Monday, August 21, 2023

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 27.08.2023

 பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 27.08.2023



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 22:19-25,
உரோமையர் 11:33-36,
மத்தேயு 16:13-20.

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு. இன்றைய திருப்பலியில் இறைஞானத்தால் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவரே இறைமகன் என்று அறிக்கையிட அழைக்கப்பட்டு தெய்வத்தின் திருவடியில் அமர வந்துள்ள இயேசுவின் அன்பிற்குரியவர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
நமது நம்பிக்கயின் தொடக்கமும் முடிவும் இறைவனே! அந்த இறைவனின் உதவியின்றி இயேசுவே ஆண்டவர் என்று நம்மால் அறிக்கையிட முடியாது. இன்றைய வாசகங்கள் இயேசுவைச் சரியாகக் கண்டுணர நம்மை அழைத்துச் செல்கின்றன. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்டக் கேள்விக்கு அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவியக் கருத்துக்களைப் பிரதிபலித்தபோது, பேதுரு மட்டும், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார் கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்.
இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். எனவே இறைகொடைகளைத் தடையின்றிப் பெற்றுவரும் நாம் அவற்றின் வழியாக இறைமாட்சியடைய நம் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு இறைபிரசன்னத்தை உணர்ந்து நம் வாழ்வைத் தொடர இன்றைய திருப்பலியில் ஒருமனதோராய் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவனின் செய்திகள் மக்களிடம் சென்றடைய இறைவன், குருக்களையும், இறைவாக்கினர்களையும் ஏற்படுத்துகின்றார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோர் தங்கள் கடமைகளில் தவறும்போது இறைவனால் இறைக்கி வைக்கப்படுகின்றனர். தீயோரை அகற்றிவிட்டு நல்லவருக்கு இறைவன் அதிகாரம் அளிப்பார். இவ்வாறே செபுனாவுக்கு  கண்டனம் தெரிவித்து விட்டு, எலியாவை அழைத்து அவர் கைகளில் தன் மக்களை ஒப்படைத்தார். இரக்கப் பெருக்குமிக்க இறைவனின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் எசாயா நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.           

பதிலுரைப்பாடல்

திபா 138: 1-2அ. 2-3. 6,8
பல்லவி : ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். நமது குறுகிய அறிவால் அவரை அறிந்துகொள்ள முடியாத ஒரு புதிர். அவருடைய அறிவும் ஞானமும் ஆழமானவை. நம் அறிவுக்கு எட்டாதவை என்று வியப்புடன் எடுத்துரைக்கும் இவ்வார்த்தைகளை வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் நம்மைக் கைவிடமாட்டர் என்ற விசுவாசத்தோடு மனதில் பதிவு செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இரக்கப்பெருக்கத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்ககவும், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருந்தாலும் திருஅவையை அன்புச் செய்யவும், கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்கவும் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா! ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3.துன்பத்தில் நல்தேற்றுதல் தரும் எம் இறைவா, எம்நாட்டில் உமக்கும், உம் மக்களாகிய எங்களுக்கும் எதிராக மததீவிரவாதம் மேலோங்கிக் குறிப்பாக வட இந்தியாவில் அதிகரித்து, துன்புறும் உம் மக்களுக்குப் பாதுகாப்பு, உம்மில் ஆழமான விசுவாசம், உம் பணியாளர்களுக்குச் சவாலை எதிர்க்கொள்ளும் உறுதியான மனநிலைத் தந்து, உமது வல்லமையான கரங்களால் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில்  இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பைத் தந்து எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.
www.anbinmadal.org

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, August 14, 2023

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 20.08.2023

 பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 20.08.2023



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 56:1,6-7
உரோமையர் 11:13-15,29-32
மத்தேயு 15: 21-28

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு தடைகள் பல தாண்டி இன்றைய திருப்பலியில் கலந்து இறைவனின் அருளைப் பெற்றுச் செல்ல வந்துள்ள இறைகுலமே உங்களை அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
பாகுபாடுகளை மீறி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய திருப்பலி வாசகங்களில் நமக்குத் தரப்பட்டுள்ளது. இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல. ஊரின் எல்லைப்பகுதியில், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண் நமக்கு நம்பிக்கைத் தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார்.
கானானியப் பெண் என்று அடுக்கடுக்கான பல தடைகளைத் துணிவுடன் தாண்டி இந்தப் பெண் தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். இயேசுவின் கடினமான சொற்களையும் சரியான கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
தடைகள் எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கண்ட மகத்தான அந்த நம்பிக்கை முழுமையாகப் பெற்றுக்கொள்ள, இன்றைய திருப்பலியில் இறையருள் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்: என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும். நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று, பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணைய முடியும் என்று இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன இறைவனின் உறுதி மொழிகளைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 67: 1-2. 4. 5,7
பல்லவி : கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். - பல்லவி  
 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி  
 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் ஒருவன் பிறமறையைச் சார்ந்தவன் என்பதற்காக இயேசு அவனைப் புறக்கணிப்பதில்லை என்பதைத் தெளிவாக்கப் பிறர் இனத்தாராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமைகொள்கிறேன் என்கிறார். இதனை மனத்தில் கொண்டு இயேசுவிடம் செல்லும்போது சாதி, மதம், குலம் போன்றவற்றை விலக்கிவிட்டு விசுவாசத்திற்கு முதலிடம் கொடுத்து இறைவனின் அருளுக்கும் ஆசிருக்கும் உரியவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

  நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா!

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. நன்மைத் தனத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் உம்மைப் போலத் தாராள மனதுடனும், திறந்த மனதுடனும் சாதி, சமய, இன வித்தியாசங்களை மறந்து இறையரசின் பணிகளை அன்புடன் அனைவருக்கும் நிறைவாய் செய்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகின் மேலும், நாளைய உலகின் மேலும் நம்பிக்கை இழந்துள்ள இளையோர் ”உங்கள் நம்பிக்கைப் பெரிது... நீங்கள் விரும்பியவாறே உங்களுக்கு நிகழட்டும்” என்று இயேசு இவர்களிடம் சொல்வதன் மூலம் வருங்கால உலகில் நம்பிக்கையை வளர்க்க, அன்பை வளர்க்க இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. மாசின்மையின் ஊற்றாகிய எம் இறைவா, எம் இல்லங்களில், குடும்பங்களில் வேற்றுமைகள் களையப்பட்டு, அனைவரும் இறைவனின் படைப்புகளே என்ற உயரிய எண்ணங்கள் வளர்ந்து, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்லவும், மனித மாண்பு ஓங்கிடவும் எமக்குத் தேவையான ஞானத்தையும், நற்பண்புகளையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! கானானியப் பெண்ணின் மகளைப் போல் இன்று தங்கள் பிள்ளைகள் பலர் இவ்வுலகின் தீய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு இறைவனின் பாதையிலிருந்து விலகியிருப்பதைக் கண்டு தங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டிக் கண்ணீர் விட்டுச் செபிக்கும் பெற்றோர்க்களின் செபத்தைக் கேட்டு அவர் தம் பிள்ளைகள் மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, August 8, 2023

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 13.08.2023

   பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 13.08.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1 அரசர்கள் 19:9அ,11-13அ
உரோமையர் 9:1-5
மத்தேயு 14: 22-33

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவர் தம் கரம்பிடித்த நிலைவாழ்வை நோக்கி நடந்திடக் கடலில் நடந்திட உற்சாகமாக வந்த பேதுருவைப் போல ஆலயம் வந்துள்ள இறைமக்களே உங்கள் வரவு நல்வரவாகுக.
இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தையாம் கடவுளோடு அமர்ந்துச் செபித்த பின்பு, இயேசு அதே அனுபவத்தோடு, அவர் தண்ணிரில் நடந்தார். இயேசு அடிக்கடித் தனிச் செபத்தில் நீண்டநேரம் செலவழிப்பவர். ஏன் மத்தேயு இங்கே இதனைக் குறிப்பிடுகிறார் ? இந்தச் செபத்திற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?
நமது குடும்பத்திலும், வேலையிடத்திலும், சமூகத்திலும், இறைவனுக்காக, நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல உள்ளன. நாம் சோர்வு இல்லாமல் தொடர்ந்து இறைவனுக்காகப் பணியாற்ற, நாம் இழந்த சக்தியை மீண்டும் பெற்றிட இறைவனை மன்றாடுவோம்.
நமது ஆற்றலைப் புதுப்பிக்க, அடிக்கடிச் செபத்தில் நமது நேரத்தைச் செலவிட்டு, இறைவனைப் பற்றி இன்னும் அறிந்து, அவர் எப்படி நம்மை வழி நடத்துகிறாரென அறிந்து, நம்மை நாமே மாற்றிகொள்வது நல்லது. நமக்கு என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்ளச் செபம் நமக்குப் பெரிதும் உதவுகிறது.
நாம் தனியாக இறைவனிடம் செபிக்கும் வேளையில், அவரிடமிருந்து நாம் பெறும் ஆசியும், அருளும், நமக்கான அன்பளிப்பாகும். அந்த அன்பளிப்பின் மூலம், பிறருக்கு நாம் உதவ முடியும். இது நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்கும். எப்படித் துன்பம் என்னும் கடலில் நடப்பது என நமக்குக் கற்றுக் கொடுக்கும்.
இன்றைய திருப்பலியில் இயேசுவைப் போல் நாமும் தந்தையாம் இறைவனிடம் ஒருமனப்பட்டுச் செபிக்கவும், அவருக்காய் நாம் செய்யும் பணிகள் வெற்றிப் பெற இறையருள் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் தன் உயிருக்கு ஆபத்து வந்தபோது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எலியா ஓடுகின்றார். தன்னை அழைத்த இறைவன், இத்துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கமாட்டாரா? என்ற நம்பிக்கைகூட அவரிடம், இல்லாமல்போய்விட்டது. ஆனாலும் இறைவன் ஒரேப் மலையில் மெல்லிய ஓசையாக, இனியதென்றலாகத் தம்மை எலியாவுக்கு வெளிப்படுத்தியதை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவன் அன்று இஸ்ரயேல் மக்களை அவருடைய மக்களாக்கிக் கொண்டு, அவரின் மாட்சிமையை அவர்கள் நடுவே விளங்கச்செய்தார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களை மீட்கத் தன் மகனையே அனுப்பினார். இனத்தாலும், உறவுகளாலும் ஒன்றான இஸ்ரயேல் மக்களுக்காகப் பெரிதும் கவலைக் கொள்ளும் திருத்தூதர் பவுலடியார் கூறுவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அருளிரக்கத்தின் நாயகரே எம் இறைவா! எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுக்கள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திரு அவையின் நல்மேய்ப்பர்களுக்கும், தூயஆவியின் துணையால் தொடர்ந்து உம் இறைபணி ஆற்றிடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. கொடைவள்ளலே எம் இறைவா, எம்தமிழகத்தில் குறிப்பாக வெயி
லின் வறட்சியால் அனைத்து மாவட்டங்களிலும் நீரின்றித் தவிக்கும் எம்மக்களின் தாகத்தைப் போக்கி நீர்வளம், நிலவளம் பெறுகவும் நல்ல மழைபொழிவித்து ஏழைவிவசாயிகளின் வாழ்வு வளம் பெற வேண்டி மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆதரித்து ஆளும் எம் இறைவா, எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றதுமானச் சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடித் தம்மைக் காத்துக் கொள்ளவும், ஐயம் நீங்கி உம்மில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைத் தேட வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

5. எங்கள் அரணான இறைவா! இந்திய நாட்டில் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் நடத்தப்படும் வன்முறைகள் அனைத்தும் முடிவுக்கு வரவும், எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்ற சமத்துவ உணர்வோடு வாழ மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம். 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Sunday, July 30, 2023

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 06.08.2023

 பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 06.08.2023




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தானியேல் 7: 9-10,13-14
2 பேதுரு 1:16-19
மத்தேயு 17: 1-9

திருப்பலி முன்னுரை.

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு. இயேசுவின் தோற்ற மாற்றம் விழா கலந்து கொண்டு இயேசுவைப் போல் நாமும் மாட்சிமை மிகுந்த மாற்றம் அடைய விரும்பி இவ்வாலயதிற்கு நல்வரவுத் தந்துள்ள அனைத்து இறைமக்களை அன்புடன் இனிதே வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தி நிகழ்வான இயேசுவின் தோற்றமாற்றத்தைப் பற்றி எல்லா நற்செய்தியாளர்களும் இயேசு எருசலேம் செல்லும் வழியில் இந்நிகழ்வு நடந்த்தாகவும் இயேசு தம் பாடுகளை முன் அறிவித்தபின்பு இந்நிகழ்வு நடந்த்தாகும் கூறியிருப்பது சற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். துன்பத்தின் முடிவில் இன்பம் உள்ளதைத் தோற்றமாற்ற நிகழ்வு நமக்கு வெளிப்படுத்துகின்றது. சிலுவையின்றி உயிர்ப்பு இல்லை. அதுபோல் துன்பமின்றி மகிழ்ச்சி இல்லை.
இயேசு எந்த அளவுக்கு இறைத்தன்மையோடு விளங்கினாரோ அதே அளவு மனித் தன்மையோடு விளங்கினார். நமக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் அவருக்கு இருந்தன. அவரும் தன் வாழ்வில் ஒரு சராசரி மனிதனாக இன்பத் துன்பங்கள் வேதனை, சோதனைகள், மனக்குழப்பம், விருப்பு வெறுப்புகள் என்றும் அனைத்தையம் எதிர்கொண்டார்.
இயேசு தந்தையோடு செபவாழ்வில் ஒன்றித்திருந்ததே அவரின் வெற்றிக்குக் காரணம். எனவே நாமும் இத்தைகையச் செபஉறவில் தந்தையோடு நிலைத்திருந்து இயேசுவின் பாதையில் வழி நடந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை.

முதல் வாசக முன்னுரை.

இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இரவில் தான் கண்டக் காட்சிகளைப் பற்றி விவரிக்கின்றார். இன்றைய நற்செய்தி நிகழ்வுகளுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் மானிட மகன் அங்கு வரப்பட்டதும், அவருக்கு ஆட்சியுரிமையும் மாட்சியும் வழங்கப்பட்டது மற்றும் அவரது உடை வெண்பனி போலவும் இருந்தது எனப் பல நிகழ்வுகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்.

உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
திருப்பாடல் 97: 1-2. 5-6. 9
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி.
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி.
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி.

இரண்டாம் வாசக முன்னுரை.

இன்றைய இரண்டாம் வாசகம் இன்றைய நற்செய்தி ஆண்டவரின் தோற்றமாற்றத்திற்குச் சாட்சியாக அமைகின்றது. ஏனெனில் திருத்தூதர் பேதுரு தன் காட்சிகளை மக்களுக்கு “பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அஃது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது” என்று விவரிக்கின்றார். தந்தை தன் மகனில் பூரிப்படைந்ததையும், அவர்கள் கண்ட மாட்சிமையையும், இறைவாக்கினர்களின் கூற்று மெய்யானது என்று மகிழ்வுடன் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி.

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் அல்லேலூயா!.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்.

1. மகிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா! கிறிஸதுவும் தன் மனிதவாழ்வில் எதிர்கொண்ட இன்பதுன்பங்கள், விருப்புவெறுப்பு, வேதனைகள், சோதனைகள் அனைத்தையும் இறைவேண்டல் மூலம் எப்படி வென்றாரோ போல உம் திருஅவையை வழிநடத்தும் எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் உமது இறைஆசியாலும் தமது இறைவேண்டுதலாலும் இயேசுவின் மகிமையிலும் மாட்சிமையிலும் பங்கு கொள்ளத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. என் அரசு இவ்வுலகைச் சார்ந்த்து அல்ல என்றுரைத்த எம் இறைவா! எம் இந்தியத் தேசத்தில் குறிப்பாக வட மாநிலங்களில் உம் இறைப்பணிக்கு எதிராக வன்முறைகள் நடைப்பெற்றாலும் எம் இறைப்பணியாளர்கள் தியாக வாழ்வில் இறைபணிக்காக அர்ப்பணித்து, தங்கள் சொல்லாலும், செயலாலும் சான்றுபகரும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும், காயப்படுத்தியவர்களைத் தண்டிக்காமல் அவர்கள் உம் அன்பின் வழியைப் பின்பற்றி மனமாற்றம் அடைந்தவர்களாக வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புத் தந்தையே எம் இறைவா! புனித வியான்னி ஆர்வமிக்க மேய்ப்புப் பணியாளராகவும், பங்குதந்தையாகவும் வாழ்ந்து போல் எம்பங்குதந்தையாகள் அர்ப்பணத்திலும், அருள் வாழ்விலும், சிறந்த மேய்ப்புப் பணியாளராக வலம் வரவும், எங்கள் பங்குகளிலே பங்குத் தந்தையருக்கும் மக்களுக்குமிடையே நல்லுறவு நாளும் வளரச் செய்யவும் உம் அருள் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இன்பத்திலும் துன்பத்திலும் எங்களோடு இருக்கும் எம் இறைவா! துன்பத்தின் முடிவில் இன்பம் உண்டு என்பதை உணர்ந்து எங்கள் குடும்பங்களின் துன்ப வேளைகளில் இயேசுவைப் போல் உம்மோடும் செபத்திலும் இன்பவேளையில் நன்றியுடன் மகிழ்ச்சியில் உம்முடன் ஒன்றித்து வாழவும், அன்பில் எல்லோரிடமும் கலந்து இறைமகன் இயேசுவின் சாட்சியாய் வாழ உமதருள் வேண்டி மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

5. அமைதிக்கும் ஆறுதலுக்கும் ஊற்றாகிய எம் இறைவா, எம் இளையோர் தம் இளமையில் உம்மைத் தேடவும் துன்பவேளையில் வழிதவறிவிடாமலும், பொறுமையுடன் இருந்து இன்பத்தை வெற்றிகனியாகத் தம் வாழ்நாட்களில் பெற்றுப் பிறருக்குப் பலன் தரும் கனியாக மாறிட ஞானத்தையும், இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, July 25, 2023

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 30.07.2023

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 30.07.2023

 
புதையல்-விண்ணரசு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


1.அரசர்கள். 12:13, 16-19
உரோமையர் 8: 28 -30
மத்தேயு 13: 44-52

திருப்பலி முன்னுரை.

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு. புதையலையும், நல்முத்தயையும் தேடிக் கண்டுபிடிக்க இறைஇயேசுவின் அழைப்பை ஏற்று நம் ஆலயம் வந்துள்ள இறைமக்களை இனிதே வரவேற்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு. புதையல், முத்து, வலை என்ற மூன்று உருவகங்களும் பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன. நன்னெறிகளுக்கு எதிராக, உத்தரவின்றி நுழையும் எதிர்மறை எண்ணங்களையும், கருத்துக்களையும், இறையரசு என்ற சிப்பி, அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றது என்பதை, நாம் முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்

உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள, நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். நம் கண்முன்னே முத்துக்களும், புதையல்களும் அடிக்கடித் தோன்றினாலும், அவற்றைக் காணும் பக்குவம் இல்லாமல், நாம் குழம்பி நிற்கிறோம்.

இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், கடவுளின் ஞானம் இறையரசிற்காக இந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எது உண்மையான மதிப்புள்ள பொருள், செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் இறைவன் தரும் புதையலாம் இறையரசைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

தாவீதின் மகன் சாலமோன் கடவுளிடம் இஸ்ரயேல் மக்களுக்கு நல்லாட்சி செய்ய நல்ல ஞானத்தை மட்டுமே தனக்கு வரமாகக் கேட்டார். கடவுளும் அவர் கேட்டதை உடனே அருளியது, மட்டுமல்லாமல் இவ்வுலக்கைச் சார்ந்த எதையும் கேட்கவில்லை என்பதால் இனி அவரைப் போல எவரும் இருக்கவே முடியாது ஆசிகூறினார். எது தேவை, எது தேவையில்லை என்று தெளிவாக்குகிறது. எதைத் தேட வேண்டும், எதை விலக்க வேண்டும் என்ற அறிவுறுத்துகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. பல்லவி

எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி

பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி

உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

மனிதன் எவ்வளவு தான் பொருள் கொண்டிருந்தாலும் விண்ணரசில் செல்வத்தைச் சேர்த்து வைக்க மறந்து விடக் கூடாது. கடவுளின் அன்புக்கு உரியவராகும்போது ஆவியானவரின் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கின்றது. தான் அழைத்தவரைத் தனக்கு ஏற்புடையவராகித் தம் மாட்சிமையில் பங்கு கொள்ளச் செய்வார் என்பதைப் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் தெளிவுப்படுத்துகின்றார். இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இறையரசு எனும் புதையலைத் தந்த எம் இறைவா! உம் திருஅவையை வழிநடத்தும் எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும், நல்லாட்சி செய்யத் தேவையான ஞானத்தைக் கொடுத்து, எம்மை அரிய நல்முத்தாம் இறையரசில் கொண்டு சேர்க்க தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அமைதியின் இறைவா! இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதி பெற வேண்டும். அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன் பெற வேண்டும்... மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும். எங்கள் தலைவர்கள் உண்மையான ஞானம் பெற வேண்டும் என்று மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. வானாளாவிய இரக்கம் கொண்ட எம் இறைவா! எம்கிறிஸ்துவ வாழ்வு, மிகுதியான செல்வத்தைக் கொண்டுள்ளது, எம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள்களை அகற்றி விட்டு, விலை மதிப்புள்ள பொருளளாகிய இறையரசிற்குத் தயார் படுத்தவும், குடும்பத்தினர் அனைவரும் உண்மையான மதிப்பை அறிந்திடவும் ஞானத்தையும், இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. விசுவசிப்போருக்கு வாழ்வாகிய எம் இறைவா! பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள் இவ்வுலகம் தரும் அழுத்ததாலும், வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும் வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, July 17, 2023

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு 23.07.2023

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு 23.07.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாலமோனின் ஞானம். 12:13, 16-19
உரோமையர் 8: 26 -27
மத்தேயு 13: 24-43

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு. நல்ல விதைகளாய்ப் பலன் தரும் சீடர்களாய் மானிட மகனின் அருளாசி வேண்டி இவ்வாலயத்திற்கு வருகை வந்துள்ள உங்கள் அனைவரையும் நூற்றூக்கு நூறு பலம் தரும் அன்பர்களாய் மாறிட மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
மீண்டும் உவமைகளின் மூலம் பேசும் இறைமகன் தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால், தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வுலகில் பலன் தரும் கதிர்களாய் வாழ்ந்திட நம்மை மீண்டுமாய் அழைக்கின்றார். அதற்கான செயல் திட்டங்களாக உள்ளவை (1) நம் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல், (2) மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழைத்தல். (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்துச் சமூகத்தை மாற்றுதல். இன்றைய நற்செய்தியில், இயேசுவும் உவமைகள்மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்குப் போதிக்கிறார்.
வெறுப்பு, வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில், நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல், அன்பு, அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரத்தை இத்திருப்பலியில் அமைதியின் இளவரசனாம் இயேசுவிடம் வேண்டுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

கடவுள் நீதியுள்ளவர் என்றும், எல்லோரும் மீதும் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார் என்றும், சரியான தீர்ப்பு வழங்குவார் என்றும் எடுத்துரைக்கிறது. எனவே நீதிமான்கள் மனிதநேயம் கொண்டு மக்களை நடத்த வேண்டும், என்றும் கடவுள் மன்னிப்புக் கேட்டும் எவருக்கும் தவறாமல் மன்னிப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ள சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பால்

தீபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.

என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டாளும். -பல்லவி
என் தலைவரே! நீர் படைத்த மக்களினைத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கு என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை  

தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தூய ஆவியின் செயலைப் பற்றித் தெளிவாக அவர்கள் புரிந்து கொள்ளவும் எழுதுகிறார் திருத்தூதர் பவுல்.  மேலும் நம் ஒவ்வொருவருக்காகவும் தூய ஆவியார் கடவுளிடம் பரிந்து பேசுகிறார். தூய ஆவியைப் பெறுவதன் மூலம்தான் நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும் என  மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,  உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசி மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா! உம் திரிவையை வழிநடத்தும் என்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள் ஆகிய அனைவரும், தம் சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்று பகர,  திருப்பலியில் தன்னை மறைத்து இறைமக்களுக்கு மறு கிறிஸ்துவாகப் பிரதிபலிக்கவும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. படைப்பின் நாயகனே எம் இறைவா! இவ்வுலகம் உம் இவ்வெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், அன்பு, மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனித சமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. குழந்தைகள் விண்ணரசி சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா, எம்குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வார்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்று பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. இளைஞனே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு என்றவரே! எம் இறைவா! இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை, பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ, உம் சொல்லும், செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல, எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி, உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களின் தலைவரே எம் இறைவா! இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடி செபிக்கவும், உரையாடவும், உறவுகளை மேம்படுத்தவும், மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும், குடும்பங்களில் கூடிச் செபிக்கவும், இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும், எம்குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, July 11, 2023

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2023

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23
மத்தேயு 13: 1-23

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு. நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற 'விதை விதைப்பவர் உவமையை இன்று கேட்க அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. கதைகளுக்குள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.
புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. உவமைகள் தானே, கதைகள் தானே என்று ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர் உவமையின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார்.
விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்கு இன்றைய திருப்பலி வழியாகத் துணைப் புரிவாராக!


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

மழையும் பனியும் நிலத்தை நனத்து எல்லோருக்கும் பலன் தராமல் திரும்பப் போவதில்லை. அதைப் போலவே நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிப்பதை கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பாடல்

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9.9-10.11-12.13

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி

நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

 
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை
பவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார். விதைகள் மண்ணில் விழுந்து மடிந்துத் தான் புதிய செடியாக மாறுகிறது. மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது. கடவுள் நமக்குத் தூயஆவியின் வழியாக மீட்பைத் தருகின்றார். நாம் நம்மையே இந்தத் திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்த்துக் கொண்டால் தான், நாம் முழுமையாகப் பலன் தருவோம். இக்கருத்துகளை மனதில் இருத்தி,  இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அருள் வளங்களின் ஊற்றாகிய எம் இறைவா! விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை என்பதை திருஅவையில் உள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. மகத்துவமிக்க எம் இறைவா! இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல்! என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடவும், மக்களின் குறைத்தீர்த்து, நல்லாட்சித் தந்திடவும் வேண்டிய வரத்தைத் தர உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆற்றல் மிக்க எம் இறைவா! எம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களை நல்ல விளைநிலங்களாக மாற்றி நூறுமடங்கு பலன்களை அளிக்குமாறு செய்து தங்கள் குடும்பத்திற்கும், இச்சமுதாயத்திற்கு ஏற்றமிகு நல்வாழ்வையும், இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை விதைப்பவர்களாகவும் இவ்வுலகில் வலம் வரத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF