வேதனைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் இயேசுகிறிஸ்துவுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் புனித பவுலடியாரின் மனநிலை நமக்குள் நிலைக்கவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவராலும் ஒருபோதும் சிறைபடுத்த முடியாது என்பதையும் உணர்ந்தவர்களாய் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. அன்புத் தந்தையே எம் இறைவா! இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவ சமூகங்களுக்கும், மானிட வாழ்விற்கும், இறைமனித உறவிற்கும் எதிராக நடைபெறும் அனைத்துப் பிரச்சனைகளுக்கு இயேசுகிறிஸ்துவின் மனநிலையோடு எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் பயணம் செய்யத் தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் ஒரே நீதியை வழங்கிடும் எம் இறைவா! இன்று எம்நாட்டில் நிலவும், சுயநலம், மற்றவர்களை அடிமைப்படுத்துக்கூடிய ஆணவம் இவைகளை மறந்து எல்லா மாநிலமும் தங்களிடம் உள்ளத்தேவைக்கு அதிகமான அனைத்தையும் ஒருவர் மற்றவர்களுடன் பகிர்ந்து, பிரிவு, மனப்பான்மைக்கு இடந்தராமல், சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு சிறந்து விளங்கிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! இன்றைய உலகளவில் நவீன பொருளாதாரச் சீர்கேடுகள், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவர் என்ற வேற்றுமை நிலைக் களைந்து ஒற்றுமையோடு செயல்படவும், ஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வு உண்டு என்று, உம் உன்னத மனநிலையோடு ஏழைகளுக்கு இரங்குகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்ற விவிலியசிந்தனையை உணர்ந்து உமது இரக்கம் எமை மீது பொழியப்பட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க, இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா! அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF